வாசக மறையுரை (ஆகஸ்ட் 05)

பொதுக்காலம் பதினெட்டாம் வாரம் வியாழக்கிழமை
I எண்ணிக்கை 20: 1-13
II மத்தேயு 16: 13-23
“என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்”
கடவுளால் எனக்கு வெளிப்படுத்தப்படுகின்றது:
சாதாரண ஒரு கால் பந்தாட்ட வீரராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, உலகப் புகழ்பெற்ற கோல்ப் வீரராகத் தன் வாழ்வை நிறைவுசெய்தவர், அமெரிக்காவைச் சார்ந்த சார்லி போஸ்வெல் (Charley Boswel 1916-1995). இவர் இரண்டாம் உலகப் போரின்போது, தன்னோடு நாட்டிற்காகப் போரிட்ட சக வீரரைக் காப்பாற்ற முயன்றபொழுது, குண்டு வெடித்துத் தன் இரு கண்களையும் இழந்தவர்.
போரில் தன் இரு கண்களை இழந்தபோதும் ஒரு மூலையில் முடங்கிப் போய்விடாமல், தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு உதவும் பொருட்டுக் கோல்ப் விளையாட்டில் கலந்துகொண்டு தேசிய அளவிலும், உலக அளவிலும் பதக்கங்களையும் பரிசுதொகையையும் வாங்கிக் குவித்தார் இவர். ‘பார்வையற்றவராய் இருந்துகொண்டு எப்படி இவரால் கோல்ப் போட்டிகளில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய முடிகின்றது?’ என்று பலரும் வியந்தார்கள். இது தொடர்பாக ஒருமுறை செய்தியாளர் ஒருவர் இவரிடம், “பார்வையற்ற உங்களால் எப்படி இலக்கை நோக்கிப் பந்தை அடிக்க முடிகின்றது?” என்று கேட்டதற்கு, இவர் அவரிடம், “எல்லாவற்றையும் நான் பெரிதும் நம்புகின்ற கடவுள் வெளிப்படுத்துகின்றார்” என்று தீர்க்கமாய்ப் பதிலளித்தார்.
ஆம், பார்வையற்றவராய் இருந்துகொண்டு, சார்லி போஸ்வெல்லால் கோல்ப் விளையாட்டில் பல சாதனைகளைச் செய்ய முடிந்ததற்குக் காரணம், அவர் பெரிதும் நம்பியிருந்த ஆண்டவருடைய வெளிப்பாடுதான். இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் இயேசு, “…விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்” என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ என்று இயேசு சீடர்களிடம் கேட்ட கேள்விக்குப் பேதுரு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று சொன்னபிறகுதான் இயேசு, “…எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக, விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்’ என்கிறார். இயேசு பேதுருவிடம் சொன்ன இவ்வார்த்தைகளை, “ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” (மத் 11: 26) என்ற வார்த்தைகளோடு இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. குழந்தைகள் அல்லது குழந்தை உள்ளம் கொண்டவர்கள் கடவுளை மட்டுமே நம்பியிருக்கக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் கடவுள் தன்னை வெளிப்படுத்துவதில் வியப்பு இல்லை. பேதுருவும் ஒருவகையில் குழந்தை(உள்ளம் கொண்டவர்)தான்; ஆண்டவரையே நம்பி இருந்தவர்தான். அதனால் ஆண்டவர் அவருக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார்.
இன்றைய முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரில் நம்பிக்கை வைக்காமல், தண்ணீர் வேண்டும் என்று அவருக்கு எதிராகவும், மோசேக்கும் எதிராக முறுமுறுக்கின்றார்கள். இதனால் அவர்கள் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டில் நுழையமுடியாமல் போகின்றார்கள். மோசேயும் ஆண்டவர் சொன்னது போன்று செய்யாமல் பாறையை இரு முறை தட்டியதால், அவரும் கானான் நாட்டிற்குள் நுழைய முடியாமலேயே போய்விடுகின்றது. ஆகையால், நாம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அப்பொழுதுதான் ஆண்டவர் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார்.
சிந்தனைக்கு:
 நம்பிக்கையென்பது கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி11: 1).
 ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர் (எரே 17: 7)
 ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம் தம்மை வெளிப்படுத்தியுள்ளார் (திபா 9: 16).
இறைவாக்கு:
‘யூதாவில் கடவுள் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார்’ (திபா 76: 1) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், தன்னை நம்பி வாழ்வோருக்குத் தன்னை வெளிப்படுத்தும் ஆண்டவரின் திருவுளத்தின்படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.