வாசக மறையுரை (ஆகஸ்ட் 14)
பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரம் சனிக்கிழமை
I யோசுவா 24: 14-29
II மத்தேயு 19: 13-15
“விண்ணரசு இத்தகையோருக்கே உரியது”
குழந்தைகளின் உலகமே தனி:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பிறந்த வரலாற்று ஆசிரியர் சார்லஸ் பிரான்சிஸ் ஆடம்ஸ். இவர் அமெரிக்காவின் ஆறாவது அதிபரான ஜான் குயின்சி ஆடம்ஸ் என்பரின் மகன். ஒவ்வொருநாளும் தவறாமல் நாள்குறிப்பு (Dairy) எழுதும் பழக்கம்கொண்ட இவர், ஒருநாள் தன்னுடைய மகன் பரூக் ஆடம்சோடு மீன்பிடிக்கச் சென்றதை நாள்குறிப்பில் எழுதி இருக்கின்றார். அதை எழுதுவிட்டு, அதற்குக் கீழ் இவர், “என் மகனோடு மீன்பிடிக்கச் சென்று இந்த நாளை நான் வீணடித்துவிட்டேன்” என்ற குறிப்பையும் எழுதி வைத்திருக்கின்றார்.
இதே நாளை இவருடைய மகனான பரூக் ஆடம்சும் தன் நாள்குறிப்பில் எழுதி இருக்கின்றார்; ஆனால், முற்றிலும் வித்தியாசமாக! பரூக் ஆடம்ஸ் தன் நாள்குறிப்பில் எழுதிய வார்த்தைகள் இதோ: “ஒருநாள் நான் என்னுடைய தந்தையோடு அருகில் இருந்த குளத்தில் மீன் பிடிக்கச் சென்றேன். என் தந்தையோடு நான் மீன் பிடித்த இந்த நாளை மறக்கவே முடியாது. அப்படியோர்
அருமையான
நாள் இது.”
இருவரது நாள்குறிப்புகளையும் பார்க்கின்றபோது, ஓர் உண்மை நமக்கு நன்றாகத் தெரிகின்றது. அது என்னவெனில், தங்களது பெற்றோரையே உலகம் என்று நம்பி வாழும் குழந்தைகளுக்கு, அவர்களது பெற்றோர் அவர்களோடு செலவிடும் ஒவ்வொரு வினாடியும் விலைமதிக்கப் பெறாதவை என்பதுதான். ஆம், பெற்றோர் அல்லது பெரியவர்களையே நம்பி வாழும் குழந்தைகள் விண்ணரசுக்கு உரியவர்கள் ஆகின்றார்கள் என்கிறார் இயேசு. அது எப்படி என்று சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நாம் வாழும் இவ்வுலகில் வலுக்குறைந்தவர்களாக, பல்வேறு விதமான கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகிறவர்கள் யாரென்று கேட்டால், குழந்தைகள் என்று மிக எளிதாகச் சொல்லிவிடலாம். அந்தளவுக்கு அவர்கள் வீடுகளிலும், பொதுவெளியிலும் கொடுமைகளை அனுபவிக்கின்றார்கள். இது இயேசுவின் காலத்திலும் இருந்தது என்பதுதான் வேதனை கலந்த உண்மை.
கணக்கெடுப்பில் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், இயேசுவை அணுக முடியாதவாறு ஒதுக்கப்படுகின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்கிறார். விண்ணரசு குழந்தை மனம் கொண்டவர்களுக்கு உரியது என்று இயேசு சொல்லக் காரணம், தூய்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அவர்கள் பெரியவர்களை, ஆண்டவரையே நம்பி இருப்பதால்தான். ஆண்டவரையே நம்பி இருக்கும் அவர்களை அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும் (திபா 32: 10). அதனால் அவர்கள் விண்ணரசுக்கு உரியவர்கள் ஆகின்றார்கள்.
இன்றைய முதல்வாசகத்தில், “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” என்று சொல்லும் யோசுவாவைக் குறித்து வாசிக்கின்றோம். இவர் இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்களை வழிபட்டபோதும், ஆண்டவரை நம்பி, அவருக்கு மட்டுமே ஊழியம் செய்ததால், வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டில் நுழைந்தார். ஆகையால், ஒரு குழந்தையைப் போன்று ஆண்டவரையே நம்பியிருந்த யோசுவாவைப் போன்று நாமும் ஆண்டவரையே நம்பியிருந்து, விண்ணரசை உரித்தாக்குவோம்.
சிந்தனைக்கு:
அவர்கள் மாசற்றோரின் இரத்தத்தால் இவ்விடத்தை நிரப்பினர் (எரே 19: 4).
புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாய் இருங்கள் (1 பேது 2: 2).
திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணையெனக் கடவுளையே நம்பி இருக்கும் குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு நாம் இடறலாய் இருக்கவேண்டாம்.
இறைவார்த்தை:
‘தவறாகக் கற்பிக்கப்படும் குழந்தைகள் யாவரும் வாழ்வை இழந்தவர்களுக்கு ஒப்பானவர்கள்’ என்பார் ஜான் எப். கென்னடி. ஆகையால், நாம் குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்றுக்கொடுத்து, அவர்களை நல்வழியில் நடத்தி, நாமும் நல்வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.