வாசக மறையுரை (ஆகஸ்ட் 19)

பொதுக்காலம் இருபதாம் வாரம் வியாழக்கிழமை
I நீதித் தலைவர்கள் 11: 29-39a
II மத்தேயு 22: 1-14
யாருக்கு முதன்மையான இடம் கொடுக்கின்றோம்?
மனிதரைவிட மானைப் பெரிதென நினைத்தல்:
ஒரு சமயம் இளைஞர்கள் சிலர் மான்வேட்டைக்குச் சென்றனர். அவ்வாறு அவர்கள் சென்றபோது, இருவர் இருவராகப் பிரிந்து சென்றனர்.
அந்த நாள் முடிவில், கையில் மானுடன் எல்லாரும் இருவர் இருவராக வந்தபோது, டாம் மட்டும் தனியாக, அதே நேரத்தில் கையில் ஒரு மானுடன் வந்தான். இதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனவர்கள், தனியாக வந்த டாமிடம், “உன்னுடன் வந்த ஜானை எங்கே?” என்று கேட்டார்கள். டாமோ அவர்களிடம், “ஜானும் நானும் மானைத் தேடித் போய்க்கொண்டிருக்கையில் திடீரென அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட, வலி தாங்காமல் அவன் சரிந்து கீழே விழுந்தான். அந்தே நேரம் பார்த்து மான் ஒன்று அந்தப் பக்கமாய் ஓடியது. இதனால் ஜானை எப்போது வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம், இந்த மானைப் பார்க்க முடியாது என்று நான் அதன் பின்னாலேயே ஓடி, அதைப் பிடித்துகொண்டு வந்துவிட்டேன். இந்நேரம் ஜான், அவன் விழுந்த இடத்தில்தான் கிடப்பான் என்று நினைக்கிறேன்” என்றான். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
தன் நண்பன் ஜான் பெரிதில்லை; மான்தான் பெரிதென அதன்பின்னால் போன டாமைப் போன்றுதான் இன்று நாம், வாழ்க்கையில் எதற்கு முதன்மையான இடம் கொடுக்க வேண்டுமோ, அதற்கு முதன்மையான இடம் கொடுக்காமல் வாழ்ந்து கொண்டிருகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம் கடவுளின் அழைப்பிற்கு முதன்மையான இடம் கொடுக்காத மனிதர்களைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
அரசர் ஏற்பாடு செய்யும் விருந்தில் கலந்துகொள்வது எவ்வளவு பெரிய பேறு! அத்தகைய பேறானது சிலருக்கு, அதாவது யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அதைத்தட்டிக் கழித்துவிட்டுத் தங்களுக்கு விருப்பமானதைச் செய்தார்கள். அதன்பிறகு விருந்தில் கலந்து கொள்வதற்கு எல்லாருக்கும் அழைப்புக் கொடுக்கப்படுகின்றது. அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் திருமண ஆடையின்றி விருந்திற்கு வருகின்றார். இதனால் அவர் அரசரின் சினத்திற்கு உள்ளாகின்றார்.
இந்த உவமையில் வருகின்ற அரசர் கொடுத்த விருந்திற்கு முதலில் அழைக்கப்பட்டவர்கள் யூதர்கள். அவர்கள் கடவுளின் அழைப்பைப் புறக்கணித்ததால், கி.பி 70 ஆம் ஆண்டு மிகப்பெரிய அழிவுக்கு உள்ளானார்கள். பின்னர் அழைக்கப்பட்டவர்கள் பிறஇனத்து மக்கள், அவர்களில்கூட ஒருவர் திருமண ஆடை இல்லாமல் இருந்ததால், அவர் அரசரின் சினத்திற்கு உள்ளாகின்றார். ஆகையால், நாம் யாராக இருந்தாலும், கடவுளின் அழைப்புக்கு முதன்மையான இடம் கொடுத்து, அவருக்கு உகந்தவராய் வாழவேண்டும்!
சிந்தனைக்கு:
 ஆண்டவரைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள் (ஆமோ 5: 4).
 ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது (திபா 34: 10)
 நாம் யாருக்கும் முதன்மையான இடம் தந்து வாழ்கின்றோம்? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்’ (மத் 6: 33) என்பார் இயேசு. எனவே, நாம் ஆண்டவருக்கு ஏற்புடையவற்றை நாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.