கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாக திருவழிபாடு மாறவேண்டும்
கடந்த ஆண்டு நடைபெறவிருந்த திருவழிபாட்டு கூட்டம், கோவிட் பெருந்தொற்றின் விளைவாக, ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது, அது, பங்கேற்பாளர்களின் நேரடி சந்திப்புடன் நடைபெறுவது குறித்து தான் மகிழ்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய திருவழிபாட்டு கருத்தரங்கு ஒன்றுக்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.
71வது தேசிய திருவழிபாட்டு கருத்தரங்கு
அருள்பணியாளர்களும், பொதுநிலையினரும் இணைந்து, இத்தாலியின் Cremona என்ற நகரில் ஆகஸ்ட் 23, இத்திங்களன்று துவங்கியுள்ள 71வது தேசிய திருவழிபாட்டு கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
“இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ: குழுமங்கள், திருவழிபாடுகள் மற்றும் நிலப்பரப்புகள்” என்ற மையக்கருத்துடன், ஆகஸ்ட் 23, இத்திங்களன்று துவங்கியுள்ள இக்கருத்தரங்கு, ஆகஸ்ட் 26, வியாழனன்று நிறைவுபெறுகிறது.
குழுவாக கூடிவருவது, கிறிஸ்தவ மரபு
இயேசுவின் பெயரால் குழுவாக கூடிவருவது, கிறிஸ்தவ வரலாற்றின் ஆரம்ப காலம் முதல் பின்பற்றப்படும் ஓர் அழகிய மரபு என்றும், இந்தக் குழுமங்களே கிறிஸ்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தின என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொற்றின் காரணமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக, குழுமமாகக் கூடிவரும் மரபு நிறுத்திவைக்கப்பட்டது என்பதை, இச்செய்தியில், வருத்தத்துடன் குறிப்பிட்ட திருத்தந்தை, இருப்பினும், அருள்பணியாளர்களும், பொதுநிலையினரும், படைப்பாற்றல் திறனுடன், கணணி வழியே திருவழிபாடுகளை நிறைவேற்றிவந்துள்ளது மனதுக்கு நிறைவைத்தருகிறது என்று கூறியுள்ளார்.
திருவழிபாடுகள் என்ற உணவைப் பெறுவதற்கு மக்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், கடந்த ஓராண்டின் முழு அடைப்பு காலங்களிலும், கிறிஸ்தவர்கள், பிறரன்பு பணிகளில், குறிப்பாக, அதிக துன்பங்களைச் சந்தித்தவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் தங்களையே ஈடுபடுத்திக்கொண்டது பாராட்டுக்குரியது என்று, தன் செய்தியில் எடுத்துரைத்தார், திருத்தந்தை.
திருவழிபாடுகளில் மக்களின் பங்கேற்பு குறைவு
பெருந்தொற்று காலத்திற்கு முன்னதாகவே, திருவழிபாடுகளில் மக்களின் பங்கேற்பு, குறிப்பாக, இளையோரின் பங்கேற்பு குறைந்துவந்துள்ளது என்பதை வருத்தத்துடன் இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாக திருவழிபாடு மாறுவதை உறுதிசெய்வது, அனைவரும் இணைந்து மேற்கொள்ளவேண்டிய முக்கியக் கடமை என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
திருவழிபாடுகளில் மறுமலர்ச்சியைக் கொணரும் நோக்கத்துடன், 71வது ஆண்டுக்கூட்டத்தில் பங்கேற்று வரும் உறுப்பினர்களுக்கு இறையாசீரை வழங்கி, திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்
Comments are closed.