இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 7-ம் தேதி

இயேசுவின் திருஇருதயம் தாழ்ச்சிக்கு ஆசிரியர்.
இயேசுவின் திருஇருதயப் பக்தியானது நமது ஆண்டவருடைய புண்ணியங்களைப் பின்பற்றி நம்முடைய அன்பை அவருக்குக் காண்பிப்பதில் அடங்கியிருக்கிறது. இந்தப் புண்ணியங்களுக்குள்ளே தாழ்ச்சியென்கிற புண்ணியத்தை விசேஷமாய் நமது ஆண்டவர் கற்பிக்கிறார். தீர்ப்பு நாளில் சோதோமுக்கு கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்தேயு 11:24)
ஆண்டவருடைய அளவில்லாத மாட்சிமையையும் நமது ஒன்றுமில்லமையையும் நாம் அவர் பேரில் முற்றும் சார்ந்திருக்கிறோமென்பதையும் அங்கீகரிப்பதே தாழ்ச்சிக்கு அடித்தளம். ஆத்தும, சரீர விஷயங்களில் நாம் எவ்வித நன்மைகளை கொண்டிருந்தாலும், அல்லது நாம் எவ்வளவு சீரும் செல்வமும் உடையவர்களாயிருந்தா லும் அவைகளெல்லாம் நமது ஆண்டவர் நமக்கு தயவாய்க் கொடுக்கும் கொடைகளேயன்றி வேறல்ல. இந்த நற்கொடைகளை எப்படி உபயோகித்தோமென்று நாம் கண்டிப்பாக கணக்குக் கொடுக்கும் படியாயிருக்கும். இவையெல்லாம் ஆண்டவரிடமிருந்து நமக்கு வருகின்றன. எல்லாம் அவருக்கே சொந்தம். நமது பாவங்கள் நமது குற்றங்குறைகள் இவைகள் தான் நம்மிடமிருந்து வருபவை. நமது கண்ணுக்கு முன்னால் எப்போதும் இருக்கவேண்டிய உண்மை இது.
நாம் எவ்வளவு வசதி படைத்தவராயிருந்தாலும் எவ்வளவு நற்குணங்கள் அமைந்தவர்களாயிருந்தாலும் மனிதர்கள் நம்மைப் புகழ்ந்து பாராட்டினாலும் நாம் பெருமைப்படுவதற்குப் பதிலாய், சகல கொடைகளுக்கும் ஊற்றாகிய இறைவனுக்கு எல்லாப் புகழ்ச்சி வணக்கங்களும் உரியவை என்று எண்ண வேண்டும். ஆதலால் மற்றவர்களைவிட இறைவன் நமக்கு அதிகம் கொடுத்திருந்தால் அவருக்கு நன்றியும் வணக்கமும் செய்து, நமது அயலார்மட்டில் மிகுந்த மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும்.
“தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப் பெறுவர் (மத்தேயு 23 : 12).
தாழ்ச்சி எவ்வளவு முக்கியமென்றால் எல்லா புண்ணியங்களுக்கும் அது அடித்தளமாயிருக்கிறது. வேரில்லாத மரம் ஒரு சிறு காற்று அடித்ததும் கீழே விழுகிறது போல், தாழ்ச்சியில்லாமல் மற்றெந்தப் புண்ணியமும் நிலைத்திருக்க மாட்டாது. தாழ்ச்சியானது விண்ணுலகில் நுழைய அவசியம் என்கிறார் புனித கிரகோரியார். ஆங்காரம் மற்றும் சுயநலம் போல் வேறெதுவும் ஆத்துமத்தை நித்திய அழிவுக்கு கொண்டு போகிறது இல்லை என்று புனித கிறிசோஸ்தோம் அருளப்பர் சொல்லுகிறார். தாழ்ச்சியுள்ளவர்களுக்குத் தமது அருட்கொடையை அளிக்கிறார் என்கிறார் புனித யாகப்பர்.
