வாசக மறையுரை (செப்டம்பர் 09)
பொதுக்காலம் இருபத்து மூன்றாம் வாரம்
வியாழக்கிழமை
I கொலோசையர் 3: 12-17
II லூக்கா 6: 27-38
“ஆண்டவர் உங்களை மன்னித்து போல நீங்களும் மன்னிக்க வேண்டும்”
தந்தையைக் கொன்றவரை மன்னித்த மகன்:
நியூ கினியாவில் (New Guinea) மறைப்பணி செய்துவந்த அருள்பணியாளர் ஒருவர் அங்கிருந்த மக்களோடு சேர்ந்து ஞாயிறு திருப்பலி நிறைவேற்றத் தயாரானார். அவர் திருப்பலி நிறைவேற்றிய இடம் கோயில் அல்ல. மாறாக, ஒரு மரத்தடி. அதனால் அவர் திருப்பலியில் கலந்துகொள்ள வந்த மக்களை வட்டமாக அமர வைத்துத் திருப்பலி நிறைவேற்றினார். இடையிடையே மக்கள் வந்துகொண்டிருந்தார்கள்.
திருப்பலி தொடங்கி, இறைவார்த்தைப் பகிர்வு நடந்துகொண்டிருந்த நேரத்தில், அருள்பணியாளர் தற்செயலாக ஒருவரைக் கவனித்தார். அவர் பதற்றத்தோடு இருந்தார். ‘இவர் ஏன் பதற்றோடு இருக்கின்றார்?’ என்று நினைத்துக்கொண்டே அருள்பணியாளர் இறைவார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். இறைவார்த்தைப் பகிர்வு முடிந்து, தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. நற்கருணை விருந்திற்குப் பிறகு அருள்பணியாளர், பதற்றத்தோடு இருந்த மனிதரைக் கண்டபோது அவர் சாந்தமாக இருந்தார். இது அருள்பணியாளருக்கு வியப்பைத் தந்தது.
திருப்பலி முடிந்ததும், அருள்பணியாளர் அந்த மனிதரை அழைத்துப் பேசினார். “இறைவார்த்தைப் பகிர்வு நடக்கும்போது ஒருவிதமான பதற்றத்தோடு இருந்த நீங்கள், நற்கருணை விருந்திற்குப் பிறகு மிகவும் சாந்தமாக இருக்கின்றீர்கள்! உண்மையில் என்ன நடந்தது?”. அருள்பணியாளர் இவ்வாறு பேசி முடித்ததும், அந்த மனிதர், “நீங்கள் இறைவார்த்தையைப் பகிர்ந்து கொண்டிருந்த நேரத்தில், என் தந்தையைக் கொன்று தின்ற மனிதன் இங்கு வந்தான். அதனால்தான் எனக்கு அவன்மீது சினம் ஏற்பட்டது, பதற்றமாக இருந்தது; ஆனால், நற்கருணை விருந்தில் கலந்துகொள்கின்றபோது, அவனும் நானும் ஒரே அப்பத்தை உண்டு, ஒரே கிண்ணத்தில்தான் பருக இருக்கின்றோம். அப்படியிருக்கும்போது, அவனை நான் மன்னியாது இருந்தால், அது நற்கருணை விருந்தில் தகுதியற்ற விதமாய்க் கலந்துகொண்ட விதமாய் ஆகிவிடும் என்பதால், அவனை நான் மன்னித்தேன். அதனால்தான் என்னிடத்தில் அப்படியொரு மாற்றம் ஏற்பட்டது” என்றார். இதைக் கேட்டு அருள்பணியாளர் அவரை வெகுவாகப் பாராட்டினார்.
கடவுள் நம்மைத் தாராளமாய் மன்னித்திருக்கின்றார். அதனடிப்படையில், இந்த நிகழ்வில் வருகின்ற மனிதர் தன் தந்தையைக் கொன்றவரை மன்னித்தது நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடமாக இருக்கின்றது. இன்றைய இறைவார்த்தை மன்னிப்பின் மகத்துவத்தைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்” என்ற வரிகளோடு தொடங்கும் இன்றைய முதல் வாசகம், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே போகின்றது. அப்படிப் போகின்ற போதுதான், “ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்” என்று சொல்கின்றது. பவுல் இவ்வார்த்தைகளை தன்னுடைய ஆழமான அனுபவத்திலிருந்துதான் எழுதியிருப்பார் எனச் சொல்லவேண்டும். ஏனெனில், ஒருகாலத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்த அவரைக் கிறிஸ்து மன்னித்து அவரைப் புதியதொரு பணிக்காகத் தேர்ந்தெடுத்தார். அதனாலேயே பவுல் அந்த வார்த்தைகளைச் சொல்கின்றார்.
நற்செய்தியில் இயேசு தம் சீடரிடம் மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள் என்கிறார். இவ்வாறு ஒருவர் மன்னித்து வாழ்கின்றபோது, அவர் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவராகின்றார் என்கிறார் இயேசு. உண்மையில் இரக்கமுள்ள ஒருவரால்தான் மன்னிக்க முடியும். மன்னிப்பவராலேயே இரக்கம் காட்ட முடியும். ஆகையால், நாம் ஆண்டவர் நம்மை மன்னித்தது போன்று ஒருவர் மற்றவரை மன்னித்து வாழ்வோம்.
சிந்தனைக்கு:
தந்தையே இவர்களை மன்னியும் (லூக் 23: 34).
மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர் (எசா 55: 7)
இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும் (யாக் 2: 13).
இறைவாக்கு:
‘தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்’ (நீமொ 10: 12) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால், நாம் விண்ணகத் தந்தையின் அன்பு மக்கள் என்பதை நமது செயலில் வெளிபடுத்துவோம். அதற்கு நாம் ஒருவர் மற்றவரை மன்னித்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.