வாசக மறையுரை (செப்டம்பர் 03)

பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம்
வெள்ளிக்கிழமை
I கொலோசையர் 1: 15-20
II லூக்கா 5: 33-39
அமைதியை நிலைநாட்டத் திருவுளம் கொண்ட கடவுள்
அமைதியை விரும்பும் மக்கள்:
“மக்கள் எதைப் பெரிதும் விரும்புகிறார்கள்?” என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்தன.
ஆம், மக்கள் பெரிதும் விரும்புவது பணமோ, பொருளோ, அதிகாரமோ, வேறு எதுவோ அல்ல. அமைதிதான். அதையே அந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் உலகுக்குப் பறைசாற்றின.
அமைதியை மக்கள் பெரிதும் விரும்புவதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது, ஒவ்வொருவருடைய வாழ்விற்கும்; ஏன், இவ்வுலகிற்கும் அமைதி எந்தளவுக்குத் தேவைப்படுகின்றது என்ற உண்மையை உணர்த்துகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் பவுல், சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டக் கடவுள் திருவுளம் கொண்டார் என்று சொல்வதாக வாசிக்கின்றோம். அது குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும் போர்களும் கலவரங்களும் குழப்பங்களும் பெருகிவிட்டன. இதனால் மக்கள் அமைதியில்லாமல் வாழும் நிலை உருவாகியுள்ளது. இயேசு வாழ்ந்த காலத்திலும் சரி, அதற்கு முன்பும் சரி யூதர்கள், பிற இனத்தார் என்ற பிரிவும், அதனால் ஏற்பட்ட குழப்பங்களும் இருந்தன. இதனால் கடவுள் மக்கள் நடுவில் அமைதியை நிலைநாட்டத் திருவுளம் கொண்டார். அதற்காக அவர் தேர்ந்துகொண்ட கருவிதான் தம் ஒரே மகனும், நம் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து.
யூதருக்கும் பிற இனத்தாருக்கும் இடையே பகைமை என்ற சுவர் இருந்தது. இயேசு தன் உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாக அதைத் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்று படுத்தினார் (எபே 2: 14). இதையேதான் இன்றைய முதல் வாசகத்தில் பவுல், சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டக் கடவுள் திருவுளம் கொண்டார் என்கிறார். இவ்வாறு இயேசு சிலுவையில் தம் இரத்தத்தைச் சிந்தியதன் மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கடவுளின் திருவுளமானது.
இன்றைக்கும் கூட இவ்வுலகிற்கு அமைதி தேவைப்படுகின்றது என்பதாலும், நாம் அனைவரும் கடவுளின் அன்பு மக்கள் என்பதாலும் இவ்வுலகில் நாம் அமைதியை நிலைநாட்டவேண்டிய தேவை இருக்கின்றது. நாம் வாழும் இந்தச் சமூகத்தில், குடும்பத்தில், உலகில் அமைதியை நிலைநாட்டத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 அவர் அமைதியின் அரசர் (எசா 9: 6).
 நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல (யோவா 14: 27).
 உங்களுக்கு அமைதி உரித்தாகுக (லூக் 24: 36)
ஆன்றோர் வாக்கு:
‘அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே’ என்பார் அசிசி நகரப் புனித பிரான்சிஸ். எனவே, நாம் அமைதியின் தூதுவர்களை மாறி, இவ்வுலகில் அமைதியை நிலைநாட்டி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.