இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் செல்வத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தால் இறைவனிடம் இருந்து விலகியே இருப்போம் என்பதை என்றும் நினைவில் கொள்ள இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில்,
“வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!” என இயேசு கூறுகிறார்.
நம்மைப் படைத்த இறைவன் நம்மை எல்லாக் காலத்திலும் காத்தருள்வார் என்று உறுதியுடன் விசுவசிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
தனது கடுமையான துறவற வாழ்வில், தனிமையில் இறைவனோடு உரையாடுவதை வழக்கமாகக் கொண்ட இன்றைய புனிதரான ரோமுவால்ட்டின் கல்லறையில் எண்ணற்ற புதுமைகள் நடந்துள்ளன. அத்தகைய புனிதரை திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தேவையான அளவுக்கு பொது மக்களுக்குக் கிடைத்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
நோய்த்தொற்றின் தீவிரத்தால் மரணித்த அனைவருக்காகவும் பிராத்திப்போம். அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.