இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளாமல், அவநம்பிக்கையால் அச்சம் அடைந்த மக்களுக்கு ஆண்டவர் தண்டனை அளித்ததைக் கண்டோம்.
அதைப்போல் நாம் விசுவாசத்தில் தளர்வுற்ற தருணங்களில், அவநம்பிக்கையால் தேவையற்ற அச்சம் அடைந்ததற்காக மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில்,
“ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார். இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார்.” என வாசித்தோம்.
நாம் வேண்டுவது காலங்கள் கடந்தும் கேட்கப்படாமல் இருக்கும் நேரங்களில், நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சியை இன்றைய நற்செய்தியில் கூறப்பட்ட கனானியப் பெண்ணிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்று நம் தாய் திருச்சபையானது குருக்கள் மற்றும் பங்குத் தந்தைகளின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் நினைவு நாளைக் கொண்டாடுகிறது.
குருக்கள் ஆன்மீக வாழ்வில் தளர்வுற்ற தருணங்களில் புனித மரிய வியான்னியின் வாழ்க்கையை நினைத்து நம்பிக்கைக் கொண்டு புத்துணர்ச்சியுடன் இறைப்பணியினை தொடர்ந்து ஆற்றிட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
அனைவருக்கும் அச்சத்தை உண்டாக்கி இருக்கும் கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை மக்களை அதிகம் பாதிக்காத வகையில் இருக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
சீனாவில் கடும் வெள்ளத்தினால் அவதியுரும் லட்சக்கணக்கான மக்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.