ஜூலை 20 : நற்செய்தி வாசகம்
தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே” என்றார் இயேசு.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50
அக்காலத்தில்
மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்” என்றார்.
அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————-
“கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம்”
பொதுக்காலம் பதினாறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I விடுதலைப் பயணம் 14: 21 – 15: 1
II மத்தேயு 12: 46-50
“கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம்”
நாளைக்கு இறப்பதாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
ஒரு மாலை வேளையில், மலைப்பாங்கானதொரு பகுதியில் மறைப்பணியாற்றிய அருள்பணியாளரைச் சந்திக்க வந்த பெரியவர் ஒருவர் அவரிடம், “ஒருவேளை நீங்கள் நாளை இரவு இறப்பதாக இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்றார்.
பெரியவர் கேட்ட இக்கேள்வியால் சிறிதும் பதற்றமடையாத அருள்பணியாளர், “எப்போதும் போல் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, இறைவேண்டலையும் திருப்பலியையும் முடித்துவிட்டு, வீடுகளுக்குச் சென்று, பகல் முழுவதும் மக்களைச் சந்திப்பேன்; அவர்களுடைய குறைகளையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டுவிட்டு, என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன். மாலைவேளையில் இல்லத்திற்குத் திரும்பி வந்து, இங்குள்ள ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத்தருவேன். அதன்பிறகு இரவுநேர இறைவேண்டலை முடித்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்துவிட்டு, “இறைவா! இன்றைய நாளில் என்னால் முடிந்த மட்டும் உமது திருவுளத்தை நிறைவேற்றிவிட்டேன்” என்று சொல்லிவிட்டு, இறைவனிடம் திருக்கைகளில் என்னை ஒப்படைத்துவிட்டு, உயிர் துறப்பேன்” என்றார்.
அருள்பணியாளர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அவரிடம் கேள்விகேட்ட பெரியவர், “கடவுளின் திருவுளமே உங்களுடைய திருவுளமாக வாழும் நீங்கள் அல்லவா உண்மையான அருள்பணியாளர்” என்று சொல்லி அவரை வாழ்த்தி விட்டுச்சென்றார்.
ஆம், கடவுளின் திருவுளமே தன்னுடைய திருவுளமாக வாழ்ந்த இந்த அருள்பணியாளர் நமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு. இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில் விண்ணகத்தில் உள்ள தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே தன்னுடைய உண்மையான உறவினர் என்கிறார் இயேசு. நாம் எப்படி இயேசுவின் உண்மையான உறவினர் ஆவது என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறைப்பணிக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து, அப்பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கையில் இயேசுவுக்கு பரிசேயர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களிடமிருந்து எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்தன. இவற்றைக் கேள்விப்பட்ட இயேசுவின் தாயும், அவரது சகோதரர்களும் சகோதரியும் அவரைக் காண வருகின்றார்கள். இத்தகையதொரு வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு, இயேசு தன்னுடைய உண்மையான உறவினர் யார் என்றொரு கேள்வியைக் கேட்டு, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றோரே தன்னுடைய உண்மையான உறவினர் என்கிறார்.
இங்கு இயேசு சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு பார்க்கும்பொழுது, மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்ல, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியதாலும், அவரது தாயாகின்றார். அதேவேளையில் பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் இயேசுவை நம்பாமல், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றாமல் இருந்ததால், இயேசுவுக்கு யாரோ போன்று ஆகின்றார்கள். இன்றைய முதன்வாசகத்தின் இறுதியில் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைச் செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச் செய்து, எகிப்தியக் குதிரை வீரர்களைக் கடலில் மூழ்கடித்ததைக் கண்டு இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர்மீதும், அவரது அடியாரான மோசேயின்மீதும் நம்பிக்கைகொண்டதாக வாசிக்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் செய்த வல்லசெயலைக் கண்டதால், அவரை நம்பினார்கள்; ஆனால், நாம் காணாமலேயே அவர்மீது நம்பிக்கைகொண்டு, அவரது திருவுளத்தின்படி நடக்க வேண்டும். அப்பொழுது நாம் இயேசுவின் உண்மையான உறவினர் ஆகமுடியும்.
சிந்தனைக்கு:
இயேசு நம்மைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை (எபி 2: 11)
கடவுளின் திருவுளத்தின்படி நடக்கும்பொழுது எந்த இனத்தவரும் இயேசுவின் சொந்த இனத்தவர் ஆவார்.
உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும் (திபா 143: 10)
ஆன்றோர் வாக்கு:
‘இயேசுவைப் பின்தொடர்வதில் நம் அனைவருக்கும் முன்னோடியாகச் செல்பவர் அன்னை மரியா’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் அன்னை மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றிக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.