பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு (ஜூலை 18)
I எரேமியா 23: 1-6
II எபேசியர் 2: 13-18
III மாற்கு 6: 7-13
“ஓய்வறியா நல்லாயன் இயேசு”
நிகழ்வு
தனது எழுபத்தெட்டாவது வயதில், இருநூற்று அறுபத்தைந்தாவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜோசப் அலோசியஸ் இரட்சிங்கர் எனப்படும் நமது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள். இவர் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் பேராயராக இருந்த சமயத்தில் (1977-1982) மக்கள் தன்னை எந்த நேரத்தில் வேண்டுமானாலும்; ஏன், நள்ளிரவிலும்கூடச் சந்திக்கலாம் என்றார். அந்தளவு இவர் தன்னை மக்களில் ஒருவராக இனங்கண்டுகொண்டார்.
இப்படிப்பட்டவரிடம் ஒருமுறை சிறுவன் ஒருவன், “ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டு இருக்கின்றீர்களே…! நீங்கள் தூங்குவதே இல்லையா?” என்றான். “நீ நிம்மதியாகத் தூங்கினாலே போதும் மகனே! அது எனக்குப் புத்துணர்ச்சியைத் தந்துவிடும். அந்தப் புத்துணர்ச்சியைக் கொண்டு நான் நீண்டே நேரம் உழைப்பேன்” என்று வாஞ்சையோடு பதிலளித்தார் பின்னாளில் திருத்தந்தை பதினாறாம் பெனடிட்டாக உயர்ந்த ஜோசப் அலோசியஸ் இரட்சிங்கர் அவர்கள்.
ஆம், கடவுளின் மக்களுக்காக ஓய்வின்று உழைத்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் ஒரு நல்ல ஆயனுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இயேசு ஓய்வறியாது உழைத்த நல்லாயன் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மக்களைப் பராமரிக்காத ஆயர்கள் – தலைவர்கள்
இயேசு கிறிஸ்து உயர்த்தெழுந்த பின் பேதுருவோடு பேசுகின்றபொழுது, அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” (யோவா 21: 15), “என் ஆடுகளை மேய்” (யோவா 21: 16), “என் ஆடுகளைப் பேணி வளர்” (யோவா 21: 17) என்பார். இயேசு பேதுருவிடம் இவ்வாறு சொல்லக் காரணம், திருஅவையின் தலைவராக இருக்கப் போகிறவர், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை – ஆடுகளைப் – பேணிப் பராமரிக்கவேண்டியது அவருடைய முதன்மையான கடமை என்பதாலேயே ஆகும். இயேசு பேதுருவிடம் ஒப்படைத்த இப்பொறுப்பினை அவர் தன் உயிரையே தந்து சிறப்பாகச் செய்தார்.
ஆனால், இறைவாக்கினர் எரேமியாவின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள், அதாவது ஆயர்கள் மக்களைப் பராமரிக்கவில்லை. மாறாக, அவர்கள் மக்களை – மந்தையைச் – சிதறடித்தார்கள்; துரத்தியடித்தார்கள். மக்களைப் பேணிக் காத்து, நலிவுற்றத்தைத் திடப்படுத்தி, பிணியுற்றத்தை நலப்படுத்தி, காயமுற்றவற்றிற்குக் கட்டு போட்டு, வழி தப்பியவற்றைத் திரும்பக் கூட்டிவந்து, காணாமல் போனவற்றைத் தேடவேண்டிய ஆயர்கள் (எசே 34: 4) அவ்வாறு இல்லாததால், ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் எழுகின்றது. இதனால் ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியா வழியாக, “என் ஆடுகளைச் அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு!” என்கிறார். அதைவிடவும், “ஆடுகளைப் பேணிக் காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன்” என்கிறார்.
ஆண்டவர், இறைவாக்கினர் எரேமியா வழியாகச் சொன்ன, ஆயர்களை நியமிப்பேன்… அவர் ஞானமுடன் செயல்படுவார்… நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார் என்ற வாக்குறுதி நிறைவேற்றியதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.
மக்கள்மீது பரிவுகொண்ட நல்லாயர் இயேசு
வான்ஸ் ஹாவ்னர் (Vance Havner) என்ற எழுத்தாளர் ஒருமுறை குறிப்பிட்ட செய்தி இது: “ஓய்வெடுக்க நேரம் ஒதுக்காதவர், வெகு சீக்கிரம் நிரந்தரமாக ஓய்வெடுத்து விடுவார்.” இக்கூற்று கேட்பதற்குக் கசப்பாக இருந்தாலும், யாராலும் மறுக்க முடியாத உண்மை. இன்றைக்குப் பலர் வேலை வேலை என்று ஓய்வெடுக்க நேரம் ஒதுக்காமல் தொடர்ந்து உழைப்பதைக் காணமுடிகின்றது. இத்தகையவர்கள் தங்களுடைய வாழ்வினை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவது நல்லது.
Comments are closed.