மக்களிடையே நட்புறவு’ கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி

கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தால், ‘மக்களிடையே நட்புறவு’ என்ற கூட்டம், இத்தாலியின் ரிமினியில், சென்ற ஆண்டு, நேரடியாக நடைபெற இயலாமல், கண்ணிவழி நடைபெற்றதையடுத்து, இவ்வாண்டு, மீண்டும், இக்கூட்டம் நேரடியாக நடைபெறுவது மகிழ்வளிக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டத்தில் கலந்துகொள்வோருக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 20, இவ்வெள்ளி முதல், 25, வருகிற புதன் முடிய நடைபெறும் ‘மக்களிடையே நட்புறவு’ கூட்டத்திற்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியை, ரிமினியின் ஆயர், பிரான்செஸ்க்கோ லம்பியாசி (Francesco Lambiasi) அவர்கள், இவ்வியாழனன்று நடைபெறும் ஆரம்ப அமர்வில் வாசிக்கிறார்.

“நான் என்று சொல்வதற்குத் துணிவு”

‘மக்களிடையே நட்புறவு’ என்ற கருத்துடன் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இக்கூட்டம், இவ்வாண்டு நடத்தும் 42 ஆண்டு கூட்டத்திற்கு, “நான் என்று சொல்வதற்குத் துணிவு” என்ற மையக்கருத்து தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு, திருத்தந்தை, தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

பெருந்தொற்று உருவாக்கிய சமுதாய தூரம், தனித்திருத்தல் போன்ற செயல்பாடுகள், நாம் யார், எதற்காக வாழ்கிறோம் என்ற அடிப்படை கேள்விகளை நமக்குள் எழுப்பியுள்ளன என்று தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, இந்த சமுதாய கட்டுப்பாடுகள் பலருக்கு அவர்களைப்பற்றிய தெளிவையும் தந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

‘நான்’ என்பது, மதிப்பு மிக்க ஒரு கொடை

ஒவ்வொருவருக்கும் இறைவன் வழங்கியுள்ள ‘நான்’ என்ற சுய அடையாளம், மதிப்பு மிக்க ஒரு கொடை என்றும், அந்தக் கொடையை நம்மில் நாமே உணர்வதுபோல, அடுத்தவரிடம் உணர்வதும், அதற்கு ஏற்றாற்போல் நட்புறவுடன் பழகுவதும் அவசியம் என்றும் திருத்தந்தை தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் அவரவரின் ‘நான்’ என்ற கொடையை உணர்வதற்கும், அதே கொடையை அடுத்தவரும், இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் பெற்றுள்ளார் என்பதை உணர்வதற்கும், இவ்வாண்டு ஒருவரையொருவர் நேரில் சந்திக்கும் இக்கூட்டம் உதவுவதாக என்ற வாழ்த்துக்களை, திருத்தந்தையின் பெயரால், கர்தினால் பரோலின் அவர்கள் வழங்கியுள்ளார்.

1980ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் இறுதி வாரத்தில், இத்தாலியின் ரிமினி நகரில் ‘மக்களிடையே நட்புறவு’ என்ற பெயரில் நடைபெறும் கூட்டம், கடந்த ஆண்டு, தன் 41வது ஆண்டு கூட்டத்தை, இணையவழி மெய் நிகர் கூட்டமாக நடத்தியது.

உலக மனிதாபிமான நாள் – டுவிட்டர்

மேலும், ஆகஸ்ட் 19 இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும் உலக மனிதாபிமான நாளையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பருவநிலையில் உருவாகியுள்ள நெருக்கடிநிலையால், வறியோர், கொடுமைகள் அடைகின்றனர் என்பதை எடுத்துரைத்து, அவர்களுக்கு உரிய நீதி கிடைக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.

“பருவநிலை நெருக்கடி நிலை, மிகக் கடினமான மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்குகிறது. பேரிடர்களை விளைவிக்கும் காலநிலை மாற்ற நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படுவது வறியோரே. நீதி, அமைதி மற்றும் ஒருங்கிணைப்பு கொண்ட மனித குடும்பத்தை உருவாக்குவது அவசியம்” என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன

Comments are closed.