ஆகஸ்ட் 17 : நற்செய்தி வாசகம்

செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 23-30
அக்காலத்தில்
இயேசு தம் சீடரிடம், “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.
சீடர்கள் இதைக் கேட்டு, “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.
அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.
அதற்கு இயேசு, “புதுப் படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நில புலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.
ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
“செல்வர் விண்ணரசில் புகுவது கடினம்”
பொதுக்காலம் இருபதாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I நீதித் தலைவர்கள் 6: 11-24
II மத்தேயு 19: 23- 30
“செல்வர் விண்ணரசில் புகுவது கடினம்”
நிம்மதியை இழந்த தொழிலாளி:
கொஞ்சமாகச் சம்பாதித்தாலும், மூன்றுவேளையும் வயிறாரச் சாப்பிட்டு நிம்மதியாகத் தூங்கி எழுந்தார் அந்தத் தொழிலாளி. இடையிடையே இவருக்குக் ‘கைநிறையப் பணமிருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக வாழலாம்!’ என்ற எண்ணமானது வந்து வந்து போனது. ஒருநாள் இவர் தன் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். திடீரென்று மிகவும் களைப்பாக உணர்ந்த இவர், வழியில் இருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் படுத்து, அப்படியே தூங்கிவிட்டார்.
இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு கனவான், ‘சாப்பிடுவதற்கு எதுவுமில்லாமல்தான் இவர் இப்படிச் சுருண்டு படுத்துக்கிடக்கின்றார்’ என்று நினைத்துக் கொண்டு, இவரைத் தட்டி எழுப்பித், தன்னிடம் இருந்த ஒரு தங்கக் கட்டியைக் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு பசியாறி, உன்னுடைய பிற தேவைகளையும் பார்த்துக் கொள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றார்.
தங்கக்கட்டியைக் கண்டதும், இவருக்குத் தலை கால் புரியவில்லை. ‘இதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் வாங்கிலாம்’ என்று இவர் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டார். இவருக்குள் பல விதமான எண்ணங்கள் வந்தன. அதே நேரத்தில், ‘என்னிடம் தங்கக்காட்டி இருப்பது யாருக்காவது தெரிந்ததால், அவர்கள் இதை என்னிடமிருந்து பறித்துக்கொண்டு, என்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வது?’ என்ற எண்ணமும் வந்தது. இதனால் நிம்மதியையும் தூக்கத்தையும் தொலைத்தார்.
‘இத்தனை நாள்களும் நிம்மதியாகத் தூங்கிய என்னால், இந்தத் தங்கக் கட்டி வந்தபிறகு நிம்மதியாகத் தூங்க முடியவில்லை எனில், பிரச்சனை இந்தத் தங்கக் கட்டியில்தான் இருக்கின்றது’ என்று முடிவு செய்தவராய், மறுநாள் இவர் தங்கக்கட்டியை அந்தக் கனவானிடம் திரும்பிக் கொடுத்துவிட்டு, இருப்பதே போதும் என்று நிம்மதியாகத் தூங்கி எழுந்தார்.
ஆம், மிகுதியான செல்வம் இருந்தால் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் மிகுதியான செல்வத்தால் நிம்மதியும்; ஏன், வாழ்வும் பறிபோகும் என்பதே இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
மிகுதியான செல்வம் படைத்த செல்வர் கடவுளின் ஆசி பெற்றவர் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு, அதிலும் குறிப்பாக, இயேசுவின் சீடர்களுக்கு, இயேசு சொன்ன, “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம்” என்ற வார்த்தைகள் அதிர்ச்சியாக இருந்திருக்கும். செல்வர் விண்ணரசில் புகுவது ஏன் கடினம் எனில், அவர்கள் பணமே எல்லாம் என்று கடவுளையும் நினைப்பதில்லை; சக மனிதரையும் மதிப்பதில்லை. இதனாலேயே அவர்களால் விண்ணரசில் புகுவது கடினமாகிவிடுகின்றது.
ஒருவர் கடவுளையும், அவரது சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரையும் அன்பு செய்கின்றபொழுதுதான் அவரால் விண்ணரசில் புகமுடியும் (மத் 25: 31-46) செல்வர் இந்த இரண்டு செயலையும் செய்யாததால், அவர்கள் விண்ணரசில் புகுவது கடினமாகிவிடுகின்றது. முதல்வாசகத்தில் ஆண்டவரின் தூதர் கிதியோனிடம், “ஆண்டவர் உன்னோடு இருக்கின்றார்” என்கிறார். காரணம் அவர் தன் இனத்தாரையும், கடவுளையும் அன்பு செய்தார். நாமும் பணத்திற்கு முதன்மையான இடம்கொடாமல் கடவுளுக்கு முதன்மையான இடம் கொடுத்து, அவரது மக்களை அன்பு செய்வோம்.
சிந்தனைக்கு:
 மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது (லூக் 12: 15).
 பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் (1 திமொ 6: 10)
 பணத்தில் அல்ல, பரமனில் பற்றுக் கொண்டு வாழ்வோம்.
இறைவாக்கு:
‘என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நாம் பெறும் ஒப்பற்ற செல்வம்’ (பிலி 3: 😎 என்பார் புனித பவுல். ஆகையால், ஒப்பற்ற செல்வமாக இயேசுவைப் பற்றிக்கொண்டு, அவர் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.