இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் விருந்திற்கு முதலில் அழைக்கப்பட்டவர்கள் யூதர்கள். அவர்கள் கடவுளின் அழைப்பைப் புறக்கணித்ததால், கி.பி 70 ஆம் ஆண்டு மிகப்பெரிய அழிவிற்கு உள்ளானார்கள். பின்னர் அழைக்கப்பட்டவர்கள் பிறஇனத்து மக்கள், அவர்களில்கூட ஒருவர் திருமண ஆடை இல்லாமல் இருந்ததால், அவர் அரசரின் சினத்திற்கு உள்ளாகின்றார். ஆகையால், நாம் யாராக இருந்தாலும், கடவுளின் அழைப்புக்கு முதன்மையான இடம் கொடுத்து, அவருக்கு உகந்தவராய் வாழ இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
‘அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்’ (மத் 6: 33) என்பார் இயேசு. எனவே, நாம் ஆண்டவருக்கு ஏற்புடையவற்றை நாடி, இறையருளை நிறைவாகப் பெற இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
தான் எழுதிய ஆன்மீக புத்தங்கள் வாயிலாக பலரை பக்தி மார்க்கத்திற்கு திசை திருப்பியவரும், இன்றைய புனிதருமான ஜான் யூட்ஸிடமிருந்து ஆழ்ந்த இயேசு, மரியனையின் திருஇருதய பக்தியை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
தொற்று நோயினால் ஏற்ப்பட்ட ஊரடங்கின் நிமித்தம் பாதிக்கப்பட்ட அனைத்து தொழில்களும் மீண்டும் நன்கு வளர்ச்சியுற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, வறுமையின் காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுக்க முடியாமல் வீட்டில் இருக்கும் அனைத்து குழந்தைகளின் எதிர்காலத்திற்காக குழந்தை இயேசுவிடம் வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.