இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள் முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாரா.” என புனித பவுல் கூறுவதை காண்கிறோம்.
ஆண்டவருக்கு உகந்த பிள்ளைகளாக இவ்வுலகில் வாழ்ந்து, இறுதித் தீர்ப்பு நாளில் இயேசுவை ஆவலோடும், துணிவோடும் எதிர் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
பாவம் செய்யாது, கடவுளின் கட்டளைகளை ஒழுங்காகக் கடைபிடித்தலே சிறந்த ஆயத்தமாதலாகும் என்பதை உணர்ந்து அதன்படி செயலாற்றிட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
தனது பிள்ளைகளுக்கு பள்ளி, ,கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் உள்ள பெற்றோர்களுக்காக செபிப்போம். ஆண்டவர் அவர்களுக்கு நல்வழியினைக் காட்டிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
தொற்று நோயினால் ஏற்ப்பட்ட ஊரடங்கின் நிமித்தம் பாதிக்கப்பட்ட அனைத்து தொழில்களும் மீண்டும் நன்கு வளர்ச்சியுற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, வறுமையின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுக்க முடியாமல் வீட்டில் இருக்கும் அனைத்து குழந்தைகளின் எதிர்காலத்திற்காக குழந்தை இயேசுவிடம் வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.