மரியாயின் மாசற்ற திவ்ய இருதயப் பெருவிழா

இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்!
‘உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்” (ஆதி. 3:15).
பாத்திமாவில் மாமரி 1917 ஜூலை மாதம் நடைபெற்ற தனது காட்சியில் தன் தனிப்பட்ட வல்லமையை வெளிப்படுத்தும் விதமாக, நான் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்” என்று கூறிய பின், “…. இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்” என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள். அது வெற்றியின் அறிவிப்பாகத் திகழ்கிறது. வெற்றி என்றால் அங்கே ஏதோ யுத்தமோ, சண்டையோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் தேவதாய்தான் பிரதான பங்கு வகிக்கிறார்கள். அதன் முடிவில் நிகழப்போகும் தன் வெற்றியைத்தான் மாதா அறிவிக்கிறார்கள் என்று நம்மால் நினைக்க முடிகிறதல்லவா?
ஆம்! இங்கே யுத்தம்தான் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. என்ன யுத்தம்? அதுதான் ஆதியிலே பரம பிதாவினால் மூட்டப்பட்ட பகையின் யுத்தம்! ஆதி சர்ப்பமாகிய சாத்தானுக்கும் ஸ்திரீயாகிய மாமரிக்கும் இடையேயான பகையினால் ஏற்பட்ட போர்! சாத்தானின் வித்தாகிய அவனது பரிவாரங்களுக்கும், ஸ்திரீயின் வித்தாகிய சேசுவுக்கும் இடையிலான மோதல்! சண்டை !
உண்மையிலேயே இப்பகை மூட்டப்பட்ட ஆதிகாலம் துவக்கி இன்று நவீன காலம் வரை ஏற்பட்டு வந்த போர் இந்த 21 – ம் நூற்றாண்டில் உச்சத்தை எட்டியிருக்கிறது. மூட்டப்பட்டுள்ள இந்தப் போரின் உக்கிரத்தை இன்று நாம் உலகில் உணரலாம். உலகில் எந்த நாடாவது, நாட்டு மக்களாவது சமாதானமாக இருக்கிறார்களா? எங்கும் பசாசின் ஆதிக்கம் பரவி, ரஷ்யா தன் தப்பறைகளைப் பரப்பும் என்று மாதா எச்சரித்த ஆபத்து நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சத்தியத் திருச்சபையும் தப்பவில்லை என்பது கண்கூடு!
ஆனால் எஞ்சிய மக்களாகிய மாதாவின் பிள்ளைகள் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் “வெற்றி நிச்சயம்” என்ற மாதாவின் வாக்கு அவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறது. அதோடு, “நான் மட்டுமே உதவ முடியும்” என்ற மாமரியின் வல்லமையின் யதார்த்தமும் சேர்ந்து கரை சேரத் தவிக்கும் பயணிகளுக்கு நம்பிக்கையூட்டும் “சமுத்திர நட்சத்திரமாக” மாதா திகழ்வதை அவர்களுடைய பிள்ளைகள் உணர வேண்டும்! இங்கே உலகம் மற்றும் திருச்சபையின் (சங்கச் சபையின்) போக்குகளைக் கண்டு குழம்பத் தேவையில்லை. மூன்றாவது உலக யுத்தம் வந்து விடுமோ , திருச்சபையில் விசுவாச சாத்தியங்கள் நிர்மூலமாக்கப்பட்டு, ஆத்தும் இரட்சணியம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம், பரிதவிப்பு தேவையில்லை. ஏனெனில் இந்த ஆதி சர்ப்பத்தை நசுக்க, வெற்றிகொள்ள, வாக்களிக்கப்பட்ட ஆதியாகம் ஸ்திரீயும் (மாதாவும்), அவர்களது வித்தும் (சேசுக்கிறீஸ்து) அதிக வல்லமையும் வலிமையும் கொண்டுள் ளார்கள். ஆம்! விரைவில் அவர்கள் அதன் தலையை நசுக்குவார்கள் – மாமரி பசாசின் தலையை நசுக்குவார்கள். அவர்களது இரக்கமும், நேசமும் நிறைந்த மாசற்ற இருதயம் வெற்றி பெறும். அன்பின் அரசரும், நீதியின் சூரியனுமான அவர்களது நேச மகனின் அருளாட்சி மீண்டும் ஸ்தாபிக்கப்படும். கடவுளின் நித்தியத் திட்டமும் அவர் விரும்பியபடியே ஸ்தாபிக்கப்படும்.
ஆஹா! என்ன

அருமையான

வெற்றி! என்ன அற்புதமான அதன் கனிகள் – விளைவுகள்!! ஆம்! அவற்றைச் சுவைக்க வேண்டுமானால், பாத்திமாவில் நமதன்னை கேட்டுக்கொண்ட விண்ணப்பங்கள் (நிபந்தனைகள்) நிறைவேற்றப்பட வேண்டும்! “மனிதனின் சம்மதத்தைப் பெறாமல் சிருஷ்டித்த கடவுள், அவனுடைய விருப்பம் (ஒத்துழைப்பு) இல்லாமல் அவனை இரட்சிக்க மாட்டார் ” என்ற அர்ச். அகுஸ்தினாரின் கூற்றினை நினைவில் கொண்டு இந்த நிபந்தனைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். அவை என்ன?

1. முதல் சனி பரிகார பக்தியை அனுசரித்து, மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரம் செய்தல்;
2. ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்துக்குப் பாப்பரசர் அனைத்து ஆயர்களோடு ஐக்கிய அர்ப்பணம் செய்ய வேண்டும். அதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். இந்த முதல் நிபந்தனையான முதல் சனி பரிகார பக்தியை அனுசரித்தலால் கிடைக்கும் விளைவு “ரஷ்ய ஐக்கிய அர்ப்பணம்” என்பதையும், அதன் கனியான ரஷ்ய மனந்திரும்புதலும், “மரியாயின் மாசற்ற இருதய வெற்றியும் ,” அதைத் தொடர்ந்து வரும் உலக சமாதானமும், பாரம்பரியம் திரும்பி வருதலும், ஆன்மாக்களின் இரட்சிப்பும், அர்ச்சிப்பும் ஆகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே, வல்லமையுள்ள தாயின் கரங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் கருவிகளாக, அவர்களது ”அறிவிக்கப்பட்ட” வெற்றியைத் துரிதப்படுத்தும் படைவீரர்களாக நாம் திகழ்வோமாக! அதற்கென்றே நம்மை அர்ப்பணிப்போமாக!
எங்கள் வல்லமையுள்ள இராக்கினியின் மாசற்ற இருதயமே, எங்களின் இரட்சணியமாயிரும்!
மரியாயே வாழ்க!

Comments are closed.