இளையோருக்கும் முதியோருக்கும் இடையே உடன்படிக்கை

திருஅவையில் முதல்முறையாகச் சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும் முதியோர் நாளையொட்டி, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில், வாழ்வைப் பகிர்வதில், இளையோருக்கும் முதியோருக்கும் இடையே நிலவவேண்டிய உடன்படிக்கையைக் குறித்து திருத்தந்தை எழுதியிருந்த மறையுரை வாசிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையிலிருந்து திரும்பி, இன்னும் ஓய்வெடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியில் நேரடியாக கலந்துகொள்ளமுடியாத நிலையில், தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த மறையுரையை, பேராயர் Rino Fisichella அவர்கள் வழியாக வழங்கினார்.

ஜூலை 25, ஞாயிற்றுக்கிழமையின் நற்செய்தி எடுத்துரைக்கும், அப்பம் பலுகுதல் புதுமையைக் குறித்து தன் கருத்துக்களை தன் மறையுரையில் பகிர்ந்திருந்த திருத்தந்தை, பசியாக இருந்த கூட்டத்தை இயேசு நோக்கியது, அவர்களோடு பகிர்ந்தது, மீதியானவைகளை திரட்டச்சொன்னது, என்ற மூன்று கருத்துக்களை மையமாக வைத்து, விளக்கங்களை வழங்கியிருந்தார்.

தனக்குச் செவிமடுக்க வந்திருந்த கூட்டத்தின் பசியை காணும் இயேசு, அவர்கள் ஒவ்வொருவரின் தேவையை நிறைவு செய்ய ஆவல் கொள்வதுபோல், நம் தாத்தாக்கள் மற்றும் பாட்டிகள், நம்மை உற்றுநோக்கி, நம்மை அன்புகூர்ந்ததன் வழியாக, நாம் வளர்ந்துள்ளோம், அதுபோல், நம் அன்பு, மற்றும் அக்கறையின் பதில்மொழி இருக்கவேண்டும் என, மறையுரையில் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு சிறுவன், தன்னிடம் இருந்ததை, பிறருடன் பகிர முன்வந்ததே, இப்புதுமையின் முக்கியப் பகுதியாக, உள்ளது என, தன் மறையுரையில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரும், முதியோரும், தங்களிடையே, வாழ்வின் கொடைகளை பகிர முன்வரும் உடன்படிக்கையுடன் செயல்படவில்லையெனில், வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் தெரிவித்தார்.

Comments are closed.