வாசக மறையுரை (ஜூலை 22)

பொதுக்காலம் பதினாறாம் வாரம்
வியாழக்கிழமை

I விடுதலைப் பயணம் 19: 1-2, 9-11, 16-20b
II மத்தேயு 13: 10-17

“காதிருந்தும் செவிடர்களாய்”

கீழ்ப்படியாதோரின் புகழ்ப்பாக்களுக்கு ஆண்டவர் செவிமடுப்பதில்லை:

தன் பெற்றோர் சொல்வதற்கு நேரெதிராகச் செய்யும் குறும்புக்காரச் சிறுவனாக இருந்தான் ஜோஸ். “காகிதங்களைக் கிழித்து வீடு முழுவதும் போடாதே!” என்று ஜோசின் தாய் அவனிடம் பலமுறை சொல்லியிருந்தார். அப்படியிருந்தும் ஜோஸ் அன்றைக்குக் காகிதங்களைக் கிழித்து வீடு முழுவதும் போட்டிருந்தான். இதனால் அவனுடைய தாய் அவற்றைக் கூட்டிப் பெருக்கி, அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.

இது நடந்து சிறிதுநேரம் கழித்து, ஜோசின் தந்தை வீட்டிலிருந்த பியானோவை மீட்டிக் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடிக்கொண்டிருந்தார். அவர் அருகில் சென்ற ஜோஸ், “அப்பா! நானும் உங்களைப்போல் இந்தப் பியானோவை மீட்டிக் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடவேண்டும்” என்றான். “அதெல்லாம் முடியவே முடியாது” என்று ஜோசின் தந்தை அவனிடம் சொன்னதும், “ஏன் முடியாது?” என்று ஜோஸ் தன்னுடைய முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு அவரிடம் கேட்டபொழுது, “தன்னுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுடைய, அவர்களுடைய சொல்பேச்சுக் கேளாதவர்களுடைய பிள்ளைகள் பாடும் புகழ்ப்பாக்களுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை” என்றார்.

அப்பொழுதுதான் ஜோசிற்குத் தன் தவறு புரிந்தது. அதன்பிறகு அவன் காகிதங்களை வீடு முழுவதும் கிழித்துப் போடுவதை நிறுத்திவிட்டுத் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடந்தான்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் ஜோஸ், எப்படித் தன் பெற்றோரின் சொல்பேச்சுக்குத் தொடக்கத்தில் செவிமடுக்காமல் இருந்தானோ, அப்படி இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் அவருடைய போதனைக்குச் செவிமடுக்காமல் இருந்தார்கள். இதனால் இயேசு அவர்களை முன்னிட்டு, “கேட்டும் கேட்பதில்லை” என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இயேசு இம்மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில், அவருடைய போதனையைக் கேட்க வரிதண்டுவோரும் பாவிகளும் அவரை நெருங்கி வந்தனர். பரிசேயரோ, “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே!” என்று அவருக்கு எதிராக முணுமுணுத்தனர் (லூக் 15: 1-2). இவ்வாறு பரிசேயர்கள் இயேசு சொல்வதைக் கேளாமல், அவர்மீது குற்றம் காண்பதிலேயே குறியாக இருந்ததால், அவர்கள் அவருடைய வார்த்தைகளின் மகத்துவம் புரியாமலேயே போனார்கள். இத்தகைய பின்னணியில் நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் மிகவும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.

இயேசு விதைப்பவர் உணவைச் சொல்லி முடித்தபின்பு, அவரது சீடர்கள் அவரிடம், “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்க, இயேசு அவர்களிடம், “அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்துகொள்வதுமில்லை. இதனால் தான், நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றேன்” என்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள், இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை (எசா 6:9) நமக்கு நினைவுபடுத்துகின்றன. கடவுள் நமக்கு இரு செவிகளைக் கொடுத்திருக்கின்றார் எனில், அவரது வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடப்பதற்குத்தான். இதை உணராமல் வாழ்பவர்களைக் காதிருந்தும் செவிடர்கள் என்றுதானே சொல்லவேண்டும்.

சிந்தனைக்கு:

 நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! (திபா 81: 😎.

 இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர் (இச 6: 4)

 என்னைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள் (ஆமோ 5: 4).

இறைவாக்கு:

‘என் வார்த்தையைக் கேளுங்கள்’ (எசா 32: 9) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.