இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய முதல் வாசகத்தில், உடலும், மனமும் சோர்ந்திருந்த எலியாவிற்கு ஆண்டவர் உணவு அளித்து, 40 நாட்கள் பாலை நிலத்தில் நடக்கும் அளவிற்கு அன்று அவரை வலிமையுற செய்தார் எனக் கண்டோம்.
இன்று உடலும், மனமும் சோர்ந்திருந்த நம் ஒவ்வொருவரையும், தம் திருமகனின் திருவுடலை உணவாக அளித்து நம்மை வலிமையுற செய்த நம் தந்தைக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி இரண்டாம் வாசகத்தில்,
“கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.” என புனித பவுல் கூறுகிறார்.
கடவுளின் தூய ஆவியாருக்கு துயரம் வருவித்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே!” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நிலை வாழ்வளிக்கும் இயேசுவின் திருவுடலை, முழுத் திருப்பலியில் பங்கெடுத்து அனுதினமும் உட்க்கொள்ள நாம் உறுதி ஏற்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இறைப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள் மற்றும் கன்னியர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
அடக்கத் திருப்பலி இல்லாமல் தொற்று காலத்தில் மரித்த அனைத்து ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.