வாசக மறையுரை (ஆகஸ்ட் 26)
பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் வாரம் வியாழக்கிழமை
I 1 தெசலோனிக்கர் 3: 7-13
II மத்தேயு 24: 42-51
குற்றமின்றித் தூய்மையாய் இருங்கள்!
கடன்வாங்கி விட்டு இழுத்தடித்தல்:
‘ஒரு மாதத்தில் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்று சொல்லிக் கதிரவன் தனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவரிடம் ஒரு இலட்ச உரூபாயைக் கடனாக வாங்கி இருந்தான். ஒரு மாதம் கடந்தது, ஆனாலும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரமால், ‘இந்தா தருகிறேன்’ ‘அந்தா தருகிறேன்’ என்று கதிரவன் பெரியவரை இழுத்தடித்தான். பெரியவரும் கதிரவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் பொறுமையாக இருந்தார்.
பின்னொரு நாளில் கதிரவன் பெரியவரிடம் ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி, இந்த நாளில் பணத்தைக் கட்டாயம் தந்துவிடுகின்றேன் என்று சத்தியம் செய்தான். அந்த நாளும் வந்தது. ஆனாலும், அன்று கதிரவன் பெரியவனிடம் வாங்கிய பணத்தைத் தராமல் ஒளிந்து கொண்டான். இதனால் பொறுமையிழந்த பெரியவர், கதிரவனிடமிருந்து எப்படியாவது பணத்தை வாங்குவது என முடிவு செய்தார்.
ஒருநாள் அதிகாலை வேளையில் பெரியவர் கதிரவனின் வீட்டைப் போய்த் தட்டினார். ‘இந்த நேரத்தில் யார் நம்முடைய வீட்டைத் தட்டுவது?’ என்று கதிரவன் சன்னல் வழியாகப் பார்த்தபொழுது, அங்கே பெரியவர் நின்றுகொண்டிருந்தார். ‘இன்றைக்குப் பெரியவரிடம் வசமாக மாட்டிக்கொண்டோம்’ என்று நினைத்த கதிரவன், தன் மகனைக் கூப்பிட்டு, “வெளியே நிற்பவரிடம் ‘அப்பா வீட்டில் இல்லை’ என்று சொல்” என்றான். கதிரவனின் மகனும் கதவைத் திறந்து வெளியே சென்று, “அப்பா வீட்டில் இல்லை என்று என் அப்பா உங்களிடம் சொல்லச் சொன்னார்” என்றார். இதனால் சீற்றம் அடைந்த பெரியவர், கதிரவனின் வீட்டிற்குள் சென்று, அவனைப் பிடித்துக் காவல்நிலையத்தில் நிறுத்தினார். காவலர்கள், பெரியவரிடம் வாங்கிய பணத்தைக் கதிரவன் திருப்பிக் கொடுத்த பின்னரே அவனை வெளியே விட்டார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற கதிரவன், பெரியவரிடம் வாங்கிய பணத்தைச் சொன்ன தேதியில் திருப்திக் கொடுத்திருந்தால், அவன் பெரியவருக்கு அஞ்சி இருக்கவும் தேவையில்லை; காவல் நிலையத்திற்குச் சென்றிருக்கவும் தேவையில்லை. அவன் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல், ஏமாற்றியதால்தான் காவல்நிலையம் வரை அவன் செல்லும்படியாக ஆனது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை கடவுள்முன் குற்றமின்றித் தூய்மையாக இருக்க அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பவுலால் தெசலோனிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட திமொத்தி, தெசலோனிக்க மக்கள் ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்ற செய்தியோடு வருகின்றார். இதைத் தொடர்ந்து பவுல் தெசலோனிக்கருக்கு எழுதும் வார்த்தைகள்தான் இன்று நாம் முதல் வாசகமாக வாசிக்கக்கேட்ட இறைவார்த்தைப் பகுதி. இதில் பவுல், தெசலோனிக்கர் ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கைக்காக, அவருக்கு நன்றி சொல்வதுடன், அவர்கள் ஆண்டவர்முன் குற்றமின்றித் தூயோராய் இருக்க, இயேசு கிறிஸ்து உறுதிப்படுத்துவாராக என்கிறார்.
நற்செய்தியில் இயேசு, ஆண்டவரின் வருகை எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம்; அதனால் விழிப்பாக இருங்கள் என்கிறார். விழிப்பாய் இருங்கள் என்று இயேசு சொல்வதை, ஆண்டவரில் நம்பிக்கையோடு இருங்கள் என்று சொல்லலாம். ஏனெனில், ஒருசிலர் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளாமல், நம்பிக்கை கொண்டோரை எள்ளி நகையாடினர் (2 பேது 3: 4). ஆகையால், நாம் ஆண்டவரை எதிர்கொள்ளும் வகையில் அவரில் நம்பிக்கை வைத்துக் குற்றமற்றவராக, தூயோராக வாழ்வோம்.
சிந்தனைக்கு:
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் (மத் 5: .
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர் (திபா 119: 1).
ஆண்டவரின் நாள் வருகிறது; ஆம், அது வந்துவிட்டது (யோவே 2: 1)
இறைவாக்கு:
‘ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால், ஆயுள் நீடிக்கும்’ (நீமொ 19: 23) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் ஆண்டவருக்கு அஞ்சி, குற்றமற்றவராக, தூயோராக வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.