சமுதாயத்தில் சமத்துவத்திற்கு திருத்தந்தை அழைப்பு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் ஒளியில் நம் நம்பிக்கையை ஆழப்படுத்தும் நோக்கத்தில், அம்மடல் பற்றிய சிந்தனைகளைக் கடந்த பல வாரங்களாக, தன் புதன் மறைக்கல்வியுரைகளில் வழங்கி வருகிறார். ஆரோக்ய அன்னையின் விழா நாளாகிய, செப்டம்பர் 08, இப்புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில், ஆயிரக்கணக்கில் கூடியிருந்த திருப்பயணிகள் மற்றும், ஏனைய மக்களுக்கு திருத்தந்தை வழங்கிய மறைக்கல்வியுரையில், தங்களுக்கு அறிவிக்கப்பட்ட கடவுளின் வெளிப்பாட்டின் புதினங்களை மறக்கக் கூடாது என திருத்தூதர் பவுல், கலாத்தியக் கிறிஸ்தவர்களை வலியுறுத்தி வருகிறார் என்று, இத்தாலிய மொழியில் முதலில் துவக்கினார். திருத்தந்தை இவ்வுரையைத் தொடங்குவதற்கு முன்னர், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் 3ம் பிரிவின் 26 முதல் 29 வரையுள்ள சொற்கள், அராபியம் உட்பட, ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.
சகோதர சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும் ஆபிரகாமின் வழித் தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள். வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள் (கலா.3:26-29).
ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட இப்புதன் மறைக்கல்வியுரையின் சுருக்கம் இதோ.. அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடல் பற்றிய நம் மறைக்கல்வியுரையில், இயேசு கிறிஸ்து மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையால், நம் வாழ்வில் ஏற்படும் புதிய, தீவிர மாற்றங்கள் பற்றிய புனித பவுலின் போதனைகள் குறித்து இன்று சிந்திப்போம். இறைமகன், தன் பிறப்பு, இறப்பு, மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றால், புதிய வாழ்விற்கு நம்மைப் பிறக்கச் செய்து, இறைத்தந்தையோடு நம்மை ஒப்புரவாக்கினார், மற்றும், இறைமகனுக்குரிய மாண்பிலும், நம்மை அவர் பங்குதாரர்களாக ஆக்கினார். நம்பிக்கை, மற்றும் திருமுழுக்கு வழியாக, நம் அகவாழ்வில் மாற்றம் பெற்றுள்ளோம். கிறிஸ்துவை அணிந்து கொண்டு, புதிய படைப்புக்களாகவும் நாம் மாறியுள்ளோம். இந்த புதிய தனித்துவமிக்க அடையாளம், மற்ற அனைத்து இன, சமூக, மற்றும், மத வேறுபாடுகளைப் புறந்தள்ளுகிறது. அப்போது, “கிறிஸ்துவில், யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும், ஆண் என்றும், பெண் என்றும் வேறுபாடு இல்லை (கலா.3:28). கிறிஸ்தவர்களாகிய நாம், திருமுழுக்கில் நமக்கு வழங்கப்பட்ட இந்த புதிய வாழ்வை, பலநேரங்களில் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். இறைத்தந்தையின் மக்கள் என்ற நம் மாண்பை உணர்ந்தவர்களாய், கிறிஸ்துவில் நம் ஒருமையை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு, நம்மிடையேயுள்ள அனைத்துப் பிரிவினைகளையும் களைந்து ஒப்புரவாகும் முயற்சிகளில் ஈடுபடுவோமாக. கடவுளின் மீட்புத்திட்டத்தில் மனிதக் குடும்பம் முழுவதும் ஒன்றிப்புக்கு உறுதியான சான்றுகளாக வாழ்கின்ற நம் அழைப்பையும் வாழ்வோமாக. (காண்க. Gaudium et Spes, 1).
இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகள் அனைவரையும், குறிப்பாக, வரும் வாரங்களில் பள்ளிக்குச் செல்லவிருக்கும் இளையோரை வாழ்த்தினார். அன்பு இளையோரே, இந்த கல்வியாண்டு, உங்கள் எல்லாருக்கும், கல்வியறிவில் வளரவும், நட்புணர்வை ஆழப்படுத்தவும் உதவும் காலமாக அமைவதாக என்று கூறினார். எத்தியோப்பியாவில் கடும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்குத் தேவையான உதவிகளுக்காகவும் விண்ணப்பித்தார். பின்னர், அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவர் மீதும், அவர்களின் குடும்பங்கள் மீதும், இயேசு கிறிஸ்துவின் ஞானமும் மகிழ்வும் நிறைக்கட்டும் என கடவுளை மன்றாடி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.
Comments are closed.