பொதுக்காலம் பதினான்காம் ஞாயிறு (ஜூலை 04)

I எசேக்கியேல் 2: 2-5
II 2 கொரிந்தியர் 12: 7-10
III மாற்கு 6: 1-6
இறைவாக்குப் பணியில் வரும் இடர்களும், இறைவனின் அருளும்
நிகழ்வு
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துறவு அவையின் தலைவர் தன்னுடைய துறவு அவையில் இருந்த ஒருசில இளம் அருள்பணியாளர்களை ஒரு குறிப்பிட்ட சிற்றூருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பிவைத்தார். இவர்களும் அவ்வூருக்குச் சென்று, ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி, இறைவார்த்தையை அறிவித்தும், அவர்களுக்காக இறைவனிடம் வேண்டியும் வந்தார்கள். இதனால் பலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள்.
ஒருநாள் இவர்கள் ஒரு வீட்டில் இருந்தவர்களுக்கு இறைவார்த்தையை அறிவிக்கவும், அவர்களுக்காக இறைவனிடம் வேண்டவும் சென்றார்கள். அந்த வீடோ ஒரு காவல்துறை அதிகாரியின் வீடு. மட்டுமல்லாமல், அவர் கிறிஸ்தவ சமயத்தை அறவே வெறுத்த ஓர் அரசியல் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். இதனால் அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்த அருள்பணியாளர்களிடம், “நீங்கள் எங்களை மதமாற்றம் செய்ய வந்திருக்கின்றீர்களா?” என்று கேட்டு, அவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்தார். செய்தி துறவு அவைத் தலைவருக்குப் பறந்தது. அவர் அருள்பணியாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு வேகமாக வந்தார். வரும் வழியிலேயே அவர் இன்னார் எனக் கண்டுணர்ந்து, காவல்துறை அதிகாரி ஏற்பாடு செய்து வைத்திருந்த ஐம்பதுபேர் கொண்ட குழு, அவரை அடித்துக் குற்றுயிராய்ப் போட்டுவிட்டுச் சென்றது. அந்த வழியாக வந்தவர்கள்தான் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவமனையில் சிகிச்சையை முடித்துக் கொண்டதும், அவர் பின்வாங்காமல் மீண்டுமாகச் சிறைச்சாலைக்கு விரைந்தார்.
சிறைச்சாலைக்கு வந்ததும், அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து, “என்னுடைய துறவு அவையைச் சார்ந்த அருள்பணியாளர்கள் யாருக்கும் எந்தவொரு தீமையையும் செய்யவில்லை; அவர்கள் இறைவார்த்தையை அறிவித்து, மக்களுக்காக இறைவனிடம் வேண்டத்தானே செய்தார்கள்! அவர்களை எதற்கு நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருக்கின்றீர்கள்?” என்று அவர்களோடு பேசினார். இதற்கு அதிகாரிகளால் பதிலேதும் பேசமுடியாமல் போகவே, அவர்கள் சிறையிலிருந்த அருள்பணியாளர்களை விடுதலை செய்தார்கள். இதற்குப் பிறகு துறவு அவைத் தலைவர் அருள்பணியாளர்களோடு சில நாள்கள் தங்கியிருந்து, அவர்களோடு சேர்ந்து நற்செய்தி அறிவித்து, அவர்களை உற்சாகப்படுத்திவிட்டுச் சென்றார்.
பணிவாழ்வில் தடைகள் வருகின்றன என்பதற்காக இந்த நிகழ்வில் வரும் துறவு அவைத் தலைவரும், அவருடைய துறவு அவையைச் சார்ந்த அருள்பணியாளர்களும் இறைவார்த்தையை அறிவிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாகத் தொடர்ந்து இறைவார்த்தையை அறிவித்தார்கள்! தங்கள் பணியில் வெற்றியும் கண்டார்கள். பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் பல்வேறு சவால்களுக்கு நடுவில், இறைவாக்குப் பணியை, ஆண்டவர் தரும் ஆற்றலால் தொடர்ந்து ஆற்றவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட மக்கள்
இறைவாக்குப் பணி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செய்யப்பட வேண்டிய பணி அல்ல, அது என்றென்றைக்கும் செய்யப்பட வேண்டிய பணி. ஏனெனில் அதற்கான தேவை எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கின்றது. அதேநேரத்தில் இறைவாக்குப் பணியானது, அவ்வளவு எளிதான பணியும் கிடையாது. அது மிகவும் சவாலான பணி. ஆதலால், சவால் நிறைந்த இறைவாக்குப் பணியைத் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் செய்யவேண்டியது தலையாய கடமையாகும்.
முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேலின் அழைப்பைக் குறித்துப் படிக்கின்றோம். கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேலை அழைக்கின்றபொழுது, எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகின்றேன் என்கிறார். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகவே கிளர்ச்சி செய்தார்கள் என்பதுதான். இந்த மக்கள் அவருடைய அடியார்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யாமல் இருக்கமாட்டார்கள்; நிச்சயம் கிளர்ச்சி செய்வார்கள். ஏனெனில், அவர்கள் வன்கண்ணும் கடின இதயமும் கொண்டவர்கள். இப்படிப்பட்ட மக்கள் நடுவில் கடவுள் ஓர் ‘இறைவாக்கினராக’ எசேக்கியேலை அனுப்புகின்றார். எசேக்கியேலும் மக்கள் நடுவில் சென்று, இறைவாக்குப் பணியைச் செய்கின்றார்.
