வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாடு
ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், அண்மைய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள ஜெர்மனி, பெல்ஜியம், மற்றும் நெதர்லாந்து நாட்டு மக்களுடன் தன் ஒருமைப்பாட்டை அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேரழிவு தந்த வெள்ளப்பெருக்கால் இந்த மூன்று நாடுகளிலும் உயிரிழந்தோரை இறைவன் ஏற்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு உதவி வருவோரின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கவும், இறைவனை நோக்கி வேண்டுவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பொருளாதார, மற்றும் பெருந்தொற்று நலப்பிரச்சனைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் தென்ஆப்ரிக்காவில், அண்மைக்காலங்களில் இடம்பெறும் வன்முறைகளால், நிலைமைகள், மிகப்பெரிய அளவில் சீர்கேடு அடைந்துள்ளதாக கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாட்டின் அமைதிக்காக உழைக்குமாறும், உதவி தேவைப்படும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் ஆற்றவேண்டும் எனவும், தென் ஆப்ரிக்க நாட்டு ஆயர்களுடன் இணைந்து தானும் அனைத்துத் தரப்பினரையும் விண்ணப்பிப்பதாகவும் எடுத்துரைத்தார்.
நாட்டின் அனைத்து குடிமக்களோடும் இணக்க வாழ்வில் மீண்டும் பிறப்பெடுக்கும் தென்னாப்பிரிக்க மக்களின் விருப்பத்தால் நாடு வழிநடத்தப்பட வேண்டும் என்ற உறுதிப்பாடு மறக்கப்படக் கூடாது என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை.
கியூபா நாட்டின் இன்றையத் துன்பச் சூழல்களில், பெருந்துயர்களை அனுபவிக்கும் மக்களை, குறிப்பாக குடும்பங்களை சிறப்பான விதத்தில் தான் நினைவுகூர்வதாகவும், அம்மக்களுடன் அருகாமையில் இருந்து, அம்மக்கள் அமைதி, பேச்சுவார்த்தை, ஒருமைப்பாடு, நீதி, மற்றும் உடன்பிறந்த நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு இறைவனை நோக்கி வேண்டுவதாகவும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஞாயிறன்று, நண்பகல் மூவேளை செப உரைக்கு செவிமடுக்க, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறு விண்ணப்பித்து தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.
Comments are closed.