ஒரோப்பா அன்னை மரியாவின் திருத்தலத்தில் முடிசூட்டு விழா
இத்தாலி நாட்டின் வட பகுதியில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள திருத்தலங்களில் மிகப் பெரியதும், முக்கியமானதுமான ஒரோப்பா (Oropa) அன்னை மரியாவின் திருத்தலத்தில், நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அன்னை மரியாவுக்கு நடத்தப்படும் முடிசூட்டு விழாவை, கர்தினால் ஜியோவான்னி பத்திஸ்தா ரே (Giovanni Battista Re) அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆகஸ்ட் மாதம் இறுதி ஞாயிறன்று நடைபெற்றுவரும் இந்த முடிசூட்டு விழாவை, திருத்தந்தையின் சார்பில், கர்தினால்கள் அவையின் தலைவரான கர்தினால் ரே அவர்கள், ஆகஸ்ட் 29, இஞ்ஞாயிறன்று, தலைமையேற்று நடத்தினார்.
1599ம் ஆண்டு, ஆல்ப்ஸ் மலைப்பகுதியின் பியெல்லா (Biella) நகராட்சிப் பகுதியில் கொள்ளைநோய் பரவிய வேளையில், அந்நோயிலிருந்து தங்களைக் காக்க, ஒரோப்பா திருத்தலத்தில், வணங்கப்பட்டு வந்த கருப்பு அன்னை மரியாவிடம் மக்கள் வேண்டியபோது, கொள்ளை நோய் நீங்கியது என்ற வரலாற்று நிகழ்வை, கர்தினால் ரே அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
இந்த கொள்ளைநோய் நீங்கியதையடுத்து, கருப்பு அன்னை மரியாவுக்கு, முடிசூட்டும் ஒரு முக்கிய நிகழ்வு, 1620ம் ஆண்டு துவக்கப்பட்டு, அந்த முடிசூட்டு விழா, நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்ற வாக்குறுதியை, பியெல்லா நகர மக்கள் கொடுத்தனர்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்ற, ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கருப்பு அன்னை மரியாவுக்கு முடிசூட்டும் விழா தொடர்ந்து நடைபெற்று வந்தது என்பதும், 2020ம் ஆண்டு, ஐந்தாவது முறையாக நடைபெற வேண்டியிருந்த முடிசூட்டு விழா, கோவிட் பெருந்தொற்றின் காரணமாக, ஓராண்டு தள்ளிப்போடப்பட்டு, ஆகஸ்ட் 29, இஞ்ஞாயிறன்று நடைபெற்றது என்பதும், குறிப்பிடத்தக்கன.
அன்னை மரியாவுக்கு முடிசூட்டும் விழா, அந்த அன்னையை பெருமைப்படுத்தும் விழாவாக மட்டும் அமையாமல், அன்னைக்கும், ஆண்டவருக்கும் நம் வாழ்வில் மேலான இடங்களை வழங்கும் ஒரு வாய்ப்பாக அமையவேண்டும் என்று, கர்தினால் ரே அவர்கள், தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.
இத்திருப்பலியின் இறுதியில், திருத்தல வளாகத்தில் மக்கள் கூடியிருக்க, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தின் மேல்மாடியிலிருந்து திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், ஒரோப்பா திருத்தலத்தில் கூடியுள்ள மக்களுக்கு அவர் வழங்கிய சிறப்பான வாழ்த்துக்கள் நேரடியாக ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து, ஒரோப்பா திருத்தல கருப்பு அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு மகுடம் அணிவிக்கப்பட்டது.
Comments are closed.