#வாசக மறையுரை (ஜூலை 31)

பொதுக்காலம் பதினேழாம் வாரம் சனிக்கிழமை
I லேவியர் 25: 1, 8-17
II மத்தேயு 14: 1-12
“கடவுளுக்கு அஞ்சி நடங்கள்”
கடவுளுக்கு அஞ்சிய மன்னர்:
முன்பொரு காலத்தில் அங்கேரி நாட்டில் ஒரு மன்னர் இருந்தார். கிறிஸ்தவரான இவர் ஒருநாள் தன் தம்பியிடம், “நான் மிகப்பெரிய பாவி. அதனால், நான் கடவுளைச் சந்திக்கும்பொழுது, எனக்கு என்ன ஆகுமோ என்று அச்சமாக இருக்கின்றது” என்று வேதனையோடு சொன்னார். இதற்கு இவருடைய தம்பி, ‘இதற்கெல்லாமா அஞ்சுவது?’ என்பது போல் கேலிசெய்து சிரித்துவிட்டுத் தன்னுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார். இது மன்னருக்கு பெரிய அவமானமாய் இருந்தது.
அங்கேரி நாட்டின் வழக்கப்படி, அந்நாட்டில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் ஒருவருடைய வீட்டிற்கு முன்பாக எக்காளத்தை எடுத்து முழங்கிவிட்டால் – அது எந்த நேரமாக இருந்தாலும் – அவர் மன்னரைப் போய்ப் பார்க்க வேண்டும். மன்னரும் தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவர் மூலம், அவருக்குத் தண்டனை வழங்குவார். தன் தம்பி தான் சொன்னதைச் சரியாகக் கேளாமல், தன்னை மிகவும் அவமானப்படுத்திவிட்டுச் சென்றதை நினைத்து வேதனைப்பட்ட மன்னர், தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவரை அழைத்து, அவரிடம் தன்னுடைய தம்பியின் வீட்டிற்கு முன்பு, எக்காளம் முழங்கச் சொல்ல, அவரும் நள்ளிரவில் மன்னரின் தம்பியினுடைய வீட்டிற்கு முன்பாகப் போய் எக்காளம் முழங்கினார். இதனால் பதறிப்போன மன்னரின் தம்பி, ‘நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று என் வீட்டின் முன்பாக எக்காளம் முழங்கப்படுகின்றது?’ என்று அஞ்சியவாறு மன்னருக்கு முன்பு போய் நின்றான்.
அப்பொழுது மன்னர் அவனிடம் “எக்காளம் முழங்கிய சத்தம் கேட்டு, அங்கேரி நாட்டு மன்னரான எனக்கு முன்பாக வந்து நிற்பதற்கே நீ இவ்வளவு அஞ்சுகின்றாயே! மன்னருக்கெல்லாம் மன்னரான ஆண்டவருக்கு முன்பு பாவியாகிய நான் நிற்பதற்கு எவ்வளவு அஞ்சவேண்டும்?’ என்றார். அப்பொழுதுதான் மன்னரின் தம்பிக்குத் தன் தவறு புரிந்தது. இதன்பிறகு மன்னரின் தம்பி ஓர் அருள்பணியாளரை அழைத்து வர, அவரிடம் மன்னர் நல்லதோர் ஒப்புரவு அருளடையாளத்தை மேற்கொண்டு, அச்சத்தைத் தவிர்த்து, ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்ந்து வந்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் அங்கேரி நாட்டு மன்னர் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தார்; ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, நற்செய்தி வாசகம் ஆண்டவருக்கு அஞ்சி வாழாத ஒரு மன்னனைக் குறித்துக் கூறுகின்றது. அந்த மன்னன் யார், நாம் ஏன் ஆண்டவருக்கு அஞ்சி வாழவேண்டும் என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
லேவியர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், “கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!’ என்ற சொற்றொடரோடு முடிகின்றது. நற்செய்தி வாசகமோ, கடவுளுக்கு அஞ்சி வாழாத ஏரோது மன்னனைக் குறித்துக் கூறுகின்றது.
இந்த ஏரோது மன்னன் தன் சகோதரன் பிலிப்பின் மனைவி ஏரோதியாவோடு வாழ்ந்தான். ஏரோதியா வேறு யாரும் கிடையாது. அவள் பெரிய ஏரோதுவின் நான்கு மகன்களில் ஒருவரான அரிஸ்டோபுளுஸ் (Aristobulus) என்பவனின் மகள். அப்படியானால், ஒருவகையில் மகள் என்ற உறவுமுறையில் வரும் ஏரோதியாவோடு வாழ்ந்து வந்த பிலிப்பின் மனைவியைத்தான் தனக்கு மனைவியாக்கிக் கொள்கின்றான் ஏரோது. மேலும் ஏரோதியாவோடு ஏரோது வாழ்ந்ததன் மூலம் ஏரோது தன் மகளோடு ‘வாழ்ந்தவன்’ ஆனான். இது மிகப்பெரிய தவறு (லேவி 18: 16) என்பதால்தான் திருமுழுக்கு யோவான், அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார். ஆனால், அவனோ அவரைக் கொன்றுபோடுகின்றான். முடிவில், ஆண்டவருக்கு அஞ்சி வாழாத ஏரோதிற்குக் கொடிய சாவு வந்தது என்று வரலாறு கூறுகின்றது. ஆகையால், நாம் ஏரோதைப் போன்று வாழாமல், ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, உண்மையோடும் நேரிய உள்ளத்தோடும் நடங்கள் (2 குறி 19: 9).
 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதை வெட்டி விடுங்கள் (மாற் 9: 44).
 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர் (திபா 128: 1)
இறைவாக்கு:
‘ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்’ (நீமொ 19: 23) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால், நாம் ஆண்டவருக்கு அஞ்சி, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.