திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 365வது மறைக்கல்வி உரை
துவங்கியுள்ள புதன் மறைக்கல்வி உரை, அவர் தன் தலைமைப்பணிக் காலத்தில் வழங்கும் 365வது மறைக்கல்வி உரை என்று, வத்திக்கானின் அதிகாரப்பூர்வ, vatican.va இணையதளம் அறிவித்துள்ளது.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் தன தலைமைப்பணியைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த எட்டரை ஆண்டுகளில் வழங்கிய புதன் மறைக்கல்வி உரைகள், மற்றும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் சனிக்கிழமைகளிலும் வழங்கிய மறைக்கல்வி உரைகள் ஆகியவற்றின் இணைந்த எண்ணிக்கை, 365 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4, இப்புதனன்று வழங்கப்பட்ட மறைக்கல்வி உரையையும் சேர்த்து, இதுவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 17 தலைப்புக்களில், 365 மறைக்கல்வி உரைகளை வழங்கியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தன் மறைக்கல்வி உரைகளை வழங்க ஆரம்பித்தவேளையில், அவருக்கு முன்னதாக திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், நம்பிக்கையின் ஆண்டை மையப்படுத்தி வழங்கிவந்த கிறிஸ்தவ நம்பிக்கை அறிக்கையை மையப்படுத்திய மறைக்கல்வி உரைகளை, தொடர்ந்து வழங்கினார்.
அந்தத் தொடரையடுத்து, அருளடையாளங்கள், தூய ஆவியாரின் கொடைகள், திருஅவை, குடும்பம், இரக்கத்தின் யூபிலி உரைகள், கிறிஸ்தவ நம்பிக்கை, திருப்பலி, பத்துக்கட்டளைகள், ‘விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்ற இறைவேண்டல், திருத்தூதர் பணிகள், இயேசு வழங்கிய பேறுபெற்றோர் கூற்றுகள், இறைவேண்டல் ஆகியவை, திருத்தந்தை வழங்கிய மறைக்கல்வித தொடர்களின் மையக்கருத்துக்களாக அமைந்தன.
கோவிட்-19 பெருந்தொற்று உலகெங்கும் பரவியிருந்த காலத்தில், பெரும்பாலான நேரங்களில், தன் நூலக அறையிலிருந்து புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘உலகை குணமாக்குதல்’ என்ற தலைப்பில், தன் புதன் மறைக்கல்வி உரைகளை பகிர்ந்துவந்தார்.
இறுதியாக, இந்த கோடை விடுமுறைக்கு முன்னதாக, திருத்தூதரான பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜூன் மாதம் துவக்கிய மறைக்கல்வி உரைகள் தொடரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும், ஆகஸ்ட் 4, இப்புதனன்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் தொடர்ந்தார்.
Comments are closed.