#வாசக மறையுரை (ஜூலை 29)
I விடுதலைப் பயணம் 40: 16-21, 34- 36
II மத்தேயு 13: 47-52
“தீச்சூளையில் தள்ளுவர்”
நான் அணையா நெருப்பில் தள்ளப்படவேண்டுமா?
ஸ்மிர்னாவில் (Smyrna) ஆயராக இருந்தவர் போலிக்கார்பு. இவர் ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கைக்காகக் கைது செய்யப்பட்டு, உரோமை அதிகாரிகள் முன்பு நிறுத்தப்பட்டார்.
“நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, அவரைச் சபிக்கவேண்டும்” என்று உரோமை அதிகாரிகள் இவரை வற்புறுத்தியபோது, போலிக்கார்பு அவர்களிடம், “நான் எப்படிக் கிறிஸ்துவை மறுத்தலிப்பேன், எனக்கு இப்பொழுது எண்பத்து ஆறு வயது ஆகின்றது. இத்தனை ஆண்டுகளும் அவர் எனக்கு நல்லதையே செய்திருக்கின்றார். அப்படிப்பட்டவரை நான் எப்படி மறுதலித்துவிட்டுச் சபிக்க முடியும்?” என்று உறுதியாய்ச் சொன்னார்.
இதைக் கேட்டுச் சீற்றமடைந்த உரோமை அதிகாரி, “நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு, அவரைச் சபிக்க மாட்டாயா…? அப்படியானால் நாங்கள் உன்னை எரிகின்ற நெருப்பில் தூக்கி எறிந்து கொன்றுபோடுவோம்” என்று மிரட்டினார்கள். “ஒரு மணிநேரத்திற்கும் குறைவான நேரம் எரிந்து அணையும் நெருப்பைக் கண்டு அஞ்சி, இப்பொழுது நான் கிறிஸ்துவை மறுதலித்தேன் எனில், தீயவர்களுக்கு உரிய அணையா நெருப்பில் நான் தூக்கி வீசப்படுவேன். அப்படிப்பட்ட ஒரு செயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று சொல்லிப் போலிக்கார்பு, ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையைத் துணிவோடு வெளிப்படுத்த, அவர்கள் அவரை நெருப்பில் தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.
ஆம், ஆண்டவரை மறுத்து வாழ்வோர் அல்லது அவருக்கு எதிராகச் செயல்படுவோர் அணையா நெருப்பில் தள்ளப்படுவர் என்று சொன்ன ஸ்மிர்னா நகரின் ஆயரான போலிக்கார்பு சொன்ன வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை. நற்செய்தியில் இயேசு இறுதித் தீர்ப்பைப் பற்றிப் பேசும் வலை உவமையைக் கூறுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
விண்ணரசைக் கடுகுவிதை, புளிப்பு மாவு, புதையல், நல்முத்து போன்ற பலவற்றோடு ஒப்பிட்டுப் பேசிய இயேசு, இன்றைய நற்செய்தியில் விண்ணரசைக் கடலில் வீசப்பட்ட வலைக்கு ஒப்பிடுகின்றார். கடலில் வீசப்படும் வலை எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டு வரும். பின்னர் அதிலிருந்து நல்லவை சேர்த்து வைக்கப்பட்டுக் கெட்டவை வெளியே வீசப்படும். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும் என்று சொல்லும் இயேசு, “வானதூதர் நேர்மையாளரிடையே தீயோரைப் பிரிப்பர். பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர்” என்கிறார்.
ஒருவர் தீச்சூளையில் தள்ளப்படாமல், இறைவன் அளிக்கும் விண்ணக மாட்சியைப் பெற என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை இன்றைய முதல்வாசகம் தருகின்றது. அங்கு ஆண்டவர் கட்டளைப்படியே மோசே செய்தார் என்று வாசிக்கின்றோம். சந்திப்புக் கூடாத்தை ஆண்டவர் கட்டளைப்படியே மோசே கட்டி எழுப்பினார் என்ற பின்னணியில் வருகின்ற இந்த இறைவார்த்தை, நாம் ஆண்டவர் கட்டளைப்படியே யாவற்றையும் செய்தால், இறைவன் அளிக்கும் விண்ணக மாட்சியைப் பெறுவோம் என்பது உறுதி.
சிந்தனைக்கு:
மானிடமகன் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார் (மத் 16: 27).
நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார் (திபா 1: 6a).
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும் (திபா 1: 6b)
இறைவாக்கு:
‘ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள் (ஆமோ 5: 4) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆகையால், நாம் ஆண்டவரைத் தேடி, அவருக்குகந்த வழிகளை நாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.