தாழ்ச்சி புனிதர்களுக்கு மட்டும்தான் என்றும் சாதாரண கிறிஸ்தவர்களுக்கு தேவையில்லை என்பதும் தவறு. ஆத்தும் மீட்புக்கு எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தாழ்ச்சி அவசியம் என்பதை மறந்து போகக்கூடாது. தாழ்ச்சியென்கிற புண்ணியந்தான் நமக்கு இரட்சண்யமாகும். இதுதான் நம்முடைய துர்க்குணங்களோடு நாம் எதிர்த்துப் போராடவும், நம்முடைய பாவ அக்கிரமங்களினிமித்தம் நாம் தண்டனைக்கும், நிந்தை அவமானங்களுக்கும் உரியவர்கள் என்பதை ஞாபகப்படுத்தவும் உதவும்.
சேசு தமது வார்த்தையைவிட தமது முன்மாதிரிகையால் தாழ்ச்சியென்கிற புண்ணியத்தைக் காண்பிக்கும் பொருட்டு தமது தேவ மகத்துவத்துக்குச் சரியான புகழுடன் இவ்வுலகில் வந்து தோன்ற சம்மதிக்கவில்லை. பெத்லகேம் ஊரிலுள்ள ஓர் எளிய மாட்டுக் கொட்டிலைத் தெரிந்துகொண்டார்.
திருப்பாடுகளின் போதுதான் சேசுவின் திருஇருதயமானது தாழ்ச்சியென்னும் புண்ணியத்தில் மிகவும் வியக்கத்தக்க முன்மாதிரிகையை நமக்குக் காட்டுகிறது. நிந்தை அவமானங்களால் நிரப்பப்பட்டு, மிக்க கேவலமான சிலுவையின் சாவுக்குத் தீர்வையிடப்பட்ட திவ்விய சேசு இந்த வேதனைகளை எல்லாம் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு மிகுந்த அன்போடு தமது தேவ பிதாவுக்கு அவைகளை ஒப்புக்கொடுத்தார். திவ்விய சேசு நாம் நமது மகிமையைத் தேடுகிறதில்லை என்று உச்சரித்த தமது தெய்வீக வார்த்தையின்படி தமது ஆயுள் காலமெல்லாம் நடந்து வந்தார். நாமும் இப்படிச் சொல்லக்கூடுமா? நம் மாமனிதர்கள் தக்க விதமாய் மதிக்கவில்லையென்று நாம் உணரும் போதும், நம்முடைய வீண் பெருமையை குத்துவதற்கான வார்த்தைகள் நமது காதில் விழும்போதும், நாம் திவ்விய சேசுவின் அன்புக்குரிய ஆச்சரியமான பொறுமையைப் பற்றுகிறோமா?
தாழ்ச்சிக்கு திவ்விய மாதிரிகையான சேசுவை நாம் பின்பற்ற நமக்குத் தைரியமில்லையென்று உணர்ந்தால், நாம் நமது பேரில் கொள்ளும் மோசமான எண்ணங்களை சில செபங்களாக இயேசுவின் திரு இருதயத்துக்கு ஒப்புக் கொடுக்கலாம். கடைசியாய் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் நமது சுயமகிமைக்காகவும் மனித புகழ்ச்சிக்காகவும் உழைக்கிறதற்குப் பதிலாய் மோட்ச மகிமைக்காக உழைப்போமாக.
செயல்.
நீ செய்யும் நன்மைகளால் உனக்கு வரும் பலனை இழந்து போகாதபடி நீ செய்கிற புண்ணியத்தை வேறு நபர் அறியாமல் செய்.
சேசுவின் திருஇருதய நவநாள்.
கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய சேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்…
(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)
சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப்போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திருஇருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச சேசுவின் திருஇருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஒடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவிரென்று நம்பியிருக்கிறேன்.

Comments are closed.