வாசக மறையுரை (செப்டம்பர் 01)
பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம்
புதன்கிழமை
I கொலோசையர் 1: 1-8
II லூக்கா 4: 38-44
இயேசுவின்மீது நம்பிக்கை, இறைமக்களிடம் அன்பு
நம்பிக்கை, அன்பு என்ற இரண்டு துடுப்புகள்:
ஒருவர் ஆற்றைக் கடந்து மறுகரைக்குப் போக வேண்டியிருந்தது. அதனால் அவர் ஆற்றங்கரையில் ஏதாவது படகு இருக்கின்றதா என்று பார்த்தார். அந்த நேரம் அங்கொரு சிறு படகு (Skiff) இருந்தது. அந்தப் படகை அவர் உன்னிப்பாகப் பார்த்தபோது, அதிலிருந்த இரண்டு துடுப்புகளில் ஒரு துடுப்பில், ‘நம்பிக்கை’ என்றும், இன்னொரு துடுப்பில், ‘செயல்’ என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.
“நீங்கள் ஏன் ஒரு துடுப்பில் நம்பிக்கை என்றும், இன்னொரு துடுப்பில் செயல் என்றும் பொறித்து வைத்திருக்கின்றீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?” என்று வந்தவர் கேட்டதற்கு, படகோட்டி அவருக்கு வார்த்தையால் விளக்கம் அளிக்காமல், முதலில் நம்பிக்கை என்ற துடுப்பை மட்டும் பயன்படுத்திப் படகை ஆற்றுக்குள் செலுத்தினார். ஆற்றில் நீர்வரத்து மிகுதியாக இருந்ததால், அவரால் சீராகப் படகை ஓட்ட முடியவில்லை. இதனால் அவர் நம்பிக்கை என்ற துடுப்பைக் கீழே வைத்துவிட்டுச் செயல் என்று பொறிக்கப்பட்டிருந்த துடுப்பை எடுத்து, படகை ஆற்றுக்குள் செலுத்தினார். அப்பொழுதும் அவரால் படகைச் சீராக ஓட்ட முடியவில்லை.
ஆகையால், அவர் நம்பிக்கை, செயல் ஆகிய இரண்டு துடுப்புகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திப் படகை ஆற்றுக்குள் செலுத்தினார். இப்பொழுது படகு சீராக ஆற்றுக்குள் சென்றது. ஆற்றில் இருந்த மிகுதியான நீர்வரத்துகூட படகை ஒன்றும் செய்ய முடியவில்லை.
வந்தவர் எல்லாவற்றையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் படகோட்டி, “இப்பொழுது புரிகின்றதா நான் ஏன் ஒரு துடுப்பில் நம்பிக்கை என்றும், இன்னொரு துடுப்பில் செயல் என்றும் பொறித்து வைத்திருக்கின்றேன் என்று… ஆற்றுப் பயணத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைப் பயணத்திற்கும் இந்த இரண்டும் தேவைப்படுகின்றன. இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இல்லாமல்போனாலும் வாழ்க்கைப் பயணம் இனிமையாக இருக்காது” என்றார்.
ஆம், நமது வாழ்வு சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கவேண்டுமெனில் நம்பிக்கை, செயல் ஆகிய இரண்டும் தேவைப்படுகின்றன. இதையே இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் எடுத்துக்கூறுகின்றன. அதுகுறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைய நற்செய்தி வாசகம், “இயேசு தொழுகைக் கூடத்தை விட்டு” என்ற வார்த்தைகளோடு தொடங்குகின்றது. இவ்வார்த்தைகள் நமக்கு எதை உணர்த்துகின்றது எனில், இயேசு தொழுகைக்கூடத்தில் கற்பித்ததோடு தன்னுடைய பணியை முடித்துக்கொள்ளவில்லை. அவர் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே சென்று, கடுஞ்காய்ச்சலால் துன்புற்ற சீமோனின் மாமியாரை நலப்படுத்துகின்றார். இன்னும் பல்வேறு பிணியாளர்களை நலப்படுத்துகின்றார் என்பதாகும். ஆம், இயேசு, ஆண்டவரில் நம்பிக்கையும், அயலாரில் அன்பும் கொண்டிருந்தார். அதனால்தான் அவரால் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கவும், நோயாளர்களுக்கு நலமும் அளிக்க முடிந்தது.
இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல், கொலோசை இறைமக்கள், இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையும், இறைமக்களிடம் அன்பும் கொண்டிருந்ததை நினைத்து மகிழ்கின்றார்; அதற்காக அவர் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். இதன்மூலம் நமது வாழ்விற்கு நம்பிக்கை, செயல் அதாவது அன்பு ஆகிய இரண்டும் தேவைப்படுகின்றன என்ற செய்தி சொல்லப்படுகின்றது. நாம் இந்த உண்மையை உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3: 18).
செயல்களில்லாத நம்பிக்கை செத்தது (யாக் 2: 26)
அன்பே தலைசிறந்தது (1 கொரி 13: 13)
ஆன்றோர் வாக்கு:
‘சொல்லில் சிறந்த சொல் செயல்’ என்று பெரியவர்கள் கூறுவார்கள். நாம் செயலில் நமது நம்பிக்கையை வெளிப்படுத்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.