#வாசக மறையுரை (ஜூன் 24)
பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் வியாழக்கிழமை
I தொடக்க நூல் 16: 1-12, 15-16
II மத்தேயு 7: 21-29
சொல்லில் சிறந்த சொல், செயல்
செயல்வீரரான அருள்பணியாளர் பீட்டர்:
பிரான்ஸ் நாட்டில், பீட்டர் என்றோர் அருள்பணியாளர் இருந்தார். இவர் ஆன்மிகப் பணியோடு சமூகப் பணியையும் ஒருசேரச் சேர்த்துச் செய்ததால், ‘பிரான்சின் புகழ்பெற்ற மனிதர்’ என்றொரு விருதினைப் பெற்றார். இத்தையதொரு விருதினைப் பெறுமளவுக்கு இவர் அப்படி என்ன சமூகப்பணியினை ஆற்றினார் என்ற கேள்வி நமக்கு எழலாம்.
அருள்பணியாளர் பீட்டர் தெருவோரங்களில் குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த சிறுவர்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கு நல்ல கல்வியும் மறுவாழ்வும் தந்தார். அதனாலேயே இவருக்கு, பிரான்சின் புகழ்பெற்ற மனிதர் என்ற பட்டமானது கொடுப்பட்டது. இவர் இப்பணியைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கையில் ஒருநாள் இவருக்கொரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை இவர் பிரித்துப் பார்த்தபொழுது, அதில், “நாங்கள் எதற்காக வாழ்கின்றோம் என்றே தெரியவில்லை. அதனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம்” என்று சில இளைஞர்கள் எழுதியிருந்தார்கள். உடனே இவர் அவர்களுக்கு ஒரு பதில் கடிதம் எழுதி, தன்னிடம் வரச்சொன்னார்.
தன்னிடம் வந்த இளைஞர்களிடம் இவர் அறிவுரை எதுவும் சொல்லவில்லை. மாறாக, அவர்களைத் தான் பணிசெய்த இடங்களுக்கெல்லாம் அழைத்துக்கொண்டு போனார். தெருவோரங்களில் குப்பை பொறுக்கும் சிறுவர்களைத் தேடிச் செல்வதும், அவர்களைத் தான் இருந்த இடத்திற்கு அழைத்து வந்து, அவர்களுக்குக் கல்வி புகட்டுவதுமாய் இவர் ஆற்றி வந்த பணிகளைப் பார்த்து அவர்களும் இவரோடு ஒன்றிணைந்து பணியாற்றினார்கள். இதனால் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு அடியோடி மறைந்தது.
ஆம், இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளர் பீட்டர், தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்த இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கவில்லை. மாறாகத் தன் வாழ்க்கையாலேயே அவர்களுக்கு நன்னெறிகளைப் போதித்து, அவர்களை அர்த்தமுள்ள வாழ்வு வாழ வழிவகுத்தார். நற்செய்தியில் இயேசு, சொல்பவரல்ல செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர் என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைய நற்செய்தி வாசகமானது, இயேசுவினுடைய மலைப்பொழிவின் இறுதிப் பகுதியாகும். இப்பகுதியில் இயேசு, மக்கள் தாங்கள் அதுவரைக் கேட்ட போதனைகளிலிருந்து வாழ்விற்கு ஒரு நல்ல முடிவினை எடுக்க அறிவுறுத்துகின்றார். அதற்காக அவர் இரண்டு வழிமுறைகளை முன்வைக்கின்றார். ஒன்று, சொல்லுதல். இரண்டு. சொல்லோடு நின்றுவிடாமல், நம்பிக்கையைச் செயலில் வெளிப்படுத்துதல்.
சொல்லோடு நின்றுவிடுபவர்களை விண்ணரசுக்குள் செல்ல முடியாது என்றும், செயலில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்களை விண்ணரசுக்குள் செல்வர் என்றும் சொல்லும் இயேசு, தொடர்ந்து அவர்களிடம் யாரெல்லாம் சொல்லோடு நின்றுவிடுகின்றார்களோ, அவர்கள் மணல்மீது வீட்டைக் கட்டிய அறிவிலிக்கும், செயலில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்களை ஆண்டவரில் தங்கள் நம்பிக்கையை வைத்து வீட்டைக் கட்டியவர்களுக்கு ஒப்பாவர் என்றும் குறிப்பிடுகின்றார். இங்கு வீடு என்பதை நமது வாழ்க்கையோடும், வெள்ளத்தை இறுதித் தீர்ப்போடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆம், ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிந்து வாழ்பவர் இறுதித் தீர்ப்பின்பொழுது உறுதியாய் இருந்து, அவரது ஆசியைப் பெறுவர். ஆதலால், நாம் நம்முடைய நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து, ஆண்டவரின் ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
உயிரில்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே! (யாக் 2: 26)
நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3: 18)
நாம் சொல்வீரர்களா அல்லது செயல்வீரர்களா? சிந்திப்போம்.
ஆன்றோர் வாக்கு:
‘சொல்லில் சிறந்த சொல், செயல்’ என்பார்கள் ஆன்றோர் பெருமக்கள். ஆதலால், நாம் விண்ணுலகில் இருக்கின்ற தந்தையின் திருவுளத்தின்படி செயல்பட்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.