ஜூன் 5. : நற்செய்தி வாசகம்

மற்ற எல்லாரையும் விட இந்த ஏழைக் கைம்பெண் மிகுதியாகப் போட்டார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
அக்காலத்தில்
இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள். தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
“உள்ளதையெல்லாம் கொடுத்த ஏழைக் கைம்பெண்”
பொதுக்காலம் ஒன்பதாம் வாரம் சனிக்கிழமை
I தோபித்து 12: 1, 5-15, 20
II மாற்கு 12: 38-44
“உள்ளதையெல்லாம் கொடுத்த ஏழைக் கைம்பெண்”
கொடுப்பதாகப் போலியான வாக்குறுதிகளை அளித்தல்:
அமெரிக்காவில் ரஸல் ஹெர்மன் (Russell Herman) என்றொரு மனிதர் இருந்தார். தச்சரான இவர் 1994 ஆம் ஆண்டு இறந்தார். இவர் இறக்கும்போது, இவருடைய தலைமாட்டில் உயில் ஒன்று இருந்தது. அதில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது. என்னிடமுள்ள பணத்தில் இரண்டு பில்லியன் டாலரை செயின்ட் லூயிஸ் நகர மக்களுக்குக் கொடுத்துவிடுங்கள்; ஒன்றரை பில்லியன் டாலரை இல்லினோய்ஸ் நகர மக்களுக்குக் கொடுத்துவிடுங்கள். இரண்டரை பில்லியன் டாலரை அமெரிக்காவில் உள்ள காடுகளைப் பராமரிக்கப் படுத்திக் கொள்ளுங்கள்; ஆறு ட்ரில்லியன் டாலரை அரசாங்கத்திடம் கொடுத்துவிடுங்கள், அரசாங்கம் அதைக் கொண்டு நாடுபட்ட கடனையெல்லாம் அடைக்கட்டும்.”
இந்த உயிலைப் படித்துப் பார்த்தவர்கள், ‘இவ்வளவு தாராளமான மனிதராக இருக்கின்றாரே இவர்! உண்மையில் இவர் மிகப்பெரிய வள்ளல்’ என்று முதலில் புகழ்ந்து தள்ளினார்கள். அதன்பிறகு அவர்கள் ‘இவ்வளவு பணமும் எங்கே இருக்கின்றது’ என்று தேடித் பார்த்தபொழுதுதான் தெரிந்தது, இவரிடம் இருந்தது, 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் அலைபேசி மட்டுமே என்பது!
ஒருசிலர் இருந்த நிகழ்வில் வருகின்ற ரஸல் ஹெர்மனைப் போன்று, ‘அதைத் தருகின்றேன்’, ‘இதைத் தருகின்றேன்’ என்று பொய்யான வாக்குறுதியைத் தருவார்கள். உண்மையில் அவர்கள் எதையும் தரமாட்டார்கள்; ஆனால், இன்றைய நற்செய்தியில் வருகின்ற ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருந்ததையெல்லாம், ஆண்டவருக்குக் காணிக்கையாகத் தருவதைக் குறித்து நாம் வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
விவிலியப் பின்னணி:
இயேசுவின் காலத்தில் கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது ஒருபக்கம் கணவரை இழந்து அவர்கள் துன்பப்பட்டார்கள் எனில், இன்னொரு பக்கம் மறைநூல் அறிஞர்கள் போன்றோர் அவர்களை வஞ்சித்து, அவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக் கொண்டார்கள். இத்தகைய பின்னணியில் நற்செய்தியில் வரும் ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருந்த இரண்டு காசுகளைக் காணிக்கையாகச் செலுத்தியதை இயேசு உயர்வாகப் பேசுகின்றார்.
இங்கு வருகின்ற கைம்பெண் ‘வஞ்சகர்கள் சூழ்ந்த சூழலுக்கு’ நடுவிலும் இரண்டு காசுகளைக் காணிக்கையாகச் செலுத்தியதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எருசலேம் திருக்கோயிலில் இருந்த பதின்மூன்று வகையான காணிக்கைப் பெட்டிகளில் பணக்காரர்கள் எல்லாம் அள்ளியள்ளிக் காணிக்கை போட்டார்கள். அதெல்லாம் இயேசுவின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஏனெனில், அவர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தங்களிடமிருந்த மிகுதியானவற்றிலிருந்து காணிக்கை செலுத்தினார்கள். ஏழைக் கைம்பெண் யாருடைய கவனத்தையும் ஈர்க்கக் காணிக்கை செலுத்தவில்லை; தான் செலுத்தும் காணிக்கை ஆண்டவருக்குத் தெரிந்தால் போதும் என்ற மனநிலையோடு தனது பற்றாக்குறையிலிருந்து காணிக்கை செலுத்துகின்றார். இதனால்தான் இயேசு அவரை வெகுவாகப் பாராட்டுகின்றார். ஆகையால், நாம் காணிக்கை செலுத்தும்பொழுது எத்தகைய மனநிலையோடு காணிக்கை செலுத்துகின்றோம் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
சிந்தனைக்கு:
 கொடை வழங்கும்போதெல்லாம் முக மலர்ச்சியோடு கொடு (சீஞா 35: 😎
 எதைக் கொடுக்கின்றோமோ, அதுவே நமக்குரியது.
 உள்ளதிலிருந்து கொடுப்பதல்ல காணிக்கை, உள்ளத்திலிருந்து கொடுப்பதே காணிக்கை
இறைவாக்கு:
‘பெற்றுக் கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை’ (திபா 20: 25) என்பார் இயேசு. எனவே, ஏழைக் கைம்பெண்ணைப் போன்று, மனமுவந்து கடவுளுக்குக் கொடுத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.