வாசக மறையுரை (செப்டம்பர் 14)
பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம்
செவ்வாய்க்கிழமை
திருப்பாடல் 101: 1-2ab, 2cd-3ab, 5-6 (2b)
“மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்”
எது இலஞ்சம்?
“கடைக்குப் சென்று பால் பாக்கெட் வாங்கி வா?” என்று, ஜோசின் அம்மா அவனுடைய கையில் நூறு உரூபாயைத் திணித்தார். அவனோ, “எனக்குச் சாக்லேட் வாங்கிக்கொள்ளப் பணம் கொடுத்தால்தான் கடைக்குப் போவேன்” என்று ஒற்றைக் காலில் இருந்தான். “சரி, நீ கேட்டது போல் பால் பாக்கெட் வாங்கிய பின், மீதமுள்ள காசில் சாக்லேட் வாங்கிக் கொள்” என்று ஜோசின் தாய் அவனிடம் சொன்ன பின்னரே, அவன் கடைக்குச் சென்று பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு வந்தான். கூடவே, மீதிருந்த காசில் தனக்குப் பிடித்த சாக்லேட்டை வாங்கிக் கொண்டான்.
அவன் வீட்டிற்கு வந்த சிறிதுநேரம் கழித்து, அவனுடைய தந்தை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். வழக்கமாக முன்கூட்டியே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிடும் ஜோசின் அப்பா, அன்று சற்றுத் தாமதமாக வந்ததும், அவன் அவரிடம், “அப்பா! இன்று ஏன் இவ்வளவு தாமதம்?” என்றான். “நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு உயரதிகாரிகள் திடீரெனச் சோதனைக்கு வந்துவிட்டார்கள். சோதனையின்போது, என்னுடைய மேலதிகாரி இலஞ்சம் வாங்குகிறார் என்று உறுதியானது. அதனால் அவர் கைது செய்யப்பட்டார். ஆகவேதான் இவ்வளவு தாமதம்” என்றார்.
“இலஞ்சமா, அப்படியென்றால் என்ன அப்பா?” என்று ஜோஸ் அவனுடைய தந்தையிடம் கேள்வி கேட்டபோது அவர், “நாங்கள் பார்க்கின்ற வேலைக்கு அரசாங்கம் ஊதியம் கொடுக்கின்றது. அதையும் தாண்டிப் பெறப்படும் தொகைக்குப் பெயர்தான் இலஞ்சம்” என்றார். அப்பொழுதும் புரியாமல் விழித்த ஜோசிடம் அவனுடைய அம்மா, “உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். அப்படியிருந்தும் நீ நான் கடைக்குப் போகச் சொன்னதற்குச் சாக்லேட் வாங்கக் காசு தந்தால்தான் போவேன் என்று சொன்னாய் அல்லவா! அதற்குப் பெயர்தான் இலஞ்சம்” என்றார். அப்பொழுதுதான் ஜோசிற்குத் தன் தவறு தெரிந்தது. அதன்பிறகு அவன் தன் பெற்றோர் தனக்குச் சொல்லும் வீட்டு வேலையைச் செய்ய ‘இலஞ்சம்’ வாங்கவில்லை
வேடிக்கையான கதையாக இருந்தாலும், இன்று நாம் எப்படியெல்லாமோ தவறு செய்து, பாவத்தில் விழுந்துவிடுகின்றோம் என்பதை உணர்த்துவதாக இருக்கின்றது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “மாசற்ற வழியில் நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேலின் மன்னராக உயர்ந்த தாவீது முதலில் எப்ரோனைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்தார். பின்னர் அவர் எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவர் எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தபோது பாடப்பட்ட பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 101.
ஆண்டவரின் பேழை ஏழு மாதம் பெலிஸ்தியரிடம் இருந்தது (1 சாமு 6: 1). அதன்பிறகு அது அபினதாபின் வீட்டில் இருபது ஆண்டுகள் இருந்தன (1 சாமு 7: 2). பின்னரே அது எருசலேமிற்குக் கொண்டு வரப்பட்டது. ஆண்டவரின் பேழை எருசலேமிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னணியில் தாவீது, “மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கின்றேன்” என்கிறார். தாவீது உரியாவின் மனைவியோடு தவறு செய்திருந்தாலும், அவர் தன் தவற்றை உணர்ந்து, அதன்பின் மாசற்ற வழியில் நடக்க முயற்சி செய்தார். நாமும் தாவீதைப் போன்று மாசற்ற வழியில் நடப்பதில் கருத்தாய் இருப்போம்.
சிந்தனைக்கு:
மாசற்றோர்க்கு மாசற்றவராக நீர் விளங்குகின்றீர் (2 சாமு 22: 26).
தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் அருளும் மீட்பைக் கண்டடைவர் (திபா 50: 23)
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் (மாற் 1: 15)
இறைவாக்கு:
‘நீங்கள் மனம்மாறியவர் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்’ (மத் 3: என்பார் திருமுழுக்கு யோவான். ஆகையால், நாம் மாசற்றவர்களாய் வாழ்வோம், ஒருவேளை நாம் வழி தவறி நடந்தால், மனமாறி இறை வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.