ஜூலை 4 : நற்செய்தி வாசகம்
சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6
அக்காலத்தில்
இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வு நாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார்.
அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
மறையுரைச் சிந்தனை
பொதுக்காலம் பதினான்காம் ஞாயிறு (ஜூலை 08)
(எசே 2: 2-5 ; 2 கொரி 12: 7-10 ; மாற் 6: 1-6)
செல், சொல்!
திருச்சபை மெல்ல வளர்ந்து வந்த காலகட்டத்தில் பைஜாண்டியப் பேரரசில் ஆயராக இருந்து பணியாற்றியவர் தூய பேசில். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஓர்
அருமையான
நிகழ்வு.
பேசில், பைஜாண்டியத் திருச்சபையின் ஆயராக இருந்து பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அப்போது இருந்த அரசன் (அவன் ஒரு கிறிஸ்தவன்தான்) மக்கள்மீது அக்கறை கொள்ளாமலும் கிறிஸ்தவ நெறிமுறைகளின் படி வாழாமலும் இருந்தான். இதைக் கண்ணுற்ற தூய பேசில், “நீ மக்கள்மீதும் அக்கறைகொள்ளவில்லை, கிறிஸ்தவ நெறிமுறைகளின்படியும் வாழவில்லை. இவையெல்லாம் உண்மையான கிறிஸ்தவனுக்கு அழகல்ல” என்றார் இதைக் கேட்ட அரசன், “இதுபோன்று யாரும் என்னைக் கேள்வி கேட்டது கிடையாது, நீங்கள்தான் என்னை இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள்” என்றான்.
அதற்கு தூய பேசில் அரசனிடத்தில், “அப்படியானால் நீ இதுவரைக்கும் ஓர் உண்மையான, நேர்மையான ஆயரைச் சந்தித்ததில்லை” என்றார்.
அரசன் என்றுகூடப் பாராமல், அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டிய தூய பேசில் ஓர் உண்மையான இறைவாக்கினர் / நற்செய்திப் பணியாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணம். பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘செல் சொல்’ என்னும் உண்மையைத் தாங்கி வருகின்றது. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் எசேக்கியலிடம், கிளர்ச்சியும் கலகமும் செய்வோரிடம், வன்கண்ணும் கடின இதயமும் கொண்டிருக்கின்ற மக்களிடம் உன்னை நான் அனுப்புகிறேன். நீ அவர்களிடம் நான் உனக்குச் சொல்லும் செய்தியை அறிவி, நீ அறிவித்த செய்தியை அவர்கள் கேட்கின்றார்களோ இல்லையோ, அவர்கள் தங்கள் மத்தியில் ஓர் இறைவாக்கினர் தோன்றி இருக்கின்றார் என்று அறிந்துகொள்ளட்டும்” என்கிறார்.
மேலே நாம் வாசித்த இறைவார்த்தைப் பகுதி ஓர் இறைவாக்கினர் யார்?, அவருடைய பணி என்ன?, அவர் பணி செய்கின்றபோது சந்திக்கின்ற சவால்கள் என்ன என்பதைக் குறித்து மிகத்தெளிவான விளக்கத்தைத் தருகின்றது. நாம் அதனைக் குறித்து இப்போது பார்ப்போம். ‘நான் உனக்குச் சொல்லும் செய்தியை அவர்களிடத்தில் போய் சொல்’ என்று மேலே நாம் வாசித்த இறைவார்த்தை ஓர் இறைவாக்கினர் என்பவர் “இறை” “வாக்கினராக” இருக்கவேண்டும் அதாவது தன்னுடைய செய்தியைச் சொல்லாமல், ஆண்டவர் என்ன சொல்கின்றாரோ அதை மட்டுமே மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்லவேண்டும்; என்ன பேசவேண்டும் என்பது பற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார். அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகின்றது என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் சொல்பவற்றை எல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கின்றேன்” என்று (யோவா 12:49). ஆம், இறைவாக்கினர் என்பவர் இறைவனுடைய செய்தியை மட்டும் எடுத்துரைக்கின்றபோது அவர் உண்மையான இறைவாக்கினராக இருக்கின்றார், அப்படியில்லாதவர் உண்மையான இறைவாக்கினராக இருக்கமுடியாது.
