திருத்தந்தை: எளிமையான, சூழலியல் வாழ்வு வாழுங்கள்
இயற்கையை பொறுப்புள்ள முறையில் பராமரித்தல், அதை மதித்தல், எளிமையான வாழ்வுமுறை, மற்றும், சிக்கனம் ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு மாற்றத்தைப் பரிந்துரைக்கும் நோக்கத்தில், இப்பூமிக்கோளத்தின் வளங்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம், மற்றும், நம் வாழ்வுமுறை எவ்வாறு உள்ளது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 01, இப்புதனன்று அழைப்புவிடுத்துள்ளார்.
நிலையான வாழ்வுமுறை
செப்டம்பர் 01, இப்புதனன்று, படைப்பின் காலம் துவங்குவதை மையப்படுத்தி, இவ்வாண்டு செப்டம்பர் மாதச் செபக்கருத்தை, ஒரு காணொளி வழியாக விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சூழலியல் பாதிப்பால் மனித சமுதாயம் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகள் குறித்தும், சூழலியல், மற்றும், சமுதாய மேம்பாட்டிற்காக, துணிச்சலுடன் இளையோர் மேற்கொண்டுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
சூழலியல் பிரச்சனைக்கு மனிதர்
இப்பூமிக்கோளம் எதிர்கொள்ளும், சமுதாய, மற்றும், சூழலியல் நெருக்கடிகளைக் களைவதற்கு, உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்பதை வலியுறுத்தி, உலகளவில் அதிகமதிகமாக விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுவருகின்றன என்றுரைத்துள்ள திருத்தந்தை, பல்லுயிர் இழப்பு, காலநிலை மாற்றம், மற்றும், அதிகரித்துவரும் மாசுக்கேடு ஆகியவற்றால், சூழலியல், மும்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்று, கடந்த ஜூன் மாதத்தில் ஐ.நா.வும் எச்சரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை உலகின் சீரழிவு, மனித சமுதாயத்தின் 40 விழுக்காட்டு மக்களை, அதாவது 320 கோடி மக்களை, ஏற்கனவே பாதித்துள்ளது எனவும், நம் சமுதாயங்களைத் துன்பத்திற்குள்ளாக்கும் வகையில், சற்றுச்சூழல் அமைப்பை நாம் பாதித்து வருகின்றோம் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, இக்காரணத்தினால், நம் வாழ்க்கைமுறை பற்றி சிந்தித்துப் பார்க்கவேண்டும் என, தான் அழைப்பு விடுப்பதாகத் கூறியுள்ளார்.
தண்ணீர், மின்சாரம், நெகிழிப்பொருள்கள், மற்றும் ஏனையப் பொருள்களை நாம் பயன்படுத்தும்முறை, நம் உணவு முறை, நுகர்வுத்தன்மை, பயணம் போன்றவை எவ்வாறு இப்பூமியை மாசுபடுத்துகின்றன என்பது பற்றி, சிந்திக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
மாற்றத்தைத் தெரிவுசெய்வோம்
சமுதாய முன்னேற்றம், மற்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு, இளையோர் மேற்கொண்டுள்ள துணிச்சலான நடவடிக்கைகளோடு, கத்தோலிக்கர் அனைவரும் சேர்ந்து, இவ்வுலகை மாற்றுவோம் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காணொளிச் செய்தி வழியாக அழைப்புவிடுத்துள்ளார்.
சுற்றுச்சூழல் சார்ந்த நிலையான வாழ்வுமுறை
சுற்றுச்சூழலைச் சார்ந்த ஓர் எளிய, மற்றும், நிலையான வாழ்க்கை முறையை நாம் அனைவரும் துணிச்சலாகத் தேர்வுசெய்யவும், இதற்காக உறுதியாக அர்ப்பணித்திருக்கும் நம் இளையோரில் மகிழ்ந்திடவும், இந்த செப்டம்பர் மாதத்தில் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை, செப்டம்பர் மாதச் செபக்கருத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments are closed.