ஜூன் 22 : நற்செய்தி வாசகம்
பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6, 12-14
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.
ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
பொன்விதி
பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I தொடக்க நூல் 13: 2, 5-18
II மத்தேயு 7: 6, 12-14
பொன்விதி
தன் முதிர்ந்த வயதிலும் பிறருக்கானவற்றை நாடியவர்:
அது ஒரு குளிர் பிரதேசம். அங்கு டாடா மோரி (Tata Muri) என்றோர் முதியவர் இருந்தார். இவருக்கு எழுபத்தைந்து வயது இருக்கும்பொழுது, நடக்க முடியாமல் போய், வீட்டிலேயே முடங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து இவர் வருந்தவில்லை. மாறாகத் தன் வாழ்வின் எஞ்சியுள்ள பகுதியை ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் பயனுள்ள விதமாய்ச் செலவழிக்க முடிவுசெய்தார். அதனால் இவர், தான் இருப்பது குளிர் பிரதேசம் என்பதால் குல்லாக்களைச் செய்து தந்தால், அது எல்லாருக்கும் உதவும் என்று நினைத்துக்கொண்டு, குல்லாக்களைச் செய்யத் தொடங்கினார்.
இப்படி இவர் குல்லாக்களைச் செய்து, அவற்றை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கையில் 2018 ஆம் ஆண்டு, தனது தொண்ணூற்று இரண்டாம் வயதில் இறையடி சேர்ந்தார். இவர் இறக்கையில் எட்டாயிரம் குல்லாக்களைச் செய்து, அவற்றை ஏழைகளுக்கும் அனாதைக் குழந்தைகளுக்கும் வழங்கியிருந்தார். இதையறிந்த மக்கள் இவருக்கு நெஞ்சார நன்றி சொன்னார்கள்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற டாடா மோரி என்ற முதியவர், நடக்க முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கினாலும், அதை ஒரு பெரிய குறையாக எண்ணாமல், பலருக்கும் பயன்படுவதை நாடி, அன்பிற்கு இலக்கணமானார். இன்றைய இறைவார்த்தை, மற்றவர் நமக்கு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அதையே பிறருக்குச் செய்யவேண்டும்… பிறருக்கானவற்றை நாடவேண்டும் என்ற செய்தியை உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் காலத்திற்கு முன்பு வரை, ‘எது உனக்குத் தீங்கு என்று நீ கருதுகின்றாரோ, அதை நீ பிறருக்குச் செய்யாதே’ என்ற கருத்துதான் சொல்லப்பட்டு வந்தது. இது எதிர்மறையான கருத்து. ஆண்டவர் இயேசு இதை அப்படியே மாற்றி, “பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்று நேர்மறையாகச் சொல்கின்றார். அப்படியென்றால் பிறர் நம்மை மதிக்கவேண்டும், அன்பு செய்யவேண்டும், உதவி செய்யவேண்டும் என்று நினைத்தால், நாமும் அவர்களுக்கு அவ்வாறு செய்யவேண்டும். அதுவே சாலச் சிறந்த ஒரு செயலாகும்.
இன்றைய முதல்வாசகத்தில் ஆபிராம் தன் சகோதர் லோத்துவுடன் தான் வாழ்ந்த ஊரை விட்டு, ஆண்டவர் சொன்ன இடத்திற்கு வருகின்றார். அங்கு ஆபிராமின் பணியாளர்களுக்கும், லோத்தின் பணியாளர்களுக்கும் இடையே பூசல் ஏற்படுகின்றபொழுது, ஆபிராம் தன் சகோதரர் லோத்துவோடு சேர்ந்து வாழ்ந்தால் மேலும் பூசல் ஏற்படும் என்று கருதி, எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியை அவர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கின்றார். ஆபிராம் நினைத்திருந்தால் அப்பகுதியைத் தனக்கு எடுத்துக்கொண்டு, வேறொரு பகுதியைத் தன் சகோதரருக்குக் கொடுத்திருக்கலாம; ஆனால் ஆபிராம் அவ்வாறு செய்யாமல் தன் சகோதர் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார். நாமும்கூட ஆபிராமைப் போன்று பிறருக்கானத்தை நாடினால், பொன்விதியின்படி வாழ்பவர்கள் ஆவோம்.
சிந்தனைக்கு:
நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும் (பிலி 2: 4)
இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் (திபா 10: 38).
நாம் தமது தனிப்பட்ட வாழ்வில் தன்னலத்தோடு வாழ்கின்றோமா? அல்லது பிறர் நலத்தோடு வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத்தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5: 16) என்பார் இயேசு. எனவே, நாம் நமது நற்செயல்களால் இறைவனுக்குப் பெருமை சேர்த்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.