#வாசக மறையுரை (ஜூலை 02)

பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம்
வெள்ளிக்கிழமை

I தொடக்க நூல் 23: 1-4, 19; 24: 1-8, 62-67
II மத்தேயு 9: 9-13

“இரக்கத்தையே விரும்புகிறேன்”

திருடனிடம் இரக்கம்காட்டிய அமெரிக்க அதிபர்:

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முப்பதாவது அதிபராக இருந்தவர் கால்வின் கூலிட்ஜ் (Calvin Coolidge 1872- 1933). இவர் அதிபரான புதிதில் ஒரு விடுதியில் இரவு தங்கவேண்டி வந்தது. இவர் விடுதியில் தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது, யாரோ ஒருவர் இவர் இருந்த அறையின் கதவைத் திறப்பதும், இவருடைய பொருள்களை எடுப்பதும் இவருக்கு நன்றாகத் தெரிந்தது. சட்டென விழித்துக்கொண்ட இவர் ஓடிச்சென்று, அந்தத் திருடனைப் பிடித்தார். கடைசியில்தான் தெரிந்தது, அந்தத் திருடன் ஒரு கல்லூரி மாணவன் என்பது. இவர் அவனிடம், “எதற்காகத் திருடினாய்?” என்று கேட்டபொழுது, அவன் இவரிடம், “விடுதிக் கட்டணம் செலுத்தவேண்டும். கல்லூரியில் கட்டணமும் செலுத்தவேண்டும்” என்றான்.

“சரி, நீ செலுத்தவேண்டிய விடுதிக் கட்டணத்திற்கான பணத்தையும், கல்லூரிக் கட்டணத்திற்கான பணத்தையும் நான் தந்துவிடுகின்றேன். ஆனால், ஒரு நிபந்ததை, இந்தப் பணத்தை நீ திரும்பித் தந்துவிடவேண்டும். ஏனெனில் இது நான் நேர்மையாகச் சேர்த்த பணம்” என்று சொல்லிக் கால்வின் கூலிட்ஜ் அவனிடம் முப்பத்து இரண்டு டாலர்களை எண்ணிக் கொடுத்தார். அவனும், ‘இவர் என்னைக் காவலரிடம் பிடித்துக் கொடுக்காமல், என்மீது இரக்கம் கொண்டு, விடுதிக் கட்டணத்தையும் கல்லூரிக் கட்டணத்தையும் தந்திருக்கின்றாரே! உண்மையில் இவர் பெரியவர்’ என நினைத்துக்கொண்டு, கால்வின் கூலிட்ஜ் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, அப்பணத்தை ஒருசில நாள்களில் திரும்பிக் கொடுத்தான். மட்டுமல்லாமல், அவன் திருடுவதை அடியோடு விட்டான்.

ஆம், கால்வின் கூலிட்ஜ் தன்னிடமிருந்து திருடிய கல்லூரி மாணவனிடம் இரக்கம் காட்டினார். அதனால் அவன் திருடுவதை அடியோடு விட்டான். இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் இயேசு, “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

வரிதண்டுபவர்கள் உரோமையர்களுக்குக் கீழ் பணியாற்றியதாலும், நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடக் கூடுதலான தொகையை வசூலித்ததாலும், யூதர்கள் அவர்களை முற்றிலும் வெறுத்தார்கள். இத்தகைய சூழ்நிலையில் இயேசு வரிதண்டுபவர்களுள் ஒருவரான மத்தேயுவைத் தன் பணிக்கென அழைக்கின்றார். மட்டுமல்லாமல், அவர் மத்தேயுவின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலந்துகொள்கின்றார்கள்.

அப்பொழுதுதான் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து இயேசு உண்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. இவ்வுலகில் கடவுளைத் தவிர நல்லவர் யாரும் கிடையாது (மத் 19: 17). அப்படியெனில் எல்லாரும் பாவிகளே. இந்த உண்மை பரிசேயர்களுக்குத் தெரியவில்லை. அதனால் அவர்கள் தங்களை நல்லவர் என்றும், வரிதண்டுபவர்களைப் பாவிகள் என்றும் நினைத்து, வரிதண்டுபவர்கள்மீது இரக்கம் காட்டாமல் இருந்தார்கள்; ஆனால் இயேசு பரிசேயர்களைப் போன்று இல்லாமல், வரிதண்டுபவர்கள்மேல் இரக்கம் கொண்டு, இரக்கத்தையே விரும்புகின்றேன் என்கிறார். ஆதலால், நாமும் இயேசுவைப் போன்று இரக்கத்தோடு வாழ்வோம்.

சிந்தனைக்கு:

 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கின்றார் (லூக் 19: 10).

 நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன் (யோவா 15: 16).

 நாம் இயேசுவைப் போன்று எல்லாரிடமும் இரக்கத்தோடு வாழ்வோம்.

இறைவாக்கு:

‘இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர் (மத் 5: 7) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவைப் போன்று இரக்கத்தோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.