போஸ்னியாவிலுள்ள புலம்பெயர்ந்தோரோடு திருத்தந்தை தோழமை
போஸ்னியா-எர்செகொவினா குடியரசின் வடமேற்கே அமைந்துள்ள Lipa நகரில் புலம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றின் கட்டடப்பணிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்கொடைகளை அனுப்பியுள்ளார்.
திருத்தந்தையின் இந்த நன்கொடை பற்றி வத்திக்கான் செய்திகளிடம் எடுத்துரைத்த, போஸ்னியா- எர்செகொவினா திருப்பீடத் தூதர் பேராயர் Luigi Pezzuto அவர்கள், கடினமான சூழல்களில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தோரிடம் திருத்தந்தை மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதை, இது வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.
திருத்தந்தையின் இந்த நன்கொடை, Lipa நகரில் புலம்பெயர்ந்தோர் முகாமில் நிரந்தரமாக வாழ்கின்ற குடும்பங்களுக்கும், சிறாருக்கும் உணவு அறைகளும், பல்நோக்கு அறைகளும் கட்டப்படவும், அம்மக்கள் மாண்புடன் வாழ்வதற்கும் உதவும் என்று, பேராயர் Pezzuto அவர்கள் கூறினார்.
ஜூலை 01, இவ்வியாழனன்று, இக்கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது எனவும், Banja Luka மறைமாவட்ட காரித்தாஸ், மிலான் காரித்தாஸ், மற்றும், Ipsia என்ற ஓர் அரசு-சாரா அமைப்பு ஆகியவையும், இந்த கட்டடப்பணிக்கு உதவியுள்ளன எனவும், பேராயர் Pezzuto அவர்கள் கூறினார்.
இவ்வாண்டு பிப்ரவரி 7ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மூவேளை செப உரையில், பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்ற, புலம்பெயர்ந்தோருக்கு, தகுந்த பராமரிப்பு, மற்றும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பது உறுதிசெய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அச்சமயத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த புலம்பெயர்ந்தோர் போஸ்னியா-எர்செகொவினா Lipa முகாமில் மட்டுமன்றி, மற்ற முகாம்களிலும், கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வந்தனர்.
Lipa முகாமில், கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 1,500 புலம்பெயர்ந்தோர், பனிப்பொழிவில் முகாமிற்கு வெளியே வாழும் நிலைக்கு உட்பட்டனர். புலம்பெயர்ந்தோர், ஐரோப்பாவில் நுழைவதற்குப் பயன்படுத்தும் வழிகளில் பால்கன் நாடுகளும் ஒன்று. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், பால்கன் நாடுகள் வழியாக, ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
ஜூலையில் மறைக்கல்வியுரை இடம்பெறாது
மேலும், இத்தாலியில் கோடைகாலம் துவங்கியிருப்பதை முன்னிட்டு, இந்த ஜூலை மாதம் முழுவதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரை நிகழ்வு இடம்பெறாது, ஆனால், திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரைகள் வழக்கம்போல் இடம்பெறும் என்று, வத்திக்கானின் பாப்பிறை இல்லம் அறிவித்துள்ளது.
வருகிற ஆகஸ்ட் மாதம் 4ம் தேதியிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரை நிகழ்வு மீண்டும் துவங்கும் என்று கூறும் அவ்வில்லத்தின் அறிவிப்பை, திருப்பீடத் தகவல் தொடர்பகத்தின் இயக்குனர், மத்தேயோ புரூனி அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்,
Comments are closed.