கிறிஸ்தவ சபைகள், மற்றும் யூத பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை உரை
பூடபெஸ்ட் நகரில், கிறிஸ்தவ மத பிரதிநிதிகள் மற்றும், யூத பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையின் சுருக்கம்:
ஒன்றிப்பை நோக்கிய பேராவலின் அடையாளமாக இடம்பெறும் ஒன்றிணைந்த நம் பயணம், கடந்த காலங்களில் அவ்வளவு எளிதாக இல்லையெனினும், துணிவுடனும், நல்மனதுடனும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். இப்பயணத்தை நான் ஆசிர்வதிக்கிறேன். ஒருவர் ஒருவருக்காக ஒன்றிணைந்து செபிப்பதும், ஒருவர் ஒருவருக்குரிய பிறரன்பில் செயல்படுவதும், முழு ஒன்றிப்பை நோக்கிய பாதையில் முக்கியப் படிகள்.
கடந்தகாலங்களில் நம்மைப் பிரித்த சுவர்களை உடைத்து, ஒருவர் ஒருவரை நண்பர்களாக, சகோதரர் சகோதரிகளாக காணும் முயற்சிகளுக்கு, ஆபிரகாமின் விசுவாசத்தில், சகோதார சகோதரிகளாகிய கிறிஸ்தவர்களும் யூதர்களும் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இந்நாட்களில் கொண்டாடப்பட்டுவரும் Rosh Hashanah மற்றும் Yom Kippur விழாக்களுக்கு, என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். பாலைநிலத்தை, வாக்களிக்கப்பட்ட பூமியை நோக்கிய நெடுஞ்சாலையாக மாற்றிய நம் இறைவன், கசப்புணர்வு, பாராமுகம் எனும் பாலைநிலத்திலிருந்து, நம்மை, நட்புறவு எனும் பூமியை நோக்கி வழிநடத்திச் செல்வாராக.
இறைவனைப் பின்தொடருமாறு சிறப்பான விதத்தில் அழைக்கப்படுபவர்கள், தங்களுக்குத் தெரியாத ஓர் இடத்தை நோக்கி பயணிக்க அழைக்கப்படுவதைக் காண்கிறோம். ஆபிரகாமும், அவ்வாறு, தன் வீடு, குடும்பம், மற்றும் சொந்த நாட்டை விட்டுச் செல்லுமாறு அழைக்கப்படுகிறார். இறைவனைப் பின்செல்ல விரும்புபவர்கள், சில விடயங்களை விட்டுவிட்டு வரவேண்டியிருக்கும். கடவுள் வாக்களித்த அமைதியை நோக்கிய பாதையில், நம் கடந்தகால தப்பெண்ணங்கள், நாமே சரி என்ற போக்குகள் ஆகியவற்றை கைவிட வேண்டியிருக்கும்.
பூடபெஸ்ட் நகரின் இரு பகுதிகளை இணைக்கும் பாலத்தை நோக்கும்போது, அது இங்குள்ள மக்களை ஒட்டியிணைப்பதாக இல்லை, மாறாக, இருவரையும் ஒரு சேர தாங்கி நிற்பதாக உள்ளது. நம் விடயத்திலும் இதுதான் இடம்பெறவேண்டும். ஒன்றிப்பை நோக்கிய பாதையில் ஒருவரை ஒருவர் விழுங்க நினைக்கும் சோதனைகளை பெறும்போது, அங்கு பிரிவினைகள்தான் அதிகரிக்குமேயொழிய, கட்டியெழுப்புதல் அல்ல. உடன்பிறந்த உணர்வுநிலைக்கு எதிராகச் செல்லும் அனத்தையும் நாம் தவிர்க்க வேண்டும். ஐரோப்பாவிலும் இன்னும் சில இடங்களிலும் இன்னும் மறைந்திருக்கும் யூத விரோதப்போக்குகளை நினைத்துப் பார்க்கிறேன், இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும்.
சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள இந்த இணைப்புப் பாலத்தின் ஒவ்வொரு வளையமும் நாமே. சங்கிலியிலிருந்து நாம் தனியாக விலகும்போது இணைப்பிற்கு நாம் உதவ முடியாது. பாலம் என்பது இணைக்கிறது. நாம் அனைவரும் தோழமையின் பாலங்களாகச் செயல்படவேண்டும்.
பெரும்பான்மை மதங்களாக இருக்கும் நீங்கள், மதச் சுதந்திரத்திற்கு குரலெழுப்புபவர்களாக இருங்கள். உங்கள் வாய்களிலிருந்து, பிரிவினைகளின் வார்த்தைகளல்ல, மாறாக, அமைதி, மற்றும் திறந்த உள்ளத்தின் வார்த்தைகள் பிறக்கட்டும். இந்த பூடபெஸ்ட் பாலத்தில் கடந்தகால தலைமுறைகள் பல கடந்து சென்றுள்ளதை எண்ணிப்பார்க்கும்போது, நாமும் கடந்த காலங்களில் அனுபவித்த துயர்கள், சித்ரவதைகள், தப்பெண்ணங்கள், இருள் நிறைந்த சுழல்கள் போன்றவை நினைவுக்கு வருகின்றன. இவ்வேளையில் நாம் நம் பொதுவான ஆன்மீக பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்வதையும் நினைவூட்டுகிறேன்.
இருளான வேளைகளில் ஒளியூட்ட முயன்ற இறைவனின் நண்பர்களை, குறிப்பாக யூதக்கவி Miklós Radnóti அவர்களை இந்நேரத்தில் நினைத்துப்பார்க்கிறேன். யூதராக இருந்த ஒரே காரணத்திற்காக கண்முடித்தனமான வெறுப்புக்கு இவர் உள்ளானார். வதைப்போர் முகாமில் சித்ரவதைகளை அடைந்த நிலையிலும், பகைமையின் இருள்மிகுந்த நேரங்களை விசுவாசத்தின் ஒளிகொண்டு ஒளிர்வித்தார். நம் வாழ்வும், வானிலிருந்து கொடுக்கப்படும் நம்பிக்கை, மற்றும் அமைதியின் எதிரொலிகளை வழங்குவதாக இருக்கவேண்டும்.
வதைப்போர் முகாமில், தன் இறுதிக்காலத்தில் Radnóti, அவர்கள், ‘ஒரு காலத்தில் மலராக இருந்த நான், இப்போது வேராக மாறியுள்ளேன்’ என எழுதினார். நாமும் வேராக மாறவேண்டும். நம் பயணங்கள், விதைகளாக இருக்கும்பட்சத்தில், வருங்கால மலர்களைக் குறித்த நம்பிக்கையை வழங்கும் வேராக மாறவேண்டும். உயரத்தை எட்டும் மரங்களுக்கு, வேர்கள் ஆழமாக இருக்கவேண்டும். இறைவனுக்கு செவிமடுத்து நம்மை ஆழமாக வேரூன்றும்போதுதான், நம் உடன் வாழ் மக்கள் ஒருவரையொருவர் அன்புகூர்ந்து வாழ நாம் உதவமுடியும். அமைதியின் வேராகவும், ஒன்றிப்பின் முளையாகவும், நாம் மாறும்போது, உலகின் கண்களில் நாம் நம்பிக்கைக்குரியவர்களாக மாறி, நம்பிக்கையின் மலரை அவர்கள் நம்மில் கண்டுகொள்வர். நான் உங்களுக்கு நன்றியுரைப்பதோடு, உங்களின் பயணத்தில் உறுதியுடன் இருக்குமாறு ஊக்கமளிக்கிறேன்.
Comments are closed.