புனித பூமியில், பழமைவாய்ந்த சிலுவை சிதைக்கப்பட்டுள்ளது
புனித பூமியில், திபேரிய ஏரி அருகே அமைந்துள்ள Tabgha என்ற கிராமத்தில், புனித பெனடிக்ட் துறவு மடத்தைச் சேர்ந்தவர்கள் நிறுவியிருந்த, மிகப் பழமைவாய்ந்த சிலுவை ஒன்று, அது அமைக்கப்பட்டிருந்த பீடத்திலிருந்து உடைத்து வீழ்த்தப்பட்டுள்ளது.
திபேரிய ஏரிக்கருகே இயேசு அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்து மக்களுக்கு விருந்தளித்ததாக சொல்லப்படும் மரபை நினைவுறுத்தும் வண்ணம், இந்த பீடமும், சிலுவையும் நிறுவப்பட்டிருந்தன.
அண்மையில், அடையாளம் தெரியாத ஒருவராலோ, அல்லது ஒரு குழுவாலோ, இந்தச் சிலுவை, பீடத்திலிருந்து உடைத்து சாய்க்கப்பட்டுள்ளது என்று, பெனடிக்ட் துறவு மடத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த பீடம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லாத காரணத்தால், இதைச் செய்தவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை என்று இஸ்ரேல் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்நிகழ்வையொட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள புனித பூமி கத்தோலிக்க அமைப்புகள், வெறுப்பினால் தூண்டப்பட்ட இந்த வன்முறையாளர்களின் உள்ளத்தை இறைவன் வழிநடத்த வேண்டும் என்ற வேண்டுதலை பதிவு செய்துள்ளன.
மேலும், இஸ்ரேல் அரசு, புனித பூமியில் உள்ள மத நிறுவனங்கள், மற்றும் கல்விக் கூடங்கள், ஆகிய அனைத்தும் இணைந்து, இளையோர் நடுவே, அனைத்து மதங்களையும் மதிக்கும் மனநிலையை உருவாக்கவேண்டும் என்று இவ்வமைப்புக்கள் விண்ணப்பித்துள்ளன.
Tabgha கிராமத்தில் அமைந்துள்ள அப்பம் பலுகப்பட்ட புதுமையின் திருத்தலம், 2015ம் ஆண்டு, இரு யூத இளைஞர்களால் தீயிட்டுக் கொளுத்தபப்ட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
Comments are closed.