இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு.” என திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு அறிவுரை வழங்குகிறார்.

நம் கிருத்துவ இளைஞர்கள் தங்கள் பேச்சிலும், நடத்தையிலும் தூய்மையோடும், ஞானத்தோடும் நடந்து பிறருக்கு முன் மாதிரிகளாகத் திகழ வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 111:10-ல்,
“ஆண்டவர் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

இறையச்சத்தோடு கூடிய இறை பக்திதான் சிறந்தது. ஆண்டவர் மீது கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் என்பதை அனைவரும் உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

ஆண்டவரின் மீது அதிக அளவு அன்பு கொள்வோம். அத்தகைய அளப்பரிய அன்பின் மூலமும், தவறுகளை உணர்வதன் மூலமும் நமது பாவங்களைக் கழுவ வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

தொற்று நோயினால் ஏற்ப்பட்ட ஊரடங்கின் நிமித்தம் பாதிக்கப்பட்ட அனைத்து தொழில்களும் மீண்டும் நன்கு வளர்ச்சியுற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.