ஜூன் 9 : நற்செய்தி வாசகம்
அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
“கடைப்பிடித்துக் கற்பிப்போம்”
பொதுக்காலம் பத்தாம் வாரம் புதன்கிழமை
I 2 கொரிந்தியர் 3: 4-11
II மத்தேயு 5: 17-19
“கடைப்பிடித்துக் கற்பிப்போம்”
சொன்னதை வாழ்ந்து காட்டிய லெனின்:
இரஷ்யாவில் ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் சந்தித்த துன்பங்கள் ஏராளம். அதற்கு எதிராகப் புரட்சி செய்து இரஷ்யாவில் சோசியலிசத்தைக் கொண்டு வந்தவர் லெனின்.
இவர் புரட்சிப் படைக்குத் தலைவராக இருந்த நேரத்தில் இவரைப் பார்க்க ஒரு சில வீரர்கள் இவருடைய வீட்டிற்கு வந்தார்கள். அப்பொழுது இவர் ஓட்ஸ் தானியத்தாலான கஞ்சியைக் குடித்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து வியந்த அந்த வீரர்கள் இவரிடம், “ஒரு தலைவர் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கலாமா?” என்றார்கள். அதற்கு இவர் அவர்களிடம், என்றைக்கு என் நாட்டு மக்கள் அனைவரும் ரொட்டி உண்கிறார்களோ, அன்றைக்குத்தான் நானும் ரொட்டியை உண்பேன். அதுவரைக்கும் நான் கஞ்சியைத்தான் குடிப்பேன். மேலும் தலைவன் என்பவன் தனக்காகச் சலுகைகளை எதிர்பார்க்கக்கூடாது; மக்களுக்கு என்ன வாழ்வோ அதுதான் தலைவனுக்கும். அத்தகையதொரு வாழ்விற்குத் தன்னை உட்படுத்திக் கொள்பவன்தான் உண்மையான தலைவன்” என்றார்.
ஆம், ஒரு தலைவன் என்பவன் தனக்கென சலுகைகளையும், வாய்ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் மக்களில் ஒருவனாக தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று லெனின் சொன்னதோடு அல்லாமல், அதைக் கடைப்பிடித்து வாழ்ந்தார். அதனாலேயே அவன் மக்கள் தலைவராக அறியப்படுகின்றார். நற்செய்தியில் இயேசு, “நான் சொன்னவற்றைக் கடைப்பிடித்து கற்பிக்கின்றவரே விண்ணரசில் பெரியவர்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
விவிலியப் பின்னணி:
இயேசுவின் மீது பரிசேயர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் வைத்த குற்றச்சாட்டு, அவர் ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்பதாகும். உண்மையில் இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறவில்லை; அதற்கு உண்மையான அர்த்தம் கொடுத்தார். அதனால்தான் அவர் இன்றைய நற்செய்தியில், “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” என்கிறார்.
மட்டுமல்லமல், இக்கட்டளைக் கடைப்பிடித்துக் கற்பிக்கின்றவர் விண்ணரசில் மிகப் பெரியவர் என்கிறார். இறைவார்த்தையைக் கற்பிப்பது அல்லது போதிப்பது சிறப்பான ஒரு பணி; ஆனால், அதைக் கடைப்பிடித்துக் கற்பிக்கும்பொழுது ஒருவர் விண்ணரசில் பெரியவராகின்றார். அதே நேரத்தில் ஒருவர் கடைப்பிடிக்காமல் கற்பித்தால் விண்ணரசில் சிறியவராகின்றார். எனவே, நாம் இறைவார்த்தையைக் கடைப்பிடித்துக் கற்பிக்க முயற்சி செய்வோம்.
சிந்தனைக்கு:
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ 13: 10)
நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.
சொல்வது போல் செயல்படுவது கடினமாக இருந்தாலும், செயலில் நமது நம்பிக்கையை வெளிப்படுத்துவோம்.
இறைவாக்கு:
‘இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்’ (யாக் 1: 22) என்பார் யாக்கோபு. எனவே, நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.