வாசக மறையுரை (செப்டம்பர் 22)

பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் புதன்கிழமை
I எஸ்ரா 9: 5-9
II லூக்கா 9: 1-6
“நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம்”
வினை விதைத்தவன் வினை அறுப்பான்:
சில ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் ஒரு பிரபல பொறியாளர் இருந்தார். இவருக்கு அதே நகரில் சிறைச்சாலை கட்டும் பணியானது கொடுக்கப்பட்டது. ஏராளமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்திச் சிறைச்சாலையை வேகமாகக் கட்டிமுடித்த இவர், ஒரு குறிப்பிட்ட நாளில் சிறைச்சாலையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இது நடந்து ஒருசில மாதங்கள் கழித்து, சிறைச்சாலையின் ஒருசில பகுதிகள் இடிந்து விழுந்தன. அதை ஆய்வு செய்துபார்த்த அதிகாரிகள், கட்டுமானப் பணியில் ஊழல் நடந்திருப்பதாகத் தெரிவித்தார்கள். இதனால் அந்தச் சிறைச்சாலையைக் கட்டுக்கொடுத்த பொறியாளர் கைது செய்யப்பட்டு, அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அப்பொழுது இவர், ‘நான் கட்டித் தந்த சிறைச்சாலையில் நானே அடைக்கப்படும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேனே!’ என்று தன்னையே நொந்துகொண்டார்.
“ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார்” (உரோ 2: 6) என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப இந்த நிகழ்வில் வரும் பொறியாளர் தான் கட்டிக் கொடுத்த சிறைச்சாலையிலேயே அடைக்கப்பட்டது யாரும் எதிர்பாராதது. இன்றைய முதல் வாசகத்தில், தாங்கள் செய்த பாவத்திற்குத் தண்டனை பெற்றுவிட்டதாக இஸ்ரயேல் மக்கள் சார்பில் குரு எஸ்ரா பாவ அறிக்கை செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேல் மக்கள், கடவுள் கொடுத்த கட்டளையைமீறி நடந்ததால், அடிமைத்தனத்திற்கும் வெட்கக்கேட்டிற்கும் ஒப்புவிக்கப்பட்டார்கள். இந்நிலையில் எருசலேம் திருக்கோயில் மீண்டுமாகக் கட்டி எழுப்பப்பட்ட பிறகு, அங்கே பாவ அறிக்கை செய்கின்ற குரு எஸ்ரா, “எங்கள் பாவங்கள் தலைக்குமேல் பெருகிவிட்டன; எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டுவிட்டன” என்று சொல்லிவிட்டு, “சிறிது காலமாய் என் கடவுளும் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது” என்கிறார்.
எஸ்ராவின் இந்த இறைவேண்டல், தானியேலின் இறைவேண்டலை அல்லது பாவ அறிக்கையை ஒத்திருக்கின்றது (தானி 9: 1-20; நெகே 1: 4-11). மேலும் எஸ்ராவின் இந்தப் பாவ அறிக்கை நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை உணர்த்துகின்றது. ஒன்று, ஒவ்வொருவரும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு பெறுவர் என்பதாகும். இரண்டு, கடவுள் நம்பிக்கைக்குரியவர் (புல 3: 22, 23) என்பதாகும். இஸ்ரயேல் மக்கள் கடவுள் கொடுத்த கட்டளைகளை மீறி நடந்ததால் ஒருபுறம் தண்டிக்கப்பட்டாலும், இன்னொருபுறம் கடவுள் அவர்கள்மீது இரக்கம் கொண்டு, அவர்களைப் பாரசீக மன்னர் சைரஸ் வழியாகப் பாபிலோனிலிருந்து சொந்த நாட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்தார். இவ்வாறு அவர் ஆபிரகாமிற்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார்.
ஆம், கடவுள் பெரிதும் நம்புதற்குரியவர்; அவர் தான் கொடுத்த வாக்குறுதியை ஒருபோதும் மீறாதவர். இத்தகைய கடவுளுக்கு நாம் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, நற்செய்தியில் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரு திருத்தூதர்களைப் போன்று, அவரது பணியைச் செய்ய முன்வருவோம்.
சிந்தனைக்கு:
 கடவுள் தான் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை (உரோ 11: 29).
 எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து தூக்கிவிடுவேன் (விப 32: 33)
 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர் (திபா 103:
இறைவாக்கு:
‘இனிப் பாவம் செய்யாதீர்’ (யோவா 8: 11) என்று இயேசு விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் கூறுவார். நாமும் இனிப் பாவம் செய்யாது கடவுளுக்கேற்ற வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.