இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 78:24-ல்,
“அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
முறுமுறுத்த இஸ்ரயேல் மக்களுக்கு மன்னா உணவை மழையாகப் பொழிந்த நம் தேவன் உலக மக்களின் பாவத்திற்காக தனது திருமகனின் திருஉடலை உணவாக தந்தருளினார். நம் மீது அளப்பரிய அன்பினைக் கொண்ட நம் ஆண்டவருக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில்,
“இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நற்செய்தியில் சொன்னது போல நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக நிறைந்த விளைச்சலைக் கொடுப்பவர்களாக நாம் வாழ இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய நாள் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் நாம் ஞானத்தோடு செயல்பட தூய ஆவியானவரின் துணையை நாடி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
அனைவருக்கும் அச்சத்தை உண்டாக்கி இருக்கும் கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை மக்களை அதிகம் பாதிக்காத வகையில் இருக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இவ்வாண்டு விவசாயிகள் எதிர்பார்க்கும் பருவமழை நன்கு பெய்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.