இயற்கையைப் பாதுகாப்பது இக்காலத்தின் அவசரத் தேவை

“சூழலியல் அமைப்பை மீள்நிலைப்படுத்துதல் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பத்து ஆண்டுகள்” என்ற புதியதொரு திட்டத்திற்குச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சூன் 05, இச்சனிக்கிழமையன்று சுற்றுச்சூழல் உலக நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, ஐ.நா. நிறுவனத்தின் அமைப்புகள், இந்த புதிய திட்டத்தை இவ்வெள்ளி மாலையில் ஆரம்பித்துள்ளன.

சுற்றுச்சூழல் ஆர்வலரான, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த புதிய திட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், உலக அளவில் சூழலியல் அமைப்புகள் சீரழிந்துவருவதைத் தடுக்கவும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பராமரிக்கவும், இந்த பத்து ஆண்டுத் திட்டம், அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் நாம் சிறப்பிக்கும் சுற்றுச்சூழல் உலக நாள், உடன்வாழ்கின்ற மனிதர் மீது, நாம் உண்மையான அன்புசெலுத்தவும், நம் சமுதாயம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, ஒரே மனதாக நம்மை அர்ப்பணிக்கவும், சூழலியல் மீது உண்மையான அக்கறை காட்டவும் அழைப்பு விடுக்கின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை (தி.பா.19,1-4) என்ற திருப்பாடல் வரிகளையும் திருத்தந்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

இயற்கையின் பாதுகாவலர்கள்

நாம் அனைவரும் படைப்பின் ஓர் அங்கம், அதிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது என, விவிலியம் நமக்குச் சொல்கின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, வெகு காலமாக நாம் சேதப்படுத்தியும், முறைகேடாகப் பயன்படுத்தியும் வந்துள்ள இயற்கையைப் பாதுகாப்பதற்கும், அதன் பாதுகாவலர்களாகப் பணியாற்றுவதற்கும், எக்காலத்தையும்விட, இக்காலத்தில் அவசரத் தேவை உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

இவ்வாறு நாம் செயல்படவில்லையெனில், அறிவியலாளர்கள் எச்சரித்துவருவதுபோல், வெள்ளம், பசிக்கொடுமை போன்றவை அதிகரித்து, அவை நம் வருங்காலத் தலைமுறைகள் மீது கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்

ஒருவர் ஒருவரையும், பலவீனர்களையும் நாம் பாதுகாக்கவேண்டும், மற்றும், நம் பிள்ளைகளும், வருங்காலத் தலைமுறைகளும் வாழ்வதற்கு ஏற்ற பூமிக்கோளத்தை விட்டுச்செல்லவேண்டியது நம் கடமை என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இயற்கையும், பல்லுயிரினங்களும் அழிந்து வருவதையும், இப்போதைய பெருந்தொற்றால், இலட்சக்கணக்கான மக்கள் இறப்பதையும் நாம் பார்த்து வருகிறோம் என்று கவலையுடன் கூறியுள்ளார்.

நம்பிக்கை ஒளி

எனினும், மனிதாபிமானம் கூடுதலாக அமைகின்ற, மற்றும், கூடுதலாக ஒன்றித்துச் செயல்படுகின்ற ஓர் உலகை நம்மால் உருவாக்குவதற்கும், தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்துவதற்கும், நமக்குச் சுதந்திரம் உள்ளது என்று கூறியுள்ள  திருத்தந்தை, வருகிற நவம்பரில் கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும், காலநிலை மாற்றம் பற்றிய உலக உச்சி மாநாடு (நவ.1-12,2021-COP26) சூழலியல் பாதுகாப்பிற்கு நல்ல தீர்மானங்களை எடுக்கும் என்று, தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மீள்நிலைநிறுத்துதல் என்பது, முதலில் நம்மையே நாம் சீரமைக்கவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுழலியலை சீர்நிலைக்கு மீண்டும் கொணர்வதற்கு, கருணை, படைப்பாற்றல், துணிவு ஆகிய பண்புகளைக் கொண்டிருப்போம், தலைமுறைகளுக்குத் தகுதியான இடத்தை விட்டுச்செல்வோம் என்று, தன் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

UNEP எனப்படும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் Inger Andersen அவர்களுக்கும், FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குனர் Qu Dongyu அவர்களுக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

சூன் 04, இவ்வெள்ளி மாலையில், மெய்நிகர் கூட்டமாக நடைபெற்ற இந்த துவக்க விழா நிகழ்வில், திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், காணொளி வழியாக வாசித்தார்

Comments are closed.