அடுத்ததாக, நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்கின்றபோது, பணித்தளங்களில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட மக்களாக இருப்பார்கள் என்பதையும் முதல் வாசகம் எடுத்துச் சொல்கின்றது. கலகமும் கிளர்ச்சியும் செய்தல், வன்கண்ணும் கடின இதயமும் கொண்டவகளாய் இருத்தல் இவையும் இதுபோன்ற காரியங்களும்தான் பணிததளத்தில் நாம் சந்திக்கின்ற மக்களின் மனநிலையாக இருக்கின்றது. (ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இறைவாக்கினர் எசேக்கியேல் தான் இறைவாக்குப் பணியைச் செய்தபோது மக்களிடமிருந்து பல்வேறு விதமான எதிபுகளைச் சந்தித்தார். மக்களால் அவமதிப்புக்கு உள்ளானார். இதுபோன்று இன்னும் பல்வேறு வகையான துன்பங்களைச் சந்தித்தார்.
அதுபோன்று நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்குச் சென்று போதிக்கின்றபோது ஒருசிலர் அவருடைய போதனைக் கண்டு வியக்கின்றார்கள். ஆனால், மற்றவர்களோ இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே… இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கின்றார்கள்” என்று சொல்லி அவரை ஏற்றக்கொள்ளத் தயங்குகின்றார்கள். எனவே, இறைவாக்குப் பணியைச் செய்யக்கூடியவர்கள் தாங்கள் பணிபுரிகின்ற பணித்தளங்கில் இருக்கின்ற மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொண்டு, காலத்திற்கு ஏற்றார் போல இறைவாக்குப் பணியினைச் செய்யவேண்டும். அவர்கள் ஒருபோதும் பணிவாழ்வில் வரும் எதிர்ப்புகளை, புறக்கநிப்புகளைக் கண்டு பின்வாங்கக்கூடாது. மட்டுமல்லாமல், ஆண்டவரின் நற்செய்தியைச் அறிவிக்கின்ற பணியைச் செய்கின்றபோது மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்களோ, இல்லையோ இறைவாக்கினர் யாவரும் தங்களுடைய பணியைத் தொடர்ந்து செய்யவேண்டும். அப்போதுதான் தங்களிடையே ஓர் இறைவாக்கினர் தோன்றி இருக்கின்றார் என்று மக்கள் அறிந்துகொள்ளும் சூழல் ஏற்படும்.
இதுவரை இறைவாக்குப் பணியை/ நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்கின்றவர்கள் எப்படி இருக்கவேண்டும், அவர்களுக்கு எப்படியெல்லாம் சவால்கள் வரும் என்று சிந்தித்துப் பார்த்தோம். இப்போது இறைவாக்குப் பணியை அல்லது நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்கின்றவர்களை இறைவன் எப்படியெல்லாம் பராமரித்துப் பாதுகாக்கின்றார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவர், தன்னுடைய உடலில் ஒரு முள்ளானது தைத்துக்கொண்டே இருக்கின்றது, அதை ஆண்டவர் நீக்குமாறு கேட்டுக்கொண்டே இருக்கின்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்று சொல்லி அவரைத் தேற்றுக்கின்றார். பவுலடியார் தன்னுடைய உடலில் தைத்த முள் என்று சொல்வதற்கு விவிலிய அறிஞர்கள் பலவிதமான விளக்கங்களைத் தருவார்கள். அவருடைய பார்வை குறைவு, திக்கிப் பேசும் தன்மை, உடல் பலவீனங்கள் இவையும், இன்ன பிறவும் அவருடைய உடலில் தைத்த முள் என்று சொல்வார்கள். ஆனால், ஆண்டவர் பவுலடியாரின் குறைபாடுகளைத் தன்னுடைய அருளால் நிறைவானதாக மாற்றுகின்றார். ஆகையால், இறைப்பணியைச் செய்யக்கூடியவர்கள் தங்களுக்கு அது பிரச்சனை, இது பிரச்சனை, மக்களால் பிரச்சனை, எதிரிகளால் பிரச்சனை என்று கலங்கித் தவிக்கத் தேவையில்லை. இறைவன் தன்னுடைய அருளால், வலுவால் குறைவானது அனைத்தையும் நிறைவாதாக மாற்றிக்காட்டுவார் என்னும் உண்மையை உணர்ந்தவர்களாய் வாழவேண்டும்.
எனவே, இறைவாக்குப் பணியை செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நாம் இறைவனின் அருளை உணர்ந்தவர்களாய் அப்பணியை மிகத் துணிவோடு செய்வோம், எத்தகைய சவால்களையும் எதிர்த்து நின்று பணி செய்வோம். இறைவனின் அரசை இம்மண்ணில் கட்டி எழுப்புவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.