வாசக மறையுரை (செப்டம்பர் 02)

பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம்
வியாழக்கிழமை

I கொலோசையர் 1: 9-14
II லூக்கா 5: 1-11

“பின்பற்றினார்கள்”

நீங்கள் தலைவரா? பின்தொடர்பவரா?

எஸ். ஐ. மேக்மில்லர் (S.I. Mcmillen) என்ற பிரபல எழுத்தாளர் தனது, “None of These Diseases” என்ற நூலில் குறிப்பிடுகின்ற நிகழ்வு இது.

ஓர் இளம்பெண் கல்லூரியில் சேர விரும்பினாள். அதனால் அவள் அந்தக் கல்லூரில் சேர்வதான விண்ணப்பப் படிவத்தை வாங்கிப் பூர்த்தி செய்யத் தொடங்கினாள். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டிருந்த பலவிதமான கேள்விகளுக்கு அவள் பதிலளித்துக் கொண்டு வருகையில், “நீங்கள் ஒரு தலைவரா?” என்றொரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மற்ற எல்லாக் கேள்விகளும் படிப்பு தொடர்பாக இருந்தபொழுது, இந்தக் கேள்வி மட்டும் பொதுவாக இருந்ததால் அதற்கு அவள் உண்மையாகப் பதிலளிக்க விரும்பி, “இல்லை” என்று பதிலளித்து, விண்ணப்பப் படிவத்தை உரிய இடத்தில் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.

‘நான் ஒரு தலைவராக இல்லை’ என்ற ஒரே காரணத்திற்காகக் கல்லூரி நிர்வாகம் எனது விண்ணப்பப் படிவத்தை எப்படியும் நிராகரிக்கத்தான் போகிறது’ என்று அவள் நினைத்துக் கொண்டிருகையில், கல்லூரி நிர்வாகத்திடமிருந்து அவளுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை அவள் பிரித்துப் பார்த்தபோது, அவளுடைய கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. ஆம், அந்தக் கடிதத்தில் கீழ்க்காணும் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

“இதுவரைக்கும் எங்களுடைய கல்லூரிக்கு 1452 விண்ணப்பப் படிவங்கள் வந்திருக்கின்றன. இதில் எல்லாரும் ‘நீங்கள் ஒரு தலைவரா?’ என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்திருக்கின்றார்கள். நீங்கள் ஒருவர்தான் இல்லை என்று பதிலளித்திருக்கின்றீர்கள். 1452 தலைவர்கள் இருக்கையில், நீங்கள் ஒருவராவது பின்பற்றுபவராக இருக்கின்றீர்களே! அதை நினைத்து நாங்கள் மகிழ்கின்றோம். உங்களை எங்கள் கல்லூரியில் சேர்த்துக்கொள்வதை நினைத்துப் பெருமையடைகின்றோம். சீக்கிரம் எங்கள் கல்லூரியில் வந்து சேருங்கள்.”

ஆம், எல்லாரும் தலைவர்களாகிவிட்டால், பின்பற்றுவதற்கு அல்லது பின் தொடர்வதற்கு யாருமே இல்லாமல் போய்விடும் அல்லவா! இன்றைய நற்செய்தியின் இறுதியில் பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் இயேசுவைப் பின்பற்றினார்கள் என்று வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

எந்த இடத்தில் வலைவீச வேண்டும், என்ன நேரத்தில் வலை வீசவேண்டும் என்பதெல்லாம் மீனவரான பேதுருவுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் இரவெல்லாம் பாடுபட்டும் அவருக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில்தான் இயேசு அவரிடம், “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்கிறார். பகல்வேளையில் மீன் கடலின் ஆழத்திற்குச் சென்றுவிடும் என்பதால், மீன் கிடைக்காது என்று பேதுருவுக்குத் தெரிந்தாலும், அவர் இயேசுவின் வார்த்தைகளை நம்பி வலையை வீசுகின்றார்; வலை கிழியும் அளவுக்கு அவர் ஏராளமான மீன்களைப் பிடிக்கின்றார்.

அப்பொழுதுதான் பேதுரு தன்னோடு பேசிக்கொண்டிருப்பது சாதாரண மனிதர் அல்லர்; ஆண்டவர் என உணர்கின்றார். பின்னர் இயேசு அவரிடம், “இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவர் ஆவாய்” என்றதும், அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றார்; அவரோடு இருந்தவர்களும் இயேசுவைப் பின்பற்றுகின்றார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் ஒரு காலத்தில் ஊனியல்பின்படி நடந்திருக்கலாம். எப்பொழுது அவர்கள் இயேசுவால் தொடப்பட்டார்களோ, அப்பொழுதே, அவர்கள் அவரைப் பின்பற்றுகின்றார்கள். இவ்வாறு அவர்கள் இன்றைய முதல்வாசகத்தில் பவுல் சொல்வது போன்று, ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து, அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்தார்கள்.

நாம் ஒவ்வொருவரும் மனிதர்களுக்கு உகந்தவற்றை அல்ல, கடவுளுக்கு உகந்தவற்றைச் செய்து, அவருக்கு ஏற்புடையவர்களாக நடக்கவேண்டும். நாம் அவ்வாறு நடக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:

 இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள் (கொலோ 3: 2)

 தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே (1 குறி 16: 25)

 அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள் (மத் 6: 33)

இறைவாக்கு:

‘ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது’ (திபா 34: 10) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் புனித பேதுருவைப் போன்று ஆண்டவரைப் பின்பற்றி, அவருக்கு உகந்தவற்றை நாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.