இறைவாக்குப் பணியில் கலகம் செய்யக்கூடிய, வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களைக் கண்டு அஞ்சிடாமல், இறைவாக்குப் பணியை நாம் மனவுறுதியோடு செய்யவேண்டும் என்கிறது முதல்வாசகம்.
புறத் தோற்றத்தை வைத்து மதிப்பிடும் மக்கள்
இறைவாக்குப் பணியைச் செய்யும்பொழுது மக்கள் கலகக்காரர்களாய் இருப்பார்கள் என்று முதல்வாசகம் ஒரு சவாலைச் சுட்டிக்காட்டுகின்றபொழுது, நற்செய்தி வாசகமோ இன்னொரு சவாலைச் சுட்டிக்காட்டுகின்றது. அது என்னவெனில், மக்கள் இறைவாக்கினரின் வெளித் தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பிடும் போக்கு.
இயேசு தம் சொந்த ஊருக்கு வந்து, தொழுகைக்கூடத்தில் கற்பிக்கின்றபொழுது, முதலில் அவருடைய போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்கின்ற மக்கள், “இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே!” என்று அவருடைய வெளித்தோற்றத்தைப் பார்த்துப் புறக்கணிக்கின்றார்கள். இதற்கு முந்தைய பகுதியில் (மாற் 5: 21-43), இயேசு கப்பர்நாகுமில் பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணியை நலப்படுத்தித் தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகளை உயிர்த்தெழச் செய்திருப்பார். அவர்களெல்லாம், இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருந்தபொழுது, இயேசுவின் சொந்த ஊர்க்கார்கள் அவர்கள்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைப் புறக்கணித்தது நமக்கு வியப்பாக இருக்கின்றது. மேலும் இயேசு இரண்டாவது முறையாகத் தன் சொந்த ஊருக்கு வந்திருப்பார். முதல்முறை அவர் வந்தபொழுது மக்கள் அவரை மலையிலிருந்து தள்ளிவிட முயற்சித்திருப்பார்கள் (லூக் 4: 16-30). இரண்டாவது முறையாக அவர் அவர்கள் நடுவில் வந்தபொழுது, அவர்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு அவரைப் புறக்கணிக்கிறார்கள். இன்றைக்கும்கூட ஒருசில இடங்களில் மக்கள் அருள்பணியாளரின் பின்புலத்தை… அவர் சார்ந்திருக்கும் சமுதாயத்தைக் கொண்டு புறக்கணிப்பது வேதனையிலும் வேதனையான ஒரு செயல்.
வலுவின்மையில் வெளிப்படும் இறைவனின் வல்லமை
கலகம் செய்யும் மக்கள்… வெளித் தோற்றத்தைப் பார்த்துப் புறக்கணிக்கும் மக்கள் இவற்றோடு இன்றைய இரண்டாம் வாசகம், இறைவாக்குப் பணியில் வரும் மூன்றாவது சவாலைச் சுட்டிக்காட்டுகின்றது. அதுதான் சாத்தான் அனுப்பும் தூதன் அல்லது சோதனை. இரண்டாம் வாசகத்தில், பவுல் தன்னுடலில் தைத்த முள்ளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். பவுல் குறிப்பிடும், ‘உடலில் தைத்த முள்’ என்பதற்குத் திருவிவிலிய அறிஞர்கள், போலி இறைவாக்கினர்கள், சோதனை, தலைவலி, காய்ச்சால், பார்வை குறைபாடாக (கலா 4: 14-15) இருக்கலாம் என்று பல்வேறு விளக்கங்களைத் தருவார்கள். பவுல் தன் உடலில் தைத்த முள்ளை நீக்குமாறு ஆண்டவரிடம் கேட்கும்பொழுது அவர், “என் அருள் உனக்குப் போதும்” என்கிறார்.
ஆண்டவர் பவுலிடம் சொல்லும் வார்த்தைகள் மூலம் நாம் நம் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி இதுதான்: இறைப்பணியைச் செய்யும்பொழுது கடின இதயம் கொண்ட மக்கள், புறத் தோற்றத்தைப் பார்த்து மதிப்பிடும் மக்கள், சாத்தான் அனுப்பும் சோதனைகள் முதலிய பல பிரச்சனைகள் வரலாம். இவற்றைக் கண்டு நாம் கலங்காமல், ஆண்டவரின் அருள் நமக்கு இருக்கின்றது என்ற நம்பிக்கையோடு, மன உறுதியோடு பணிசெய்ய வேண்டும்.”
ஆகையால், இறைவாக்குப் பணியில் வரும் சவால்களைக் கண்டு அஞ்சாமல், ஆண்டவரின் அருள்துணையில் நம்பிக்கை வைத்து, அவரது பணியை நாம் சிறப்பாகச் செய்வோம்.
சிந்தனை:
‘அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றிகொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்’ (எரே 1: 19) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் நமது பணிவாழ்வில் வரும் சவால்களைக் கண்டு அஞ்சாமல், ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; நமக்கு ஆற்றலைத் தருகின்றார் என்ற நம்பிக்கையோடு இறைப்பணியைத் தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.