ஜூன் 19. : நற்செய்தி வாசகம்

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34.
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?
உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்ய மாட்டாரா?
ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————-
‘என் வலுவின்மையே எனக்குப் பெருமை’
பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் சனிக்கிழமை
I 2 கொரிந்தியர் 12: 1-10
II மத்தேயு 6: 24-34
‘என் வலுவின்மையே எனக்குப் பெருமை’
தன் பலவீனத்தை உணர்ந்தவராலேயே வெற்றியைக் குவிக்க முடியும்:
ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர், தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று செய்தித்தாளில் அறிவிப்புக் கொடுத்திருந்தார். இந்த அறிவிப்பைப் பார்த்துவிட்டுப் பலரும் வேலைக்கு விண்ணப்பித்தார்கள். டேவிட், ஜான் என்ற நண்பர்கள் இருவர் அவ்வேலைக்கு விண்ணப்பித்தார்கள். அவ்வாறு அவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும்பொழுது, டேவிட் தன்னுடைய சிறப்புத் தகுதிகளை மட்டும் ‘தன் விவரக் குறிப்பில்’ (Biodata) குறிப்பிட்டான். ஜானோ சற்று வித்தியாசமாக, தன்னுடைய தகுதிகளை மட்டுமல்லாமல், பலவீனங்களையும் தன் விவரக் குறிப்பில் எழுதி அனுப்பி வைத்தான்.
நிறுவனத்தின் தலைவர் இருவருடைய தன் விவரக் குறிப்புகளையும் பார்த்துவிட்டு, தன்னுடைய தகுதிகளை மட்டுமல்லாது, பலவீனங்களையும் சேர்த்து எழுதியிருந்த ஜானை வேலைக்குத் தேர்ந்தெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், இவ்வுலகில் தன்னுடைய பலன்களை மட்டுமல்ல, பலவீனங்களையும் உணர்ந்தவர்களால் மட்டும் நிறைய வெற்றிகளைக் குவிக்க முடியும்.
ஆம், எவர் ஒருவர் தன்னுடைய பலத்தோடு பலவீனத்தையும் உணர்ந்திருக்கின்றாரோ, அவராலேயே நிறைய வெற்றிகளைக் குவிக்க முடியும். இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல், “என் வலுவின்மையே எனக்குப் பெருமை” என்கிறார். புனித பவுல் சொல்லும் இவ்வார்த்தைகளின் மூலம் நாம் என்ன செய்தியைக் கற்றுக் கொள்ளலாம் என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் ஆண்டவர் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்ட பவுல், பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப் பணிக்கப்பட்டார். இவ்வாறு அவர் பிற இனத்தார் நடுவில் பணியாற்றியபொழுது சந்தித்த துன்பங்களும் சவால்களும் பிரச்சனைகளும் ஏராளம். இதைப் பற்றி நாம் நேற்றைய முதல்வாசகத்தில் படித்திருப்போம் (2 கொரி 11: 23-28). இன்றைய முதல் வாசகத்தில் அவர், பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக்கொண்டே இருக்கின்றது” என்கிறார்.
‘பெருங்குறை’ என்று பவுல் சொல்வதை, அவர் எதிர்கொண்ட போலி இறைவாக்கினர்கள், பார்வை குறைவு இன்னும் பலவாக இருக்கலாம் என்று திருவிவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். இதை அவர் ஆண்டவரிடம் நீக்கவேண்டும் என்று சொன்னபொழுது ஆண்டவர் அவரிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை வெளிப்படும்” என்கிறார். எனவேதான் பவுல், என் வலுவின்மையே எனக்குப் பெருமை என்கிறார். ஆதலால், நாம் குறைபாடோடு இருக்கின்றோம் என்பதை நினைத்து வருந்தாமல், ஆண்டவர் தன் அருளால் நம் குறைகளையெல்லாம் நிறைவாக்குவார் என்ற நம்பிக்கையோடு புனித பவுலைப் போன்று ஆண்டவரில் நம்பிக்கை வைத்துப் பணிசெய்வோம்.
சிந்தனைக்கு:
 பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும் (2 கொரி 10: 17)
 தன்னை உணர்ந்தோர் தரணியை ஆள்வர்
 நாம் நமது தகுதிகளை மட்டுமல்லாது, பலவீனங்களையும் உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4: 13) என்பார் புனித பவுல். எனவே, நம்முடைய வலுவின்மையைப் பற்றி வருந்தாமல், ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.