வாசக மறையுரை (ஜூன் 11)
பொதுக்காலம் பத்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
I 2 கொரிந்தியர் 4: 7-15
II மத்தேயு 5: 27-32
“இன்னலுற்றாலும் மனம் உடைந்துபோவதில்லை”
நம்பிக்கையோடு இருந்த பெண்:
ஒரு கிராமத்தில் ஏழைப்பெண் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏழு குழந்தைகள் இருந்தார்கள். அவர் தன் ஏழாவது பிள்ளையைப் பெற்றெடுத்த ஒருசில ஆண்டுகளிலேயே இறந்துபோனார். இதனால் அந்த ஏழாவது பிள்ளையை – மகளை குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்தவள்தான் வளர்ந்தாள். அவளும் திருமணம் முடித்து வெளியூருக்குச் சென்றுவிட்டதால், ஏழாவதாகப் பிறந்த அருள்செல்வியைக் கவனிக்க யாருமே இல்லை. இதனால் அவள் பெரியவர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள்.
அருள்செல்வி வளர்ந்து பெரியவள் ஆனாள். அவளுக்குத் திருமண வயது வந்தபொழுது, அவளை வளர்த்தவர்களே அவளுக்குத் திருமணம் நடத்தி வைத்தார்கள். வேதனை என்னவெனில் அவளை மணமுடித்தவன் திருமணமான ஒரு மாதத்திலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்தான். இதற்காக அருள்செல்வி மனம் உடைந்து போகவில்லை. மாறாக, ‘இனி எல்லாமே ஆண்டவர்தான்’ என்று முடிவுசெய்து கொண்டு, ஆண்டவருடைய நற்செய்தியை மிகவும் மகிழ்ச்சியோடு மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினாள்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற அருள்செல்வி தன்னுடைய வாழ்வில் தொடர் இழப்புகளையும் துன்பங்களையும் சந்தித்தபொழுதும், ஆண்டவரில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததால், மனம் உடைந்து போகாமல், ஆண்டவருடைய நற்செய்தியை மகிழ்ச்சியோடு அறிவித்தாள். இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் புனித பவுல், “நாங்கள் எல்லாச் சூழ்நிலையிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவித்த பவுல், அதைப் பல்வேறு போராட்டங்கள், சவால்களுக்கு நடுவிலேதான் செய்து வந்தார். பவுல் நற்செய்திப் பணியைச் செய்துவந்தபொழுது சந்தித்த துன்பங்கள் ஏராளம் (2 கொரி 11: 23-28). அவற்றையெல்லாம் கண்டு, அவர் மனம் உடைந்து போகவில்லை; நம்பிக்கை இழக்கவில்லை. அதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் அவர், “நாங்கள் எல்லாச் சூழ்நிலையிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போகவில்லை” என்கிறார்.
பவுல் இவ்வளவு நம்பிக்கையோடு பேசுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, கடவுளின் இரக்கத்தால்தான் எல்லாப் பணிகளையும் தான் செய்கிறேன் என்பதை உணர்ந்தது (2 கொரி 4: 1). இரண்டு, வாழ்வது தானல்ல, கிறிஸ்துவே தன்னுள் வாழ்கின்றார் என்பதை உணர்ந்தது (கலா 2: 20). எனவே, நாமும் பவுலைப் போன்று கடவுளின் இரக்கத்தால்தான் எல்லாவற்றையும் செய்கின்றோம் என்பதை உணர்ந்து அவர் பணியைச் செய்வோம்.
சிந்தனைக்கு:
உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள் (யோவா 16: 33)
இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24: 13).
கரையில் உள்ள கப்பல் பாதுகாப்பாய் இருக்கும்; ஆனால், கப்பல் அதற்காக உருவாக்கப்படவில்லை
இறைவாக்கு
‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4: 13) என்பார் புனித பவுல். எனவே, நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவர் பணியைச் சிறப்பாகச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.