வாசக மறையுரை (ஆகஸ்ட் 21)

பொதுக்காலம் இருபதாம் வாரம் சனிக்கிழமை

I ரூத்து 2: 1-3, 8-11, 4: 13-17
II மத்தேயு 23: 1-12

சொன்னார்கள்; செய்தார்களா?

செயல்வீரர் லெனின்:

இரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்த ஒரு முடிதிருத்தும் கடைக்கும் முன்பாக நீண்டதொரு வரிசை இருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அன்று ஞாயிற்றுக்கிழமை. இரண்டு, அந்த முடித்திருத்தும் கடையில், நன்றாக முடிதிருத்தம் செய்வார்கள். நீண்ட வரிசையில், தான் யாரென்று மக்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன் முகத்தை ஒரு செய்தித்தாளால் மறைத்துக்கொண்டு, அப்போது இரஷ்யவின் அதிபதிராக இருந்த லெனின் நின்றார். சிறிது நேரத்திற்கு யாரும் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இதனால் வரிசை சீராகச் சென்றது.

சிறிது நேரத்தில் லெனினுக்குப் பின்னால் இருந்த பெரியவர் ஒருவர், அவர் யார் என்று அடையாளம் கண்டு கொண்டார். இதனால் அவர், “ஒரு நாட்டின் அதிபர் எங்களோடு வரிசையில் நிற்பதா, எல்லாருக்கும் முன்பாகச் சென்று, முடிவெட்டிக்கொண்டு போகலாமே! உங்களுக்கு எவ்வளவு வேலை இருக்கும்?” என்றார். பெரியவர் இவ்வாறு பேசியதும் பக்கத்திலிருந்தவர்கள் லெனினைச் சூழ்ந்துகொண்டு, அவர் சொன்னதை வழிமொழிந்தார்கள்.

அப்பொழுது லெனின் அவர்களிடம், “இந்நாட்டின் அதிபரான எனக்குத்தான் வேலை இருக்கின்றது; உங்களுக்கு வேலை இல்லை என்பதுபோல் பேசுவது தவறு. அடுத்ததாக, பதவியில், படிப்பில், பொருளாதரத்தில் ஒருவர் பெரியவராக இருந்தாலும், வரிசையில் நின்றுதான் தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று நாம் முடிவெடுத்திருக்கின்றோம். அப்படியிருக்கையில் அந்த முடிவை நானே மீறினால் அது சரியாக இருக்குமா? அதனால்தான் நான் வரிசையில் நின்று முடிவெட்ட இருக்கின்றேன்” என்றார். இதைக் கேட்டு அங்கிருந்த யாவரும் வியந்து போயினர்.

எல்லாருக்கும் சமநீதி என்றொரு முடிவெடுத்து, அதற்கேற்றாற்போல் செயல்பட்ட லெனின் உண்மையில் ஒரு செயல்வீரர்தான். இன்றைய இறைவார்த்தை நாம் சொல்வீரர்களாக அல்ல, செயல்வீரர்களாக இருக்கவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாய் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் முரண்பாட்டு மூட்டைகளாக இருந்தார்கள். எனவேதான் இயேசு மக்களிடம், அவர்கள் சொல்வது போன்று செய்யுங்கள்; செய்வது போன்று செய்யாதீர்கள் என்கிறார்.

இதற்கு முற்றிலும் மாறாக, ஆண்டவரின் கட்டளைப்படி நடந்த ஒருவரைக் குறித்து இன்றைய முதல்வாசகம் கூறுகின்றது. அவர் வேறு யாருமல்லர், போவாசுதான். எலிமலேக்கின் உறவினரான போவாசு, தன்னுடைய வயிலில் சிந்திய கதிர்களைப் பொறுக்க வரும் மோவாபு நாட்டைச் சார்ந்த ரூத்தைக் கருணையோடு நோக்குகின்றார்; பின்னர் அவரை மணந்து கொள்கின்றார். வயலில் சிந்திய கதிர்களைப் பொறுக்காமல் அவற்றை எளியவருக்கும் அந்நியருக்கும் விட வேண்டும் என்பது ஆண்டவருடைய கட்டளை (லேவி 23: 22). போவாசு தன் வயலில் சிந்திய கதிர்களை ரூத்து போன்றவர்கள் பொறுக்கவிடுவது அவர் ஆண்டவரிடம் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.

ஆம், நாம் பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்று சொல்வீரர்களாக இல்லாமல், போவாசைப் போன்று செயல்வீரர்களாக இருப்போம்.

சிந்தனைக்கு:

 இயேசு சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார் (லூக் 24: 19).

 தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர் (மத் 7: 21)

 நாம் சொல்வீரர்களாக அல்லது செயல்வீரர்களாக? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘ஆண்டவரின் நியமங்களுகேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவர்’ (லேவி 18: 5) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் ஆண்டவரின் வார்த்தையின் படி செயல்பட்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.