ஆகஸ்ட் 7 : நற்செய்தி வாசகம்

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 14-20
அக்காலத்தில்
இயேசுவும் சீடர்களும் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் இயேசுவை அணுகி அவர் முன் முழந்தாள்படியிட்டு, “ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை” என்றார். அதற்கு இயேசு, “நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்று கூறினார். கொண்டு வந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான். பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
“உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால்…”
பொதுக்காலம் பதினெட்டாம் வாரம் சனிக்கிழமை?
I இணைச்சட்டம் 6: 4-13
II மத்தேயு 17: 14-20
“உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால்…”
மொண்டி ராபர்ட்சின் நம்பிக்கை:
அமெரிக்காவைச் சார்ந்த மொண்டி ராபர்ட்ஸ் (Monty Roberts) என்ற சிறுவனின் தந்தை குதிரைகளுக்குப் பயிற்சி கொடுப்பவராக இருந்தால், அவனால் ஒரு பள்ளிக்கூடத்தில்கூட நிலையாய் இருந்து படிக்க முடியவில்லை. அவனுடைய தந்தை எங்கே தங்கி குதிரைகளுக்குப் பயிற்சி கொடுக்கின்றாரோ, அங்கே தங்கி, அதற்குப் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான் அவன். இதனால் அவனுடைய படிப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
ஒருநாள் அவன் படித்துக்கொண்டிருந்த பள்ளியில், அவனுடைய வகுப்பு ஆசிரியர் மாணவர்களிடம், “உங்களுடைய எதிர்கால இலட்சியம் என்ன என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்” என்றார். இதைத் தொடர்ந்து, தங்களுடைய எதிற்காக இலட்சியம் என்ன என்பதைப் பற்றிய ஒரு கட்டுரையை எல்லா மாணவர்களும் எழுதிக்கொடுக்க, மொண்டி ராபர்ட்ஸ், தன்னுடைய எதிர்கால இலட்சியமாக ஒரு குதிரைப் பண்ணை அமைப்பது பற்றி கட்டுரை எழுதிக்கொடுத்தன். ஆசிரியர் அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, “சாதாரண குடும்பத்தைச் சார்ந்த உன்னால் குதிரைப் பண்ணை எல்லாம் அமைக்க முடியாது. அதற்கு நிறையப் பணம் வேண்டும்; அதனால் நேரம் எடுத்துக்கொண்டு நடைமுறைக்குச் சாத்தியப்படுவது மாதிரியான ஒரு கட்டுரை எழுதத் தா” என்றார்.
ஆசிரியர் கொடுத்த தேர்வுத்தாளோடு வீட்டிற்கு வந்த மொண்டி ராபர்ட்ஸ் தன் தந்தையிடம் அதைக் காட்டி, “என்னுடைய எதிர்கால இலட்சியம் குறித்து, இதைவிட நடைமுறைக்குச் சாத்தியப்படுவது மாதிரியான ஒரு கட்டுரையை எழுத முடியுமா?” என்றான். அதற்கு அவனுடைய தந்தை, “இது உன்னுடைய வாழ்க்கை தொடர்பானது. இதில் நான் எதுவும் கருத்துச் சொல்லமுடியாது” என்று அமைதியானர். இதன்பிறகு மொண்டி ராபர்ட்ஸ் தேர்வுத் தாளில் எந்தவொரு திருத்தமும் செய்யாமல், அதை அப்படியே ஆசிரியரிடம் போய்க் கொடுத்தான். ஆசிரியர் அதைப் பார்த்துவிட்டு, “உன்னால் குதிரைப் பண்ணையை அமைக்கவே முடியாது” என்று சொல்லிவிட்டுத் தேர்வுத் தாளில் Fail என்பதைக் குறிக்கும் வகையில் F என்று எழுதினர்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. இப்பொழுது மொண்டி ராபர்ட்ஸ் நன்றாக வளர்த்திருந்தான். மட்டுமல்லாமல், ‘உன்னால் குதிரைப் பண்ணை அமைக்கவே முடியாது’ என்று சொன்ன ஆசிரியரின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, இருநூறு ஏக்கர் பரப்பளவில் ஒரு குதிரைப் பண்ணையை அமைத்து, அங்கே தனது ஆசிரியரையும அழைத்து, அவரை வியப்பில் திக்குமுக்காட வைத்தான்.
ஆம், மொண்டி ராபர்ட்ஸ், தான் ஏழையாக இருந்தாலும், தன்னால் எதிர்காலத்தில் குதிரைப் பண்ணை அமைக்க முடியும் என்று உறுதியாக நம்பினா(ன்)ர். அவர் நம்பிய வண்ணமே நடந்தது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் இயேசு தம் சீடரிடம், “உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால்…..” என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு தன் சீடர்களுக்குப் பேய்களை ஓட்டவும், பிணிகளைப் போக்கவும் அதிகாரம் அளித்திருந்தார் (மத் 10: 6-8). அவர்களும் அதைக்கொண்டு, தொடக்கத்தில் பேய்களை ஓட்டிப் பிணிகளைப் போக்கினர் (மாற் 6: 30); ஆனால், ஒரு கட்டத்தில், அவர்களால் பேயை ஓட்ட முடியாமல் போனது. இது குறித்து அவர்கள் இயேசுவிடம் கேட்டபோது, அவர் அவர்களிடம், “உங்கள் நம்பிக்கைக் குறைவு” என்கிறார். தொடர்ந்து அவர் அவர்களிடம், “உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால், நீங்கள் இம்மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து, அங்குப் போ” எனக் கூறினால், அது பெயர் போகும்” என்கிறார்.
இயேசு தன் சீடர்களிடம் கூறும் இவ்வார்த்தைகள் மூலம், நமது வாழ்வில் நம்பிக்கை என்பது எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆகையால், நாம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்து, வல்ல செயல்களைச் செய்வோம்.
சிந்தனைக்கு:
 நேர்மையுடயவரோ தன் நம்பிக்கையினால் வாழ்வடைவர் (அப 2: 4).
 நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள் (எபி 11: 33)
 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய் (திபா 37: 3).
இறைவாக்கு:
‘ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்’ (நீமொ 16: 20) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால், நாம் ஆண்டவரை நம்பி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.