இறைவனைத் தேடுவதில் சோர்வடையா விசுவாசத்தின் அருள்
இறைவனைத் தேடுவதில் எப்போதும் சோர்வடையாத விசுவாசத்தின் அருளை நாடுவோம், ஏனெனில், இறைவன் எப்போதும் நம் அருகே காத்திருக்கிறார் என, ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கிய நண்பகல் மூவேளை செபஉரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு, புயலை அடக்கிய புதுமை குறித்துப் பேசும் ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி தன் நண்பகல் மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும், பலவேளைகளில், நம் துன்ப துயர்களால் கலக்கமடைந்து, இறைவனை நோக்கி குரலெழுப்புவதோடு, அவர் ஏன் மௌனம் காக்கிறார் என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம் எனக் கூறினார்.
நம் துன்பவேளைகளில் இறைவன் நம் அருகே இல்லை என்பது போன்று நமக்குத் தோன்றினாலும், நடப்பவை அனைத்திலும் அவரும் உடனிருக்கிறார், அதில் அவரும் பங்குபெறுகிறார் என்ற உண்மையை மறந்துவிடும் ஆபத்து குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நாம் துன்பம் அடையும்போது, இறைவனை நோக்கி குரலெழுப்பி, அவரை மையமாக வைத்து, அவருடன் நம் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நடுக்கடலில் அபயக்குரல் எழுப்பும் புலம்பெயர்ந்தோரின் விண்ணப்பத்தை, இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறினார்.
நம் வாழ்வுப்பயணத்தைக் குறித்தும், அதில் சந்திக்கும் புயல், மற்றும் அலைக்கழிக்கும் பேரலைகள் குறித்தும் நாம் ஆழமாக சிந்திப்பது பயன்தரும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவை குறித்து நாம் இறைவனோடு விவாதிப்பதோடு, அவரில் ஆறுதலையும் அடைக்கலத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ள வேண்டும், அதற்காகவே இறைவன் நம்மருகில் காத்திருக்கிறார் என எடுத்துரைத்தார்.
மாலுமிகள், தங்கள் திசையைக் கண்டுகொள்ள, விண்மீன்களைப் பார்ப்பதுபோல், நாமும் நம் வாழ்வில் இறைவனை நோக்கி நம் வாழ்வைத் திருப்பவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, புயலால் அச்சமுற்ற சீடர்கள், எவ்வாறு இயேசுவை நோக்கித் திரும்பினார்களோ, அவ்வாறே, நாமும், கடவுளை நோக்கித் திரும்புகையில், அவர் நமக்கு புதுமைகளை ஆற்றுவார் என உறுதி வழங்கினார்.
இறைவனை தொந்தரவுச் செய்யாமல் நம்மால் தனியாக அனைத்தையும் சமாளிக்கமுடியும் என எண்ணுவது தவறு, ஏனெனில், இறைவேண்டல், எப்போதும், பேராற்றலை, தன்னுள்ளேக் கொண்டுள்ளது என, மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஏன் அஞ்சுகிறீர்கள், உங்களுக்கு விசுவாசம் இல்லையா, என இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வியை இன்று நம்மைப் பார்த்தும் கேட்கிறார் என எடுத்துரைத்து, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.