பாலியல் வன்கொடுமை வேரோடு ஒழிக்கப்படவேண்டும்-ஐ.நா

போர்களின்போது இடம்பெறும் பாலியல் வன்கொடுமை, தலைமுறைகளின் வளர்ச்சியை பின்னடையச் செய்வதோடு, மனித, மற்றும், உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமை பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

ஜூன் 19, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும், போர்களில் பாலியல் வன்கொடுமையை ஒழிப்பது குறித்த உலக நாளுக்கென, ஜூன் 17, இவ்வியாழனன்று வெளியிட்ட செய்தியில் இவ்வாறு, கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

போர், சித்ரவதை, அச்சுறுத்தல், அடக்குமுறை ஆகியவற்றின் கொடுமையான யுக்திகளாக, பாலியல் வன்கொடுமை ஏற்கனவே இடம்பெற்று வருகிறது என்றும், கோவிட்-19 பெருந்தொற்று, இந்த வன்முறையை மேலும் அதிகரித்துள்ளது என்றும் கூட்டேரஸ் அவர்கள், கவலை தெரிவித்துள்ளார்.

இந்த வன்கொடுமையின் மூலக் காரணத்தைக் கண்டுபிடித்து அதனை வேரோடு பிடுங்கி எறிய உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள, கூட்டேரஸ் அவர்கள், இந்தக் கொடுமையைச் செய்யும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், மற்றும், இவ்வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

வறட்சியால் 320 கோடி மக்களின் வாழ்வு

மேலும், ஜூன் 17, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட, பாலைநிலங்கள் அதிகரிப்பு மற்றும், வறட்சி ஆகியவற்றை ஒழிக்கும் உலக நாளுக்கென்று, கூட்டேரஸ் அவர்கள் வெளியிட்ட செய்தியில், இந்நிலையால், உலகில் 320 கோடி மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சுற்றுச்சூழல் மற்றும், பூமிக்கோளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், மனித சமுதாயம், இயற்கை மீது, இரக்கமற்ற, மற்றும், அழிவைக்கொணரும் போரைத் தொடுத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலைநிலங்கள் அதிகரிப்பு மற்றும், வறட்சியை ஒழிக்கும் உலக நாள், 1995ம் ஆண்டு சனவரி 30ம் தேதி ஐ.நா. பொது அவையால் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 17ம் தேதி, அந்த உலக நாள் முதன்முதலில் கடைப்பிடிக்கப்பட்டது

Comments are